மத்தியில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் முன்னிலை!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை சேர்ந்த 3 தொகுதிகளில் மட்டும் என்டிஏ போட்டியிடவில்லை. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. இதில் சூரத் தொகுதியில் அக்கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதானக் கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.

நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இந்தியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும், கடும் நெருக்குதலுடன் கூடிய வெற்றியையே பெறும் என்பது தெரிகிறது.

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

**********

தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக  கூட்டணி முன்னிலையில் உள்ளது.  திமுக கூட்டணியைச் சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும் பொள்ளாச்சி தொகுதியில்திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியும் முன்னிலையில் உள்ளனர்.

தென்சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும் மத்திய சென்னையில் திமுகவின் தயாநிதி மாறனும் வெற்றி வாய்ப்பை நோக்கி நகர்கின்றனர். திமுக கூட்டணியில் உள்ள விசிகவைச் சேர்ந்த வேட்பாளர்களான  அக்கட்சியின் தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும் துரை.ரவிக்குமார் விழுப்புரத்திலும் முன்னணியில் உள்ளனர்.

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் நிறுத்தப்பட்ட விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார். அங்கு பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.  பிற்பகலுக்குப் பிறகு வெற்றி நிலவரம் முழுமையாகத் தெரியவரும்.

#Parliament_Election #DMK #பாராளுமன்ற_தேர்தல் #திமுக #பாஜக #bjp #LOK_SABHA_ELECTION_counting

You might also like