காங்கிரசின் பலவீனம் என்ன?

அன்றே சொன்ன கவிஞர் கண்ணதாசன்.

பல கட்சிகளுக்கு எதிரான கடும் விமர்சