வாக்கு எண்ணிக்கையில் நவீனம் புகுத்தும் தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் – 4) நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 950 வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன . நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் 44 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், கட்சி அலுவலகங்கள், விஐபிக்கள் இல்லங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், போலீசார் நிறுத்தப்படுவார்கள்.

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் உள்ள இடங்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மேஜைக்கும் தனித்தனியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்யப்படும்.

‘கருத்து கணிப்பு , மோடியின் தயாரிப்பு‘

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டன.

பெரும்பாலான கணிப்புகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

‘இந்தியா’ கூட்டணி 120 முதல் 180 தொகுதிகள் வரை கைப்பற்றும்‘ என கூறின.

இதனை காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

“இந்தக் கணிப்புகள், பிரதமர் மோடியின் கற்பனையில் உதித்த தயாரிப்புகள் – அவை மோடி மீடியாவின் கணிப்புகள் – அவை கருத்து கணிப்புகளே இல்லை – வெறும் கற்பனை” என ராகுல் தெரிவித்தார்.

– மு. மாடக்கண்ணு

You might also like