நட்சத்திர அந்தஸ்து பெற்ற விருதுநகர்!

மும்முனைப் போட்டியில் தகிக்கிறது!

பட்டாசு தயாரிப்புக்கு பேர் போன விருதுநகரில் வெயில் சுட்டெரிப்பதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் அனல் பறப்பதால், தொகுதி முழுவதும் ‘தக தக’வென தகிக்கிறது.

இந்த தொகுதி, முன்பு சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது, 2009-ம் ஆண்டில், முதன்முதலாக விருதுநகர் மக்களவைத் தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காமராஜர்-எம்.ஜி.ஆர்.தொகுதி

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு நிறைய சிறப்புகள் உண்டு.

இந்தத்தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர், இந்த மாவட்டத்துக்குட்பட்ட சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

(காமராஜர், விருதுநகர் சட்டசபைத் தொகுதியில் 1967-ம் ஆண்டில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்துள்ளார்)

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., முதன்முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.

நான்கு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள ஓரிரு மக்களவைத் தொகுதிகளில் விருதுநகரும் ஒன்று.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர், அருப்புக்கோட்டையில் திமுக, சாத்தூரில் மதிமுக, சிவகாசியில் காங்கிரஸ், திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் அதிமுக வெற்றி பெற்றன.

நிறைவேறாத கோரிக்கைகள்

விருதுநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் பட்டாசுத் தொழிலையும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக வகுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

பாதுகாப்பில்லாத தொழில் என்பதால் தீக்குச்சி உற்பத்தி தொழிலும் சரிந்து வருகிறது.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுக்கின்றன. ஆனால், விருதுநகர் மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், தூர்வாரப்படாமலும், கரைகள் உயர்த்தப்படாமலும் இருக்கின்றன.

இதனை செய்து முடித்தாலேயே, இங்கு, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்கச் செய்து குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு ஈடுகட்ட முடியும்.

ஆனால் இதற்கான திட்டங்களை எந்த அரசும் மேற்கொள்ளவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கம்.

’’நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பாலாறும், தேனாறும் ஓடும்’’ என வாக்குறுதி அளித்த வேட்பாளர்கள், ஜெயித்ததும், அவற்றை மறந்து விடுவதாக சலித்து கொள்கிறார்கள், தொகுதி மக்கள்.

‘ஸ்டார் ‘ வேட்பாளர்கள்

இந்த தொகுதியில், பாஜக சார்பில் நடிகை ராதிகா களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். இதனால், விருதுநகர் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

விஜயகாந்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் இந்த தொகுதிக்குள் வருகிறது. ஆனால் விஜய பிரபாகரன் பிறந்தது, வளர்ந்தது, இருப்பது எல்லாம் சென்னையில் தான்.

அதுபோன்றே, ராதிகாவுக்கும், இந்த தொகுதிக்கும் யாதொரு சம்மந்தமும் கிடையாது.

ராதிகாவின் கணவர் சமுதாயமான நாடார் மக்கள் வாக்குகள் கணிசமாக உள்ளதால், அதனை அறுவடை செய்து விடலாம் என்பது, ராதிகாவின் கணக்கு.

இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அவருக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு உள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். நான்கு முனை போட்டி நிலவினாலும்,, மாணிக்கம் தாகூர், ராதிகா, விஜய பிரபாகரன் ஆகியோருக்கு இடையேதான் நிஜமான போட்டி நிலவுகிறது.

கட்சிகள் செல்வாக்கு எப்படி?

இந்தத் தொகுதியில் கட்சிகள் செல்வாக்கை கணிக்க வேண்டுமானால், 2014 ஆம் ஆண்டு தேர்தலை ஒரு அளவுகோலாக எடுத்து கொள்ளலாம்.

அந்தத் தேர்தலில் நான்கு பிரதான கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டன. தனித்து போட்டியிட்ட அதிமுக, வேட்பாளர், ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 6694 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி ஜெயித்தார்.

மதிமுகவின் வைகோ 2 லட்சத்து 61 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். (அந்தத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன், மதிமுக கூட்டணி அமைத்திருந்தது)

திமுகவின் ரத்தினவேலு 2 லட்சத்து 41 ஆயிரத்து 505 வாக்குகள் வாங்கி மூன்றாம் இடத்துக்கு வந்திருந்தார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெறும் 38 ஆயிரத்து 482 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு 4-வது இடம்தான் கிடைத்தது.

இந்த முடிவுகள் மூலம், விருதுநகரில் அதிமுகவுக்கே கூடுதல் செல்வாக்கு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கடும்போட்டியில் விருதுநகர்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் 4,70,883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட தேமுதிகவின் அழகர்சாமி 3,16,329 ஓட்டுகள் வாங்கி இரண்டாம் இடம் பிடித்தார்.

அமமுகவின் பரமசிவ ஐயப்பன் 1,07,615, மநீம முனியசாமி 57,129, நாம் தமிழர் கட்சியின் அருண்மொழித் தேவன் 53,040 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.

இந்த முறை கமலின் மநீம கட்சி, திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வாங்கிய அமமுக, இந்த முறை பாஜக அணியில் இடம் பெற்றுள்ளது.

விருதுநகர் தொகுதியில் கடும்போட்டி நிலவுவதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

– பி.எம்.எம்.

#எம்ஜிஆர் #காமராஜர் #விருதுநகர் #பாஜக #தேமுதிக #விஜய_பிரபாகரன் #ராதிகா
#mgr #kamarajar #virudhunagar #bjp #dmdk #vijaya_prabhakaran #radhika #காங்கிரஸ் #congress #lok_sabha_election #விருதுநகர்_மக்களவைத்_தொகுதி #மநீம #திமுக #பாஜக #mmk #dmk #virudhunagar_constituency

You might also like