கொள்கை வேறு, நட்பு வேறு!

காமராஜர் மறைந்தபோது சென்னை டெலிவிஷனில் மொன்மனச் செம்மல் நிகழ்த்திய அஞ்சலி உரை!

“எனது ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே எந்த ஒரு மனிதனும் தனது வாழ்க்கையில் தனி நியதிகளை கடைப்பிடித்து வாழ்ந்திட  வேண்டும்.

அதிலும் ஒரு அரசியல் கட்சியை தலைமை தாங்கி நடத்தி செல்லுகிற நிலைமை உருவானதற்குப்பிறகு அந்தத் தலைமைக்கு சில நியதிகளை வகுத்து அதற்கு மொத்த உருவமாகத் திகழ வேண்டும்.

அதிலும் அகில உலக மேதைகள், படித்தவர்கள் அரசியல்வாதிகள் அதில் இருந்தால் எல்லோரையும் காட்டிலும் தனித்துவம் பெற்றுத் திகழ வேண்டும்.

காமராசர் அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் குறிப்பாக தமிழக அரசியலில் மக்களின் பிரச்சனைகள் எழும்போது அதுபற்றி ஆலோசனைகளை நோக்கி எல்லோரும் கவனம் செலுத்தும் ஒரு நிலையினை ஆளாக்கித்தந்தவர் ஆவார்.

இதனை மாற்றுக்கட்சிக்காரர்களும் ஒப்புக்கொண்டே  தீர வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமல்ல – இந்திய துணைக்கண்ட அளவில் கூட முடிவெடுக்கும்போது அமரர் காமராசர் அவர்களின் முடிவு என்னவென்று கவனித்திடும் நிலைமையினை அவர் உருவாக்கியிருந்தார்.

கருத்து வேறுபாடுகள் உள்ளவர்களும், காமாராசரின் கருத்தைக்கேட்டு முடிவெடுக்கும் அளவுக்கு அவர் வாழ்ந்தார். தியாகச் செம்மலாக, கடமை செய்யவே இருப்பவராக, தனித்த மனிதாபிமானச் சின்னமாக அவர் புகழோடு விளங்கினார்.

அந்த வழிகாட்டியை தலைமை காட்டிச் சென்றவரை பிரிந்தது  தாங்கொணாத துயரத்தைக் தருகிறது என்றலும் அவர் வாழ்வினை கடைப்பிடிக்க ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.

அவரது மறைவு நம்மையெல்லாம் வேதனைக்கு, துன்பத்துக்கு ஆளாக்குகிறது. துயர்ப்படுத்துகிறது என்பதை விட அவர் கடைப்பிடிக்கும் வழிகளைப் பின்பற்றுவதுதான் நல்லன பயக்கும் என்று கருதுகிறோம்” என புரட்சித்தலைவர் பேசினார்.

– நன்றி: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொகுத்த எம்.ஜி.ஆரின் கட்டுரைகள் – 1 தொகுப்பிலிருந்து.

You might also like