மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஏழு கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலம் மே.வங்காளம். அந்த அளவுக்கு அரசியல் கொலைகளுக்கும், வன்முறை மற்றும் தீவிரவாத செயல்களுக்கும் ‘பேர்’ எடுத்த மாநிலம் மே.வங்காளம்.
காங்கிரஸ் ஆட்சியின்போது முளைவிட்ட இந்த ‘கலாச்சாரம்’ கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் கிளைகள் பரப்பி, இப்போது திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியில், ராணுவத்தால் கூட ‘முறிக்க’ முடியாத அளவுக்கு, விழுதுகளோடு விசுவரூபமாக வளர்ந்துள்ளது.
இங்கு ஏற்கனவே 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-வது கட்ட வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
ஏழாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல், அடுத்த மாதம் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
எத்தனை கட்சிகள் ?
மே.வங்காள மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே பிரதான அரசியல் கட்சிகளாக உள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1977-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிதான் இம்மாநிலத்தை அதிக காலம் ஆட்சி செய்துள்ளது.
1977-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள், 2011-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்தனர்.
2011-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 12 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலமைச்சராக இருந்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள்
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 34 தொகுதிகளில் வாகை சூடியது.
சிபிஎம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 2 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், பாஜக விசுவரூப வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பாஜக 18 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டும் வெல்ல, சிபிஎம் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
மும்முனைப் போட்டி
இந்தத் தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பாஜகவும் தனித்து நிற்கிறது.
’இந்தியா ’கூட்டணி ’தனி அணியாக களம் காண்கிறது. இந்த அணியில் சிபிஎம், காங்கிரஸ், ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிபிஐ ஆகியவை உள்ளன.
சிபிஎம் 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகியவை தலா 3 தொகுதிகளிலும், சிபிஐ 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
யாருக்கு வெற்றி
கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் தனித்துக் களம் கண்டதைப் போலவே இந்த முறையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தனித்து நிற்கின்றன.
கடந்த 2 மக்களவைத் தேர்தல்களின்போது தனித்துக் களம் கண்ட காங்கிரஸ், இந்த முறை இடதுசாரி கட்சிகளோடு கைகோர்த்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிஜமான போட்டி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக 10 தொகுதிகளில் வெல்லும் – ‘இந்தியா’ கூட்டணி 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தலில் மம்தா சாதனை படைப்பாரா? என்பது ஜுன் 4-ம் தேதி தெரிந்து விடும்.
– மு.மாடக்கண்ணு.
#காங்கிரஸ் #திரிணாமூல்_காங்கிரஸ் #கம்யூனிஸ்டு #மேற்கு_வங்காளம் #பாஜக #மார்க்சிஸ்ட் #கம்யூனிஸ்ட் #மம்தா_பானர்ஜி #சிபிஎம் #West_Bengal #Lok_Sabha_Election_2024 #congress #thirunamool_congress #communist #west_bengal #bjp #marxist #mamta_banarjee #cpm #மேற்கு_வங்கத்_தேர்தல் #west_bengal_election