கமல்ஹாசனில் ‘மக்கள் நீதி மய்யம்’ மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அவரது கட்சிக்குத் தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.
மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி தருவதாக கமலுக்கு, திமுக உறுதி வழங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏதுவாக செர்பியாவில் நடக்க இருந்த தனது ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பை அவர் ரத்து செய்துவிட்டார்.
முதன் முறையாக கமல்ஹாசன் ஈரோட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, வீரப்பன் சத்திரம் பகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
’’ஈரோட்டில் நான் பிரச்சாரத்தைத் தொடங்க இரண்டு காரணங்கள் உண்டு. பெரியார் முதல் காரணம். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது நீங்கள் காட்டிய அன்பு இரண்டாவது காரணம்.
“தேர்தலில் போட்டியிடாமல் தியாகம் செய்து விட்டீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். இது தியாகம் அல்ல, வியூகம்.” என கமல்ஹாசன் தனது உரையை தொடங்கினார்.
காமராஜர், எம்ஜிஆர்
காமராஜர், எம்.ஜி.ஆரை தனது பிரச்சாரத்தில் நினைவுகூர்ந்த கமல்ஹாசன், பாஜகவை வறுத்தெடுத்தார்.
’தமிழகத்தின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத் திட்டம் என்பது காமராஜர் தொடங்கியது. எம்ஜிஆர் அதனை தொடர்ந்தார். இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதலமைச்சரால் நிறைவேற்றப்படுகிறது.
இந்த உரிமையை யாரோ மையத்தில் இருந்து கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாட வேண்டுமானால், இங்குள்ள மையத்திற்கு வாருங்கள்.
தமிழகம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால், 29 பைசாதான் திரும்ப வருகிறது. தமிழன் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டான் என்பது பொய்.
வடநாட்டில் கட்டபொம்மன், சிதம்பரம், காமராஜர் என்று யாராவது பெயர் வைத்து இருக்கிறார்களா? எங்கள் ஊருக்கு வந்தால் காந்தி, நேரு, போஸ், படேல் என பலருக்கும் பெயர் வைத்துள்ளோம்.
“நீங்கள் இப்போதுதான் படேலுக்கு சிலை எழுப்பினீர்கள். நாங்கள் எங்கள் இதயத்தில் எப்போதே படேலுக்கு சிலை எழுப்பி விட்டோம்” என கமல் சொன்னபோது, பலத்த கரகோஷம்.
’’இதற்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி, நம்மை சுரண்டிவிட்டுச் சென்று விட்டனர். இப்போது மேற்கு இந்தியாவில் இருந்து ஒரு கம்பெனி வந்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை அடக்க ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டு வீசுகின்றனர். இந்தி மொழியைத் திணிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் எதிராக பாஜக செயல்படுவதால், அந்தக் கட்சியை மத்தியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்.
சாப்பாடு போட்டு பிள்ளைகளை வரவழைத்து நாங்கள் கல்வி கற்க வைக்கும்போது, அவர்கள் படித்து முன்னேறி விடுவார்களோ என்று அவர்கள் எழுத முடியாத பரீட்சைகளைத் திணிக்கின்றனர்.
வெள்ள நிவாரண உதவியை மறுக்கின்றனர் என்று கர்ஜித்த உலகநாயகன் கமல்ஹாசன், திமுக அரசுக்கு நற்சான்றிதழ் அளிக்கவும் தவறவில்லை.
’’திமுக அரசு ஏழைகளுக்கான அரசு என்பதை நான் உணர்கிறேன். அது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறோம்.
நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும். எங்களின் குரல் நியாயத்திற்காக ஒலித்துக்கொணடே இருக்கும். எந்தக் கட்சி நல்லது செய்தாலும் பாராட்டுவதற்கு எனக்கு தயக்கம் கிடையாது’’ என்று தெரிவித்தார், கமல்ஹாசன்.
கேரள வேட்பாளருக்கு பிரச்சாரம்
கேரள மாநிலம் வடகரா மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.கே.சைலஜா போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமைச்சர்.
சைலஜாவை ஆதரித்து கமல்ஹாசன், காணொலிக் காட்சி மூலம் மலையாள மொழியில் பேசி பிரச்சாரம் செய்தார்,
‘’சைலஜா போன்றவர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்று, நமது குரலை எதிரொலிக்க செய்வது அவசியம்.
கொரோனா பாதிப்பின்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் கே.கே.சைலஜா. மனம் தளராமல் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து மக்களைக் காப்பாற்றினார். தேர்தலில் சைலஜா, வெற்றி பெற வாழ்த்துகிறேன்” எனக் கமல் குறிப்பிட்டார்.
– பி.எம்.எம்.