மறக்க முடியாத மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி  எளிமையாக நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. இதையடுத்து 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.

விழாவில் வருகிற 12-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ம் தேதி திக்கு விஜயமும் நடைபெற உள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழா குறித்த விரிவான பதிவு…

மதுரையில் பிறந்து பிழைப்புக்காக வெளியூர்களில், வெளி நாடுகளில் வசிக்கும் எல்லோருக்கும் சித்திரை என்றால், வைகை ஆற்றில் கள்ளழகர் பொதுமக்களின் தலைகள் இடைவெளி இல்லாமல் நிரம்பியிருக்கும் சூழலில் இறங்கும் திருவிழாக் கொண்டாடம் சிறு காட்சியாகவாவது நினைவில் வந்து போகும்.

சர்க்கரைச் சிறு குடங்களில் எரியும் கற்பூர வாசனை வரும். வைகை ஆற்றில் மொட்டையடித்த சந்தனத் தலைகள் நினைவுக்கு வரும். ஆறு முழுக்க கீற்றுக் கொட்டகைகளால் வேயப்பட்ட மண்டகப் படிகள் ஞாபகம் வரும்.

வெயில் சூடு ஏறிய பாதத்தைக் குளிர வைக்க கோணிப்பையில் நீர் பாய்ச்சியபடி போகும் ‘நேர்த்திக்கடன்’வாசிகள் நினைவு அலையடிக்கும். திருத்தேர்கள் அசைந்து வரும் போது வீதிகள் மனிதர்களால் நிரம்பும் அழகு தனி நேர்த்தி.

என்னதான் கள்ளழகர் சாமியானாலும், அவரையும் மனிதருக்கு உரித்தான கோபத்துடன் தங்கை மீனாட்சியின் திருமணம் தான் வருவதற்கு முன்பே நடந்து விட்டதால், கோபத்துடன் ஆற்றில் இறங்கி வெவ்வேறு மண்டகப்படிகளுக்குப் போய் அழகர் கோவிலுக்குப் போய்ச் சேருகிற வரை – மதுரை தனித்திருவிழாக் களை பொங்க இருக்கும்.

அழகரை எதிர்கொண்டழைக்கும் ‘எதிர்சேவை’யும் அமர்க்களமாக நடக்கும்.
எங்கும் சுண்டல், பருத்திப்பால், ஜிகர்தண்டா என்று கலவையான தித்திப்பு கடை பரப்பியிருக்கும். அவரை வழியனுப்பும்போதும் புளியோதரை, வெண் பொங்கல் என்று அமளிதுமளிப்படும்.

பீமனை படமாக வைத்துக் கெட்டியான ‘பீம புஷ்டி அல்வா’க் கடைகள் முளைத்திருக்கும். அழகர் கோவில் சாலையில் உள்ள கிராமங்களில் சேவல், கிடாச் சண்டைகள் தடபுடலாக நடக்கும்.

சித்திரை வெயிலும் மனதில் நிழல் விழும் நாட்கள் அவை. அழகர் ஒவ்வொரு ஆண்டும் எந்த வண்ணத்தில் ஆடை அணிந்து வரப்போகிறார் என்பதை ஒட்டி ஆளுக்காள் ஒரு கதையை அள்ளிக் காதில் தெளிப்பார்கள்.

மதுரையில் அழகர் ராசியோ என்னவோ ‘அழகர் சாமி’ பெயர்களுக்குக் குறைவிருக்காது. சாதி பேதங்களில்லாமல் பல்லாண்டுகளாக நடந்து வந்த திருவிழாவை இரண்டு ஆண்டுகளாகத் தடுத்து நிறுத்தியிருக்கிறது கொரோனா என்கிற கிருமி.

எங்கிருந்தோ வந்து சேரும் கொஞ்சூண்டு வைகை ஆற்று நீரில் இறங்கிற அழகர் சில நாட்களுக்கு முன்பு – சினிமாவுக்குப் போடப்பட்ட மாதிரியான வைகை ஆற்று செட்டுக்குள் வந்திறங்கியிருப்பது மதுரை வாசிகளை வருத்தப்பட வைத்திருக்கும் தான்.

கும்பமேளாவோடு ஒப்பிட்டுப் பலர் பெருமூச்செறிந்து விட்டார்கள். என்ன செய்வது? வித்தியாசமான காட்சியைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது அழகர்சாமி என்ற அழகரும், மதுரை வாசிகளும்!

எல்லாம் கொரோனா மகிமை!

– யூகி

You might also like