ஆன்மிக உளவியல் தொடர்-1
மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மூன்று அம்சங்களுக்குள் பயணிக்கிறான். மனம், புத்தி, உடல். இதில் உடல் இயக்கங்கள் சரியாக இருந்தால், அதைப் பற்றிய நினைவின்றி வாழ்க்கை போகிறது.
அப்படியே குறைகள், பிறப்பிலோ, சந்தர்ப்பத்தாலோ உருவாகி இருந்தால், அதனுடன் வாழப் பழகுகிறான்.
ஆனால், அப்படி பழக முடியாத அல்லது அன்றாடம் உறுத்தல்களோடு குறையுடன் வாழ்க்கை என்பது, புத்தி, மனம் ஆகியனவற்றில் குறைபாடுகள் இருந்தால் தவிர்க்க முடியாததாகி விடும்.
இதில் புத்தி என்பது மூளை, அது சார்ந்த செயல்பாடுகள். மனம் என்பது, உள்ளம் அதில் எழும் எண்ணங்கள், அதனால் தீர்மானிக்கப்படும் செயல்பாடுகள்.
உடல், மூளை ஆகியவற்றுக்கு இருப்பது போல, மனம் என்பதற்கு உருவம் ஏதுமில்லை. இதற்கான முக்கியக் காரணம், உடலும் புத்தியும் தங்களுக்கான சக்தியை, இயக்கத்தை, உள்ளுக்குள் இருந்து பெறுகின்றன.
அவற்றின் இயக்கமும் அப்படித்தான். ஆனால் மனம் என்பது வெளி உலகத்தோடு தொடர்புடையது.
உருவம் இருப்பவற்றிற்கு வெளி உலகத் தொடர்பு தேவையில்லை. உருவமில்லாததற்கு வெளி உலகம் தேவைப்படுகிறது. மனதின் செயல்பாடு பலவிதங்களில் வெளிப்படுகிறது.
உளவியல் என்று மிகப் பெரிய விஞ்ஞானமே இதை வைத்து உருவாகியிருக்கிறது. அதன் இன்னொரு முக்கிய வெளிப்பாடு, பரிணாமம் என்று சொன்னால், அதுதான் ஆன்மிகம்.
இது எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல. அதே சமயம் எல்லா மதங்களின் ஆணி வேரும் இதுதான்.
ஆன்மிகம் என்றால் பக்தி அல்ல. ஆன்மிகம் என்றால், தனிப்பட்ட நபரது நம்பிக்கைகள், வாழ்க்கையின் நோக்கக் குறியீடு, முக்கியம் என்று நினைக்கும் மதிப்பீடுகள், உங்களுக்கானவை என நீங்கள் நம்பும் அல்லது நம்ப விரும்பும் நெறியறைகள், சுய கட்டுப்பாடுகள், சுய தீர்மானங்கள் ஆகியனவற்றின் கலவை.
இதோடு எந்த மதமும் சேரலாம், சேராமலும் இருக்கலாம். சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் போன்றவையும், தியானம், யோகம், தவம் போன்றவையும் ஆன்மிகத்தோடு தொடர்பு கொண்டவைதான்.
உருவம் என்பது உடல்தான். அதை எந்த உடையில், அலங்காரத்தில், நிலையில் வெளிப்படுத்துகிறோம் என்பது நம்மைச் சார்ந்ததுதான்.
அதே போலத்தான் ஆன்மிகமும். நாம் ஏற்றுக்கொண்ட பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள் மூலம் வெளிப்படுவதுதான் ஆன்மிகம் என்று சொல்லலாம்.
இதற்கு மிகத் தேவையானது மனம். அதில் உருவாகும் எண்ணங்கள். அதை உருவாக்கும் நமது புரிதல்கள், கேள்விகள், அனுபவங்கள் போன்றவை. இதுவும் உயிரியலைப் போல ஒரு இயல்தான், அதாவது உளவியல். உள்ளத்தின் இயல்.
ஆன்மிகமும் உளவியலும் வேறுபட்டவை, தொடர்பில்லாதவை. ஆனால் பின்னிப் பிணைந்திருப்பவை. கலந்து இயங்குபவை.
