ஆப்பிள் நிறுவனம் நடத்தும் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த ஜூன் 5-ம் தேதி தொடங்கிய நிகழ்வில் புதிய தயாரிப்புகள் குறித்து நிறுவனம் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதில் iOS 17 இயங்குதளம், புதிய ஆப்பிள் AI ஹெட்ஃபோன் போன்ற பல தயாரிப்புக்கள் அடங்கும்.
சந்தையில் தனக்கென தடங்களைப் பதித்து வரும் ஆப்பிள், தனது தற்போதைய அறிவிப்புகள் மூலம் டெக் துறையில் ஒரு பெரிய போட்டியை உருவாக்கி உள்ளது.
அதற்கு முக்கிய காரணம் நிறுவனம் வெளியிட்டுள்ள AR / VR ஹெட்ஃபோன் தான்.
தற்போது, ஆப்பிளின் புதிய தயாரிப்புகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மேக் ஸ்டூடியோ : ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இதுவாகும். புதிய மேக் ஸ்டூடியோ மாடல்களில், திறன்வாய்ந்த சிப்செட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய மேக் ஸ்டூடியோவில் சக்திவாய்ந்த M2 மேக்ஸ், M2 அல்ட்ரா சிப்செட்கள் பொருத்தப்பட்டுள்ளது. சமரசமற்ற திறன் வழங்க இந்த மினி பிசிக்கள் உதவும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
மேக்புக் ஏர் : இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் மெல்லிய 15 இன்ச் மடிக்கணினி மாடல் இது ஆகும். காரணம் அளவில் 11.5mm மெல்லியதாக இருக்கும் புதிய மேக்புக் ஏர் லேப்டாப், இந்த ஆண்டின் வரப்பிரசாதம் என ஆப்பிள் குறிப்பிடுகிறது.
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 18 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இதில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
மேக் ப்ரோ : ஆப்பிள் தனது மேக் ப்ரோ மாடல்களை சக்திவாய்ந்த சிலிகான் ரக பிராசஸர் கொண்டு புதுப்பித்து உள்ளது. இத்துடன் மிகவும் சக்திவாய்ந்த M2 அல்ட்ரா சிப்செட்டை ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.
விஷன்ப்ரோ ஹெட்செட்: ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பு இதுவாகும்.
இதுகுறித்து பல யூகங்கள் இருந்து வந்தது.
இவை அனைத்தையும் உடைத்து, செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கிய தங்களின் முக்கிய தயாரிப்பான விஷன்ப்ரோ ஹெட்செட்டை ஆப்பிள் பயனர்களுக்கு காட்சிப்படுத்தியது.
புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் உங்கள் நண்பன் எனவும், உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உற்ற தோழன் எனவும் புதிய ஹெட்செட் குறித்து ஆப்பிள் விவரித்துள்ளது.
இந்த ஹெட்செட்டில் மேம்பட்ட மூல பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேமராக்கள், ஆடியோ பாட் போன்ற பல சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 2 மணிநேரம் பேட்டரி ஆயுள் நீடிக்கும் என ஆப்பிள் உறுதியளித்துள்ளது.
இதனை வாடிக்கையாளர்கள் டிவி, போன் அல்லது ஆடியோ சிஸ்டம் என எதுவாக நினைத்து வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது.
அடுத்தாண்டு முதல் இதன் விற்பனை அமெரிக்க சந்தையில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் விலை 3,499 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 3 லட்ச ரூபாய் அளவில் இருக்கும். விலைக்கு ஏற்ப தரம் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஆப்பிள் iOS : சில தயாரிப்புகள் மட்டுமில்லாமல், புதிய மென்பொருள்களையும் நிறுவனம் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 பதிப்பில் ஏாளமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு, புதிதாக ஜர்னல் ஆப், ஸ்டாண்ட்-பை, ஆட்டோ கரெக்ட் போன்ற புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோடு பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டணட்-ஐ ஹே சிரி என்று கூறுவதற்கு பதிலாக சிரி என்று மட்டுமே கூறி பயன்படுத்தலாம்.
ஐஒஎஸ் வரிசையில், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் சோனோமா, ஏர்பாட்ஸ் – இல் புதிய அம்சங்கள் மற்றும் ஆப்பிள் டிவி சேவையில் புதிய வசதிகள் போன்றவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.