அருணாச்சலில் பாஜகவும் சிக்கிமில் ஆளும் கட்சியும் வெற்றி!

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜூன் 2) முடிவடைந்ததால், இந்த இரண்டு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றே நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாஜக வெற்றி வாகை சூடியது

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதலமைச்சர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

எஞ்சிய 50 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்தது.

ஆளும் பாஜக 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. காங்கிரஸ் கட்சி19 தொகுதிகளில் போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து, இறுதிகட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது.

தேசிய மக்கள் கட்சி 5 இடங்களில் வென்றது. தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும்,, அருணாச்சல் மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது, காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.

3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். பெமா காண்டு மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்.

அருணாசலப்பிரதேத்தில் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக பாஜக ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம் மாநில முடிவுகள்

சிக்கிம் மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது .

ஆளும்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி, 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு ஒரு இடம் மட்டும் கிடைத்தது.

அந்தக் கட்சியின் தலைவர் பவன் குமார் சாம்லிங், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோற்றுப்போனார்.

தனித்து போட்டியிட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அருணாசலப்பிரதேசத்தில் உள்ள இரு மக்களவைத் தொகுதிகளிலும், சிக்கிமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

– மு.மாடக்கண்ணு

You might also like