கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால்…?

ஓர் உதாரணம்

தற்போது தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கோவில்களை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்து அதற்காகத் தனி இயக்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகு பல சிலைகள் கடத்தப்பட்டிருக்கின்றன என்று புகார் சொல்லும் நபர்கள், அதை விசாரித்த அதிகாரியான பொன்.மாணிக்கவேலை எப்படி நடத்தினார்கள்? தகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்களா?

கோவில்கள் தனியார் வசம் இருந்தபோது, கோவில் நிர்வாகம் எதை எல்லாம் பிறருக்குத் தாரை வார்த்திருக்கிறது என்பதற்கு மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் நடந்த சம்பவமே நல்ல உதாரணம்.
அந்தப் பதிவு மீண்டும் காலத்தின் தேவை கருதி உங்கள் பார்வைக்கு:

****

சாமி சிலைகள் மட்டுமல்ல, ஒரு கோவில் மண்டபமே வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட உண்மை தெரியுமா உங்களுக்கு?

ஆச்சர்யமாக இருக்கலாம். இது தமிழகத்தில் அதுவும் கோவில் நகரமாகச் சொல்லப்படுகிற மதுரையில் நடந்திருக்கிறது.

அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குப் பிறகு தான் எல்லா திருவிளையாடல்களும் நடந்தன என்று வாதிடுகிறவர்கள்-கோவில்கள் தனியார் வசம் இருந்தபோது எப்படி இருந்தன என்பதையும் சற்றுக் கவனிக்கலாம்.

வாங்க…பார்க்கலாம்.

மதுரை பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கிறது மதனகோபால சுவாமி திருக்கோவில்.

நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலில் கலையழகு ததும்பும் சிற்பங்கள்; உள்ளே நுழைந்ததும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலதுபுறம் வெற்றிடமாய் கிடக்கிறது.

அதற்கருகில் சமீபகாலத்திய சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
இதேவெட்டவெளியை முன்பு அபூர்வ வனப்பால் நிரப்பியிருந்தது, நுணுக்கமான அழகு மிளிர்ந்த அற்புதமான கல் மண்டபம்.

அந்த அபூர்வம் இப்போது எங்கே போனது?

பிரிட்டிஷாரின் ஆட்சி நடத்த காலம். சிற்பங்களுக்குப் பெயர்போன மதுரை, அந்த காலத்திலேயே டூரிஸ்டுகளை ஈா்க்கிற அம்சத்துடன் திகழ்ந்திருக்கிறது.

பிலடெல்பியா அருங்காட்சியகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போய்விட்டுச் சற்றுத் தூரத்திலிருக்கிற மதனகோபால சுவாமி கோவிலுக்கு வந்த அமெரிக்கப் பெண்மணியான அடிலைன் பெப்பா் கிப்சனுக்கு, அங்கிருந்த கல்மண்டபத்தின் புராதன அழகு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

எப்படியாவது தங்களுடைய நாட்டிற்கு அதைக் கொண்டு போய்விட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்ததும் – அப்போது கோவில் நிர்வாக அதிகாரியாக இருந்த உம்மச்சியிடம் பேசியிருக்கிறார்.

அவர் தயங்கினாலும், அமெரிக்க ஆசையாச்சே! அதிகாரிகளுடன் வந்து சொன்னதும் அவரால் தட்டமுடியவில்லை.
அந்த மண்டபத்தை விற்பதற்குச் சம்மதித்தார்.

அதற்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அவ்வளவுதான்.

கப்பலில் ஒரு மண்டபத்தை கொண்டு போவது என்றால் லேசான விஷயமா? 16-ம் நூற்றாண்டில் உருவான அந்தக் கல்மண்டபத்தைத் தனித்தனியே ஒவ்வொரு தூணாகப் பிரித்தார்கள்.

ஒவ்வொரு தூணுக்கும் ஒரு எண் இடப்பட்டது. வரிசையாகப் பிரித்து தூண்களின் குவியலாகக் கப்பலேறி விட்டது மண்டபம்.

இது நடந்தது 1912-ல்.

அமெரிக்காவில் அந்த எண் வரிசைப்படி தூண்களை இணைத்ததும், அங்கு மறுபடியும் மண்டபம் நிமிர்ந்துவிட்டது. பலரையும் வியக்க வைத்தது அந்தப் புராதனம்.

1919-ல் மண்டபத்தை வாங்கிய பெண்மணியான அடிலைன் பிரான்சுக்குப் போய் காலமானதும், அவருடைய உறவினர்கள் மூலம் பிலடெல்பியாவிலுள்ள மியூசியத்துக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டு – அங்கு இடம் பெயர்ந்தது அந்த மண்டபம்.

பலருடைய வியப்பான பார்வையில் பட்ட அந்த மண்டபத்தின் பின்னணி குறித்து மியூசிய அதிகாரிகளுக்கு ஆர்வம் அதிகமானது.

இதனால் அமெரிக்காவில் உள்ள சிறந்த ஆய்வாளரான நாா்மன் பிரௌன் மதுரைக்கு வந்து, அந்த மண்டபம் அங்கமாக இருந்த மதனகோபால சுவாமி கோவிலின் பின்னணியைப் பற்றிய தகவல்களை சேகரித்து விரிவான ஒரு ஆய்வு நூலும், பிலடெல்பியா மியூசியம் சார்பில் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்று பிலடெல்பியா மியூசியத்திற்கும் செல்லும் தமிழர்களுக்குச் சட்டென்று சொந்த நாட்டு உணர்வை ஒரு கணம் ஏற்படுத்துகிறது அந்த மண்டபம்.

மண்டபம் இருந்த இடம்

அதன் முகப்பில் ‘இந்தியாவில் – மதுரையில் உள்ள கோவிலிலிருந்து’ என்கிற குறிப்பிருக்கிறது.

தொண்ணூறு வருடங்களுக்கு முன்பு கப்பலில் கொண்டு செல்லப்பட்ட மண்டபம் பற்றி தற்போது அதே கோவிலில் இருக்கிற நிா்வாக அதிகாாிகளுக்கு முழு விபரங்களும் தொியவில்லை.

நிதானமாக, பொறுமையுடன் பல உளிகள் உள்வாங்கி தலைதூக்கிய அந்தக் கல் மண்டபம் இருந்த வெளி, அப்படியே காற்றாட இருக்கிறது.

அமொிக்காவிலுள்ள மியூசியத்தை அலங்காித்துக் கொண்டிருக்கிற அந்த மண்டபம் முன்பு விற்பனை செய்யப்பட்டிருப்பது 150 ரூபாய்க்கு.

அபூா்வமாக இருந்தாலும், நம்மிடம் இருக்கிறவரை – தம் முன்னோா்களின் நுணுக்கமான உழைப்புக்கு நாம் தரும் மதிப்பு அவ்வளவுதான்.
*
மணா

You might also like