கடவுளுக்கும் காது கேட்கும்!

திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும்.

ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள் மனதுக்குள் வந்து போகலாம்.

சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தியாகராஜரின் நினைவிடத்தை இப்போது கோவிலாகக் கொண்டாடுகிறார்கள். தியாகராஜரின் சிலையை ஆராதிக்கிறார்கள்.
ஆனால் சட்டென்று வந்துவிடவில்லை இந்த மாற்றங்கள் எல்லாம்!

தியாகராஜரின் குடும்பம் ஆந்திரத்திலிருந்து வந்து முதலில் திருவாரூரில் தான் குடியேறியது. பிறகு தான் திருவையாறு.

அப்படிக் குடியேறிய ராம பிருமத்தின் மகன் தான் தியாகராஜர். ராமர் மீது விசேஷமான ஈடுபாடு. தெலுங்கில் மனமுருகிப் பாடுவார்.

தனது தாய்மொழியான தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றியதாகச் சொல்லப்பட்டாலும் கிடைத்தது சுமார் எழுநூறு கீர்த்தனைகள் தான். அதுவும் அவருடன் இருந்த சீடர்களால் சேகரிக்கப்பட்டவை.

திருவையாறில் தியாகராஜர் வீதிகளில் உஞ்சவிருத்தி செய்தே வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மனதிலிருந்த அன்பை, ராமர் மீது கொண்ட அளவற்ற பக்தியை, எளிய வேண்டுகோள்களை எல்லாம் கீர்த்தனைகள் வழியாகச் சொல்லியிருக்கிறார்.

‘’எனக்குக் கர்வம் தலைக்கேறி நான் தவறான காரியங்களில் ஈடுபடாமல் என்னைக் காப்பாற்று’’-

– இந்தப் பிராத்தனை கூட அவருடைய கீர்த்தனைகளில் கலந்திருக்கிறது.
அவருடைய கீர்த்தனைகள் ஒவ்வொன்றிலும் பல பாவங்கள். சொந்தச் சகோதரர்களிடம் மனஸ்தாபம் வந்துபோது கூடப் பாடியிருக்கிறார். அவருடைய மனைவிக்கு தீராத வயிற்றுவலி வந்துபோதும் ராமரிடம் கெஞ்சிப் பாடியிருக்கிறார். ஆனால் அவருடைய இசைக்காக வாழ்ந்த காலத்திலேயே போற்றவும் பட்டிருக்கிறார்.

எண்பது வயது வரை வாழ்ந்த தியாகராஜர் மறைந்தது 6.1.1847 ல்.
திருவையாறில் உள்ள திருமஞ்சன வீதியில் அவர் வசித்த எளிய வீட்டிலிருந்து சற்றுத்தள்ளிப் போனால் காவிரி ஆறு. அதன் கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

முதலில் அவருடைய வாரிசுகள் மட்டும் அந்த இடத்தில் எளிமையான ஆராதனையை நடத்தியிருக்கிறார்கள்.

சுற்றிலும் புதர் படர்ந்த நிலையில் கிடந்த இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவையாறுக்கு வந்தவர் மைசூரைச் சேர்ந்த நாகரத்தினம்மாள்.

தேவதாசி மரபைச் சேர்ந்த நாகரத்தினம்மாளுக்குத் தாய்மொழி கன்னடமாக இருந்தாலும், மூன்று மொழிகளில் தேர்ச்சி. ‘’தியாக சேவா சக்தி’’ உள்ளிட்ட பல பட்டங்கள் அவரைத் தேடி வந்தன.

ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நடத்தி, மைசூர் சமஸ்தானத்தின் நர்த்தகியாகவும் இருந்த இவர் தியாகராஜரைக் குருவாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். திருவையாறுக்கு வந்து அவருடைய சமாதி பராமரிப்பின்றிக் கிடப்பதைப் பார்த்துக் கண்
கலங்கியிருக்கிறார்.

‘’தியாகராஜரின் ஆன்மா புதைந்த இடத்திற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்‘’ என்று நினைத்தவர் தன்னுடைய நகைகளை, சொத்துக்களை விற்றிருக்கிறார். குருபக்தியுடன் முழுமூச்சாகக் களத்தில் இறங்கினார்.

1925-ல் ஆற்றங்கரையில் இருந்த தியாகராஜரின் நினைவிடத்தைக் கோவிலாக மாற்றிக் குடமுழுக்கு செய்திருக்கிறார். மண்டபம் கட்டி
விரிவுபடுத்தியிருக்கிறார். அங்கேயே தங்கி ஆராதனைக்கான முயற்சிகளைச் செய்திருக்கிறார்.

இவருடைய முயற்சிக்குப் பிறகே தியாகராஜர் ஆராதனை பெரும்விழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது. பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு பாடியிருக்கிறார்கள். இருந்தாலும் முதலில் பெண் கலைஞர்கள் அதில் கலந்து கொண்டு பாடுவதை முதலில் மற்றவர்கள் அனுமதிக்கவில்லை.

வேறு வழியில்லாமல் – பெண் பாடகிகளைக் குழுவாகச் சேர்த்துத் தனியாகப் பாட வைத்திருக்கிறார் நாகரத்தினம்மாள். அதன் பிறகே ஆராதனையில் பெண்கள் பங்கேற்க முடிந்திருக்கிறது.