எண்ணங்களின் உருவாக்கம், புரிதல், ஏற்றல், விடுதல், என ஆரம்பித்து உணர்ச்சிகளின் குவியல்தான் உளவியல்.
அதற்கான, திசை, பற்றுக்கோடு, லகான், என்று பார்த்தால் ஆன்மிகம் என்று சொல்லலாம்.
ஆன்மிகமும் உளவியலும் பிணைந்திருப்பவை. மனம் என்பதன் இரு வேறு கிளைகள் என்று கூறலாம். அதனால்தான் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆன்மிக வழிகளும் தீர்வாக இருக்கின்றன.
ஆன்மிகத் தேடலுக்கு, உள்ள உறுதி, ஒருமுகத் தனமை, இலட்சிய வேகம் போன்ற உளவியல் அம்சங்களும் தேவைப்படுகின்றன.
பாரதத்தில் போர் தொடங்கும் வேளையில், அர்ச்சுனன் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறான். அந்த பாதிப்புக்குக் காரணங்கள், எது நியாயம், எது நியாயமற்றது என்கிற ஆன்மிகம் சார்ந்த மதிப்பீட்டுக் குழப்பம்தான். இதற்கான கிருஷ்ணரின் பதில்தான் கீதை.
இதில் அர்ச்சுனன் போர் செய்ய வேண்டும் என்பற்கான தர்க்க ரீதியிலான காரணங்களை அடுக்குகிறார் கிருஷ்ணர். அதை அவன் ஏற்பதற்கு,’ எது தர்மம்?’ என்ற ஆன்மிகம் சார்ந்த மதிப்பீட்டை இனம் காட்டுகிறார்.
அதன் மூலம், உளவியல் சார்ந்த தர்க்கக் காரணங்களை இணைப்பது ஆன்மிகம்தான்.
வாழ்க்கை சிக்கலானது என்பதைப் பெயரளவில், பேச்சுக்காக சொல்வதில்லை. உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாத, புரிந்துகொள்ளத் தெரியாத, புரிந்தும் ஏற்க முடியாத, அப்படி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அதோடு வாழப் பழகத் தயாராகும் அல்லது வாழ மறுத்து ஒதுங்கும் அளவுக்கான, பிரச்சினைகள், நிகழ்வுகள், சூழ்நிலைகளைக் கொண்டது வாழ்க்கை.
இது போன்ற பிரச்சினைகள் தோன்றுவது நம் மனதில்தான்.
சிலர், சூழ்நிலை என்றும், மற்றவர் விதி என்றும் கூறலாம். எல்லா விஷயங்களும் மனதில் எண்ணங்களாகத்தான் தோன்றுகின்றன.
இந்த எண்ணங்கள் என்பது நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை பற்றிய நமது புரிதல்களின் வடிவம். எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது அல்லது தெரியாது. இதுவும் ஒரு புரிதல்தான். ‘எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை’ என்பதும் புரிதல்தான்.
நமது குழப்பங்கள், குறைகள், ஆதங்கங்கள், மன வருத்தங்கள் என எதுவாக இருந்தாலும் அவை மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்துகின்றன. கொந்தளிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை உளவியல் ரீதியிலானவை. இதை முதலில் உளவியல் ரீதியாகவே அணுகலாம்.
இதைப் பற்றி ஜே.கே. என அறியப்படும், ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறியிருபது நினைவுகூரத் தக்கது.
“மனம் சஞ்சலப்படுகிறது என்றால் அதைத் தடுக்காதீர்கள். எதனால் அந்த சஞ்சலம் என்பதை, மனதின் போக்கிலேயே சென்று கண்டறியுங்கள்.
சஞ்சலங்கள், தடுமாற்றங்கள் என்பவை முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்ட பின்பு அவை தாமாகவே மறைந்துவிடும். அதன் பிறகு இன்னொரு சஞ்சலம் ஏற்பட்டால் அதன் பின்னால் செல்லுங்கள்.”
கேட்கவே விசித்திரமாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா? உலகின் மிகப் பெரிய தத்துவ அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேகே இதைக் காரணமின்றிச் சொல்லுவாரா?
மனதின் சிக்கல்களைச் சிடுக்கு அவிழ்க்கும் முறைகளைத் தேடுவோம்….
– தனஞ்செயன்