3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த ‘நாம் தமிழர்’!

மாநிலக் கட்சி அந்தஸ்தை பெறுகிறது

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அதிமுகவை ஆரம்பித்து, அவர் மறையும் வரை அந்தக் கட்சியே முதலிடத்தில் இருந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்கு மாற்று திமுக – திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற நிலை உருவானது. இன்று வரை அந்த நிலை தொடர்கிறது. மூன்றாவது இடம் தான் மாறிக்கொண்டே இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடத்தில் இருந்தது. நடிகர் விஜயகாந்த், தேமுதிகவை தொடங்கியதும், மூன்றாவது இடத்தை அந்தக் கட்சி பிடித்துக் கொண்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிலை தொடர்ந்தது.

விஜயகாந்தின் உடல்நலப்பாதிப்பும், அந்த சமயத்தில் சீமான் ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதும், தேமுதிகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது.

கட்சியை ஆரம்பித்தது முதல் இன்று வரை தனித்தே, தேர்தல் களங்களை எதிர்கொள்ளும் ‘நாம் தமிழர்’ கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது ‘நாம் தமிழர்‘.

மாநில கட்சி அங்கீகாரம்

தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி 6.58 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. எந்தத் தொகுதியிலும் ஜெயிக்கவில்லை.

இதனால் அக்கட்சியால் மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. எனவே, மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சியின் விவசாய சின்னம் பறிபோனது. ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

‘மைக்’ சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார், சீமான். இதனால், அந்தக் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற 3.90 சதவீத வாக்குகளை விட, இப்போது, இரண்டு மடங்கு வாக்குகளை அதாவது 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ‘நாம் தமிழர் கட்சி’ தோல்வி அடைந்தாலும் 6 தொகுதிகளில் அந்தக் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, திருச்சி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளே அவை.

இரண்டு இடங்களில் அதிமுகவையும், 2 இடங்களில் தமாகாவையும், தலா ஒரு இடத்தில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘நாம் தமிழர்‘ கட்சி.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அந்தக் கட்சியின் வேட்பாளர் எழிலரசி, 1,63,412 வாக்குகள் பெற்றார். தமிழகத்தில் அந்தக் கட்சி அதிக வாக்குகள் பெற்றது, சிவகங்கை தொகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், மக்களவைத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.

வாக்கு சதவீதத்தைப் புள்ளி விவரங்களுடன், தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இந்த அங்கீகாரத்தை பெற வேண்டும். இதற்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர்.

– மு.மாடக்கண்ணு

You might also like