மன நிறைவைத் தரும் ஜானகி அம்மாவுடன் பழகிய காலங்கள்!

– கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மூத்த மகள் வடிவாம்பாள் வரதராஜன்
*

தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் குழந்தையாக இருந்தபோதிருந்தே ஜானகி அம்மாவுக்கும், தலைவருக்கும் என்னைத் தெரியும். அன்று முதல் இன்றளவும் இருவரும் என் நினைவுகளில் நிறைந்திருக்கிறார்கள்.

நான் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மாவின் அரவணைப்பில் தான் வளர்ந்தேன். பிறரை மதிக்கும் பண்பை அவர்களிடமிருந்து தான் நாங்கள் கற்றுக் கொண்டோம். எங்களுக்கு மிகுந்த அறிவுரைகள் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள்.

மற்றவர்களை மதிக்கும் மாண்பையும், வீட்டிற்கு வருவோரை ’வணக்கம்’ சொல்லி வரவேற்று யார் வந்தாலும், “சாப்பிட்டீர்களா…?” என்று கேட்டு, அவர்களுக்கு உணவளிக்கும் நல்ல பழக்கத்தையும் நாங்கள் கற்றுக் கொண்டது தலைவரிடமும், ஜானகி அம்மாவிடமும் தான்.

ஜானகி அம்மா முதல்வரின் மனைவியாக இருந்தபோது கூட எந்த இடத்திற்குச் சென்றாலும் மிகவும் அமைதியாக, அவ்வளவு எளிமையாக இருப்பார்.

எப்போதுமே ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியுடன் தான் அவர் இருப்பார். தன்னுடைய இறுதிகாலம் வரையிலும் அப்படித்தான் வாழ்ந்தார் ஜானகி அம்மா.

ஜானகி அம்மாவைப் போன்று தலைவரிடம் யாராலும் நெருக்கம் பாராட்ட முடியாது. தலைவர் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை வெளிப்படுத்தக் கூடியவராக இருந்தார் அவர், எம்.ஜி.ஆரின் மனதறிந்து அவர் எண்ணத்திற்கு தக்கபடி நடந்து கொள்வதில் ஜானகி அம்மாவிற்கு நிகர் கிடையாது.

சென்னை கே.கே.நகரில் நாங்கள் கட்டிய இல்லத்திற்கு ஜானகி ராமச்சந்திரன் இல்லம் என்று பெயர் வைத்தோம். அந்த அளவிற்கு எங்களுக்கு அவர் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கூடுதலாகவே இருந்தது.

எங்களது இல்லத்திற்கு ஜானகி அம்மாவின் பெயர் வைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஜானகி அம்மா தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். அந்தந்த மொழிகளுக்கான உச்சரிப்புடன் மிக அழகாகப் பேசுவார்.

‘மருதநாட்டு இளவரசி’ திரைப்படத்தில் ஜானகி அம்மா வாள் சண்டை போடுவார். அதை அவரிடம் நான், “வாள் சண்டை பிரமாதமாக செய்திருக்கிறீர்கள்” என்று அடிக்கடி கூறுவேன்.

அதற்கு அவர், “நான் இப்போதும் வாள் சண்டை போடத் தயாராக இருக்கிறேன்… யாராவது என்னுடன் போட்டியிட வருகிறீர்களா?” என்று கிண்டலாகச் சொல்வார்.

மிகவும் மென்மையாக பேசும் குணம் கொண்ட ஜானகி அம்மா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். பிறரிடம் பேசும் அவருடைய வார்த்தைகளில் அவ்வளவு மரியாதை நிறைந்திருக்கும்.

இது போன்று அவரிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. ஜானகி அம்மாவுக்கு பெண் குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்.

தான் வளர்த்த எல்லா குழந்தைகளிடமும் மிகுந்த அன்பு காட்டுவார்கள் தலைவரும் ஜானகி அம்மாவும். மற்றவரிடம் மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும், நன்கு படிக்க வேண்டும், அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று சற்றுக் கண்டிப்பு கலந்த அன்புடன் அரவணைத்து வளர்த்தார்கள்.

அவர்கள் சொல்லிக் கொடுத்த அந்த அறிவுரைகள் எங்களுடைய வாழ்க்கையில் பெரிதும் உதவியாக இருக்கின்றன.

ஆடம்பரமே இல்லாத எளிமையான குணத்தை எல்லாக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார் ஜானகி அம்மா.

தலைவர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார் ஜானகி அம்மா. எம்.ஜி.ஆர். மறைந்தபோது அவர் துடித்துப்போய் அழுத காட்சி இன்னும் மனதில் பதிந்திருக்கிறது.

அவர்களுடன் பழகிய நாட்களை எல்லாம் நினைக்கும்போது இன்றும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜானகி அம்மா அவரது வாழ்நாளில் எதிலும் அதீத நாட்டம் கொண்டவராக இருந்ததில்லை. எளிமை ஒன்றையே தன் குறிக்கோளாகக் கடைப்பிடித்து வந்தவர்.

“யாரிடமும் கடிந்து பேசுவதோ, சத்தம் போட்டுப் பேசுவதோ கூடாது, எப்போதும் அமைதியாகப் பேச வேண்டும்” என்பதைக் கற்றுக் கொடுத்தவர்.

அவருடைய அழகிய வதனத்தில் எப்போதுமே புன்னகை நிறைந்திருக்கும்.

இல்லம் தேடி வருவோரை எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் வரவேற்பார்.

அவருக்கு நிறைய நட்பு வட்டாரம் உண்டு. அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் அவர் மகிழ்ச்சியோடு வைத்திருப்பார்.

சத்யா ஸ்டூடியோவில் செயல்பட்டு வரும் மகளிர் கல்லூரிக்கு எம்.ஜி.ஆர் – ஜானகி அவர்களின் பெயர்களை வைத்தது மிகுந்த பெருமைக்குரிய விஷயம்.

அங்கு கல்வி பயின்று வரும் பெண்கள் பட்டப்படிப்பை முடித்து, அவர்களது லட்சியத்தை அடைய ஜானகி அம்மாவின் ஆசி என்றும் அவர்களுக்கு துணையாக இருக்கும்.

அங்கு பயின்று வரும் பெண்களும் ஜானகி அம்மாவின் குணநலன்களோடு திறமைமிக்கவர்களாக வளர வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.

தலைவரின் மறைவிற்கு பிறகு அவர் வாழ்ந்த இடம் அனைவரையும் வெறுமையை உணரச் செய்தது.

தலைவர் எம்.ஜி.ஆர். எப்போதும் மற்றவரின் நலன் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பார். யார் யாருக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டுத் தன்னால் முடிந்த உதவியைச் செய்து கொண்டே இருப்பார்.

தேவையான விஷயங்களை மட்டும் செய்ய வேண்டும் என்று அவர் எப்பொழுதும் அறிவுரை சொல்வார்.

ஜானகி அம்மா குறைந்த நாட்களே தமிழக முதல்வராக இருந்தாலும் கூட, தமிழகத்தின் முதல் பெண் முதல்வராக இருந்ததை நினைக்கும் தருணம் எல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தலைவர் உடல்நிலை சரி இல்லாதபோது ஒரு குழந்தையைக் கவனிப்பதைப் போல அவர் பார்த்துக் கொண்டார். அவரை விட்டுச் சற்றும் விலகாமல் பாதுகாத்தார்.

தலைவர் சிகிச்சை பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தபோது ஜானகி அம்மா எங்களை ஆரத்தி எடுக்கச் சொன்னதும் நாங்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றதும் இன்றும் என் நினைவுகளில் நீங்காமல் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். அவர்களும் ஜானகி அம்மா அவர்களும் தர்மம் செய்தது போல் வேறு யாரும் செய்திருக்க முடியாது. தங்களால் முடிந்த தர்மத்தை தங்களுடைய இறுதிக்காலம் வரை செய்து கொண்டே இருந்தார்கள்.

ஏழை, பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி இருவருமே எல்லோருடன் சரிசமமாகப் பழகும் இயல்பு கொண்டவர்கள்.

தன் இல்லத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஏழ்மை நிலை அறிந்து பேருதவியாக இருந்ததையெல்லாம் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

இதுபோன்று பாகுபாடின்றி ஏழை பாழைகளுக்கு தர்மம் செய்வதில் முதன்மையானவர்களாக, வள்ளல்களாகத் திகழ்ந்தனர் தலைவரும் அம்மாவும்.

எல்லா விஷயங்களிலும் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல்படக் கூடியவர் ஜானகி அம்மா. எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துச் செய்யக்கூடியவர்.

ஆனால் அதை அவர்கள் எப்படி செய்து முடித்தார்கள் என்பது கூட வெளியில் தெரியாது.

எத்தனையோ வி.ஐ.பி,க்கள் வந்தாலும் அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கவனிப்பார்.

மிகுந்த எளிமையுடன் தான் கடைசி வரை வாழ்ந்தார் நாம் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு.

ஜானகி அம்மாவைப் போன்று ஒரு பெண்ணை நம் காலத்தில் சந்திக்கவே முடியாது. அப்படி ஒரு சிங்கப் பெண்ணாக திகழ்ந்தவர் ஜானகி அம்மா.

தலைவரும் ஜானகி அம்மா வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்ததையே நாங்கள் மிகுந்த பெருமைக்குரிய விஷயமாக கருதுகிறோம்.

நான் கலைவாணரின் மகளாகப் பிறந்ததற்கே இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அதேபோல் அன்னை ஜானகியையும் எம்.ஜி.ஆர். அவர்களையும் நான் வாழும் காலத்திலேயே பார்த்ததை விட, எனக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்று வேறு எதையும் சொல்ல முடியாது.

இந்த நிறைவு ஒன்றே போதும் என் வாழ்வு முழுமையாகப் பூரணமடைந்ததைப் போல நான் உணர்கிறேன்.

– ‘அன்னை ஜானகி எம்ஜிஆர் – 100’ நூற்றாண்டு சிறப்பு மலரிலிருந்து ஒரு பகுதி.

You might also like