வரம் தரும் தரப்பாக்கம் மாணிக்க விநாயகர்!

சென்னை குன்றத்தூருக்கு அருகிலுள்ள தரப்பாக்கத்தில் அமைந்துள்ளது வரம் தரும் மாணிக்க விநாயகர் ஆலயம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கோல்டன் பேரடைஸ் என்ற புதிய நகர்ப் பகுதி உருவானபோது, ஊராட்சி நிர்வாகத்தில் உரிய அனுமதி பெற்று உருவான இந்தக் மாணிக்க விநாயகர் இன்று பல்லாயிரம் பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

இந்தக் கோயில் உருவானது பற்றி நெகிழ்ச்சியோடும் பக்தியோடும் கூறுகிறார்கள் அந்தப் பகுதிவாசிகள்.

“இந்தப் பகுதியில் நாங்கள் குடியேறியபோது, ஒவ்வொரு புதிய வீட்டிலும் கிரகப்பிரவேசம் நடந்துகொண்டிருந்தது.

இங்கே இஷ்ட தெய்வத்தை வணங்கி புதிய வீட்டில் குடியேறுவதற்கு ஆலயம் இல்லாமல் இருந்தது.

ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியனின் ஆதரவுடன் கிடைத்த சிறிய இடத்தில் விநாயகர் ஆலயத்தை உருவாக்கினோம்.

பிறகு நகரவாசிகளின் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புடன் சீரும் சிறப்புமாக மாணிக்க விநாயகர் ஆலயத்தை அமைத்தோம்.

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தோம். தங்கம், வைரம், மாணிக்கம் என்ற வரிசையில் விலையுயர்ந்த மாணிக்கத்தை விநாயகருக்கு சூட்டினோம்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆலயத்தின் முதல் ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினோம். ஒவ்வொரு நாளும் வழிபாடும் நேவைத்யமும் நடத்தப்படுகிறது” என்று நம்மிடம் விரிவாகப் பேசினார்கள் மாணிக்க விநாயகர் ஆலயத்தின் நிர்வாகக் குழுவினர்.

சங்கடஹர சதுர்த்தி போன்ற ஆண்டின் முக்கிய விசேஷ நாட்களும் மாணிக்க விநாயகர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.

நெடுநாள் கனவுகளும், மனத்தில் நினைத்த விஷயங்களும் நிறைவேறுவதால், பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புதிய கோயிலைக் கட்டி குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் நிர்வாகக் குழுவினர் செய்து வருகிறார்கள்.

You might also like