குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், கருத்துக்கணிப்பில் கூறியபடியே முடிவுகள் அமைந்துள்ளன.
குஜராத்தில் பா.ஜ.க. இமாலய வெற்றியை ஈட்டியுள்ளது. இமாச்சலில் பாஜகவிடருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.
வரலாற்றுச் சாதனை
குஜராத்தில் மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 156 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி குஜராத்தில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியால் 17 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியவில்லை.
ஆம் ஆத்மி 5 இடங்களில் மட்டும் வென்றாலும் 13 சதவீத வாக்குகளைப் பெற்று, அந்த மாநிலத்தில் வலுவான தளத்தை அமைத்துள்ளது.
இங்கு பா.ஜ.க.வின் வெற்றி, சரித்திர சாதனையாக கருதப்படுகிறது.
குஜராத் சட்டசபை வரலாற்றில் எந்தக் கட்சியும் இவ்வளவு அதிக இடங்களைக் கைப்பற்றியது இல்லை.
காங்கிரஸ் கட்சி 1985 ஆம் ஆண்டு தேர்தலில் 149 தொகுதிகளில் வென்றதே சாதனையாக இருந்தது.
அதனை பா.ஜ.க.முறியடித்து விட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று, 27 ஆண்டுகள் பதவியில் நீடித்தது.
இதுவே இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சியாக இருந்தது.
இப்போது ஏழாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைப்பதன் மூலம், பா.ஜக,.வும் அந்த சாதனையை எட்டியுள்ளது.
காந்தி பிறந்த மண்ணில் பா.ஜ.க. அடைந்துள்ள வெற்றிக்கு முழுக்க முழுக்க, ,அந்த மண்ணின் மற்றொரு மைந்தனான பிரதமர் மோடியின் பிரச்சாரமே காரணம்.
பறிபோனது இமாச்சல்
ஆனால் இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியைப் பறித்துள்ளது காங்கிரஸ்.
அங்கு மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களை கைப்பற்றியுள்ளது.
ஆளுங்கட்சியான பா.ஜ.கவால் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
பா.ஜக. ஏன் தோற்றது?
அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
பாஜகவில் சீட் கிடைக்காத 21 பெரிய தலைவர்கள், சுயேச்சையாக களமிறங்கினர்.
பாஜகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை இவர்கள் பிரித்தனர். இது முதல் காரணம்.
இன்னொரு பிரதான காரணம் அரசு ஊழியர்கள். குஜராத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுவோர் கிட்டத்தட்ட நான்கே கால் லட்சம் பேர் உள்ளனர். (மொத்த வாக்காளர்களில் 10% பேர்)
“நாங்கள் வென்றால், இங்கு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வருவோம்’’ என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர்.
பிரியங்கா
இமாச்சலப்பிரதேச தேர்தலில் உடல்நலக் குறைவு காரணமாக சோனியா பிரச்சாரம் செய்யவில்லை. பாதயாத்திரை செல்லும் ராகுலும் பிரச்சாரத்துக்கு வரவில்லை. ஆனால் பிரியங்கா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவருக்கு தலைநகர் சிம்லாவில் வீடு உள்ளது. பல கூட்டங்களில் பேசினார் பிரியங்கா.
காங்கிரஸ் வெற்றிக்கு அவரது பிரச்சாரமும், வாக்குறுதிகளும் பேருதவியாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் பல மாநிலங்களில் ஆட்சிகளை இழந்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றி, பெரும் ஊக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த மாநிலத்தில் கடந்த 37 ஆண்டுகளாக எந்த ஆளும் கட்சியும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு கிடையாது.
இந்த முறையும் அப்படியே நிகழ்ந்துள்ளது.
-பி.எம்.எம்.