– தலைமைத் தேர்தல் ஆணையாளர் தகவல்
நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி கடந்த 7-ம் தேதி வரை நடந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.
மராட்டிய மாநிலம் புனேயில் நடந்த வாக்காளர் பதிவு குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தலைமை தேர்தல் ஆணையாளர் ராஜீவ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “நாட்டில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 1.8 கோடி பேர் உள்ளனர்.
சமீபத்தில் இறந்த இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகிக்கு 106 வயது. அவர் இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு தபால் மூலம் வாக்களித்தார். இது தான் கடமை உணர்வு.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தம் நடைபெறுகிறது. நகர்ப்புறங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும்.
வாக்களிப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயக மரபுகள் முற்றிலும் வலுவாக மாறும்” என தெரிவித்தார்.
2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புனேயில் 49.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதனால்தான் அங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.