காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் வயநாடு தொகுதிக்கு நேற்று (13.11.2024) இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி நிறுத்தப்பட்டுள்ளார். நவ்யா என்ற பெண் வேட்பாளரை களத்தில் இறக்கியுள்ளது, பா.ஜ.க.
அங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் 64.72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வயநாட்டில் கடந்த தேர்தலை விட 8.23 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
வயநாடு மக்களவைத் தேர்தலுடன், கேரளாவில் உள்ள செலக்கரா சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கும் நேற்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அங்கு, ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 81 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் 66.5 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலத்தில் ஜே.எம்.எம். – காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வயநாடு, ஜார்க்கண்ட் தவிர பல்வேறு மாநிலங்களில் உள்ள 31 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
– மு.மாடக்கண்ணு.
#காங்கிரஸ் #ராகுல்காந்தி #கேரளா #வயநாடு #உத்தரப்பிரதேசம் #ரேபரேலி # பிரியங்கா_காந்தி #பாஜக #congress #rahulgandhi #wayanad #kerala #up #rebarely #priyanka_gandhi #bjp #ஜார்க்கண்ட் #ஜார்க்கண்ட்_முக்தி_மோர்ச்சா #ஜேஎம்எம்