எழுத்தாளர் சோ.தருமன்
திருப்பாவை பற்றி பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சோ. தருமன். அந்தப் பதிவு இதோ…
திருப்பாவை இரண்டாவது பாடலின் முதல் வரியில் ஆண்டாள் கூறுகிறாள்.
“வையத்து வாழ்வீர்காள்!” இந்த உலகில் வாழப் பிறந்தவர்களே என்கிறாள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றானே கனியன் பூங்குன்றன். அதே அர்த்தத்தில். இந்தப் பாடலில் பாவை நோன்பிருப்பவர்கள் எதையெதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்கிறாள்.
அவற்றுள் புதிதாக ஒன்றை புதிய வார்த்தையுடன் சொல்கின்றாள்.
“தீக்குறளைச் சென்றோதோம்”
அதென்ன தீக்குறள். மோசமான வார்த்தைகள், தீஞ்சொற்கள், அடுத்தவர் மனசை புண்படுத்தும் வார்த்தைகளை பேசமாட்டோம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஆனால் அதையெல்லாம்விட சரியான வார்த்தை கோள் சொல்ல மாட்டோம். பொரணி பேசமாட்டோம் என்பதே பொருத்தமான வார்த்தையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பகிருங்கள் நண்பர்களே.
ஆண்டாள் ஒரு சொற்புதையலே வைத்திருக்கிறாள். தோண்டத் தோண்ட குறையாத புதையல். பார்க்கப் போனால் ஆண்டாளின் கவிதைகள் குறிப்பிடும் நேரம் விடிகாலை. பாடு பொருள் என்பது வேறொன்றுமில்லை.
“அடியே. …பொழுது விடிந்துவிட்டது எழுந்து வாருங்கள் கோயிலுக்கு போகவேண்டும்”
அவ்வளவுதான்.
ஆனால் இந்த குறுகிய எல்லைக்குள் இருந்துகொண்டு ஆண்டாள் எத்தனை இயற்கை காட்சிகள் எத்தனை பறவைகள் எத்தனை எத்தனை புதிய புதிய சொற்கள் இந்த உலகையே நம்முன் கொண்டுவந்து நிறுத்துகிறாள்.
அத்தனை ரஸங்களும் துளி ஆபாசமின்றி நம் மனசுக்குள் ரீங்காரமிடுகின்றன. ஆண்டாள் சாதாரண கவியல்ல. மாபெரும் சொற்களஞ்சியத்திற்கு சொந்தக்காரி. சுத்த தமிழ்க்கவி.