தனியொரு மனுஷியாக இன்றைக்கு உலகம் எங்கும் வியாபித்திருக்கும் கர்நாடக இசைக்கலைஞர்கள் தங்கள் ‘தாய் வீட்டை’ப்போல மதிப்பளிக்கிற திருவையாறு தியாகய்யருக்குக் கோவிலையும், சிலையையும் எழுப்பினார்

நாகரத்தினம்மாள்.விழாவும் எடுத்தார். இறுதிக்காலத்தை திருவையாறிலேயே கழித்தார்.

தன்னுடைய குருவின் கீர்த்தனைகளைப் பரப்பியே வாழ்ந்த நாகரத்தினம்மாள் 1952 – மே மாதம் 19 ஆம் தேதி மறைந்தார். அவருடைய குருநாதரான தியாகராஜருக்கு முன்னாலேயே சமாதி எழுப்பப்பட்டு அதே மண்ணில் கலந்திருக்கிறார்.
தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம்மாளின் மாபெரும் கொடைக்கு அடையாளமாக இருக்கிறது தியாகய்யர் கோவில்.

திருவையாற்றில் காவிரியின் ஈரம் தொடக்கூடிய தூரத்தில் தியாகராஜருக்கான நினைவிடம் அல்லது கோவில். உள்ளே தியாகராஜர் அமர்ந்த நிலையில் ஒரு சிலை. முன்னால் நீண்ட மண்டபம். சுற்றிலும் அவருடைய தெலுங்குக் கீர்த்தனைக் கல்வெட்டுக்கள்.

திருவாரூரிலும், திருவையாறிலும் தியாகய்யர் வாழ்ந்திருந்தாலும் தன்னைச் சுற்றி வாழ்ந்த பெரும்பான்மையினர் பேசிய மொழியான தமிழில் ஒரு கீர்த்தனை கூடப் பாடவில்லை என்பது வினோதம்.

இருந்தாலும் அவருடைய தெலுங்குக் கீர்த்தனைகள் பலவற்றை தமிழில் மாற்றித் தந்தவர் பாபநாசம் சிவன்.

இப்போதும் ஜனவரி மாதம் தியாகராஜர் மறைந்த தினத்தன்று ஏராளமான இசைக்கலைஞர்கள் திருவையாறு ஆற்றங்கரையில் கூடுகிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளைச் சேர்ந்து பாடுகிறார்கள்.

இது தவிர முன்னணி இசைக்கலைஞர்கள் பலர் தனித்தும் தியாகராஜர் முன்பு பாடும்போது காலங்கடந்தும் தியாகய்யருக்கு முன்னால் அவருடைய கீர்த்தனைகள் எதிரொலிக்கின்றன. அந்த ஆற்றங்கரை இசையால் நிறைகிறது.
ஆனால் சிறு நெருடல்.

இங்கு முன்பு நடந்த ஆராதனை விழாவில் கர்நாடக இசையைத் தமிழில் பாடியிருக்கிறார் முன்னணிப் பாடகாரன தண்டபாணி தேசிகர். அவர் பாடி முடித்ததும் தீட்டுப்பட்டதாகச் சொல்லி நீரால் கழுவி விட்டதெல்லாம் ‘கரும்புள்ளி’யான நிகழ்வு.

அதைப்போலவே மிகக் குறைவான நேரமே இங்கு பாட அனுமதிக்கப்பட்டவரான ஏழிசை மன்னர் என்றழைக்கப்பட்ட தியாகராஜ பாகதவர் பாடியபோது சுற்றியிருந்த மக்கள் மேலும் பாடச் சொல்லத் தொடர்ந்து அவர் பாடியதும் நடந்திருக்கிறது.

இசையில் தங்கள் முகம் தெரிந்தால் ஆராதிக்கிறவர்கள் சாதாரண மக்கள் தான்!
தியாகய்யர் அவருடைய தாய்மொழியில் பாடியிருக்கிறபோது, இங்குள்ள தமிழர்கள் அவர்களுடைய தாய்மொழியில் பாடப் பட வேண்டும் என்பதை விரும்ப மாட்டார்களா என்ன?

– இதையே தன்னுடைய மொழியில் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் மறைந்த மூதறிஞரான ராஜாஜி.

‘’தியாகய்யர் தமிழ்நாட்டிலேயே வளர்ந்து தமிழ் தேசத்தில் புகழ் பெற்றவர் ஏன் தெலுங்கில் பாடினார்? தெலுங்கு நல்லதென்று அவர் பாடவில்லை. தெலுங்கு தாய் பாஷையானதால் அவர் அதில் பாடினார். நாமும் நம் தாய் பாஷையில் பாடினால் தான் நம் ஆத்மாவுக்கும் திருப்தி கிடைக்கும். கடவுளுக்கும் காது கேட்கும்’’
எவ்வளவு ரசனையான, தீர்க்கமான வரிகள் !

மணா – வின் ‘தமிழகத் தடங்கள்’ நூலில் இருந்து இசை சார்ந்த ஒரு தடம்:
திருவையாறு தியாகய்யர் நினைவிடம்.

You might also like