– ஸ்ரீ அரவிந்தர்
ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே – எங்கள்
அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே!
சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்
சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!
மகான் ஸ்ரீ அரவிந்தர் மீது கொண்டிருந்த அன்பால் மகாகவி பாரதியார் எழுதிய பாடல்.
சுதந்திரப் போராட்ட வீரரும், தத்துவ ஞானியும், ஆன்மீக தலைவரும், கவிஞருமான அரவிந்தர், 1872 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கொல்கத்தாவில் கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா தம்பதியருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார்.
தொடக்கக் கல்வியை டார்ஜிலிங்கிலும், தொடர்ந்து லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
தாய்நாடு திரும்பிய பின்னர், தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். பரோடா சமாஸ்தானத்தில் அரசு பணியில் சேர்ந்தார்.
பின்னர் வங்காள தேசிய கல்லூரியில் முதல்வராக பணியைத் தொடர்ந்தார். இந்த நிலையில், கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் ஏற்பட்ட வங்கப் பிரிவினையைக் கண்டு கொதித்தெழுந்த அவர், வங்க பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தார்.
வந்தேமாதரம் என்ற இதழை ஆரம்பித்த பின், சந்திரபாலுடன் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதனால், 1907 மற்றும் 1908 ஆம் ஆண்டுகளில் அரவிந்தர், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்மயோகி என்ற ஆங்கில பத்திரிகை மூலமும், தர்மா என்ற வங்காள மொழி பத்திரிகை மூலமும் சுதந்திர விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார்.
சிறையில் இருந்த நேரங்களில் அரவிந்தர், ஆன்மீக நூல்களைப் படித்து, யோக நெறியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1909 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான அவர், தன்னுடைய முழு கவனத்தையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினார்.
இந்த நிலையில் அரவிந்தர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. 1910-ம் ஆண்டு, ஷாம்சுல் ஆலம் வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காக, அரவிந்தர் கொல்கத்தாவில் உள்ள சந்திரநாகூருக்கு தப்பிச் சென்றார்.
பின்னர் அங்கிருந்து, பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு வந்தார். பல இன்னல்களுக்குப் பிறகு புதுச்சேரி வந்த அவரை, மகாகவி பாரதியாரும் அவரது நண்பர்களும் வரவேற்றனர்.
அரவிந்தர் புதுச்சேரி வந்த பிறகு, ஆங்கில அரசிற்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து, அவர் தன்னை யோகநெறியில் பக்குவப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தினார்.
மகாகவி பாரதியாருடன் நட்பு கொண்டு சாவித்ரி காவியத்தைப் படைத்தார்.
அரவிந்தர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் முயற்சியாலும், புதுச்சேரியில் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது.
தன்னுடைய ஆன்மீகச் சிந்தனைகளை ஆர்யா என்ற ஆன்மீக இதழில் 1914 முதல் 1921 ஆம் ஆண்டு வரை அரவிந்தர் எழுதி வந்தார்.
ஸ்ரீ அரவிந்தர் பக்தர்களுடன் தியானம் மேற்கொண்ட போதெல்லாம் அவரைச் சுற்றி ஒளிவெள்ளத்தைக் கண்டு உடலில் மின்சாரம் பாய்வதைப் போன்று உணர்ந்திருந்தார்கள்.
இறுதி காலத்தின்போது அரவிந்தர், தனிமையை நாடி 24 ஆண்டுகள் மௌனம் பூண்டிருந்தார்.
ஆன்மீகத்தால், உயர்நிலை மனத்தை உருவாக்கும்போது மனித வாழ்வின் இயல்பு மாறிவிடும் என்றும் தெய்வீக நிலை தோன்றும் என்றும் அரவிந்தர் வலியுறுத்தினார்.
1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இறையாற்றலை இப்புவி மீது இயக்கி, மகான் ஸ்ரீ அரவிந்தர் சமாதி நிலை அடைந்தார்.
அவர் மறைந்தும், அவரது உடலில் இருந்து ஒளிவீசியது. அவர் சமாதியான 5 நாட்களுக்குப் பிறகே ஆசிரமத்தில் உள்ள சர்வீஸ் மரத்தடியில் பக்தர்களின் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது அவரது உடலும் வாடவில்லை முகப்பொலிவும் குறையவில்லை.
மகான் ஸ்ரீ அரவிந்தரின் அருளாற்றலைப் பெறுவதற்காக உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள், அரவிந்தர் ஆஸ்ரமத்திற்கு வருகை தந்து அவரது அருளாற்றலைப் பெற்று செல்கின்றனர்.
– ரமேஷ் கருணாகரன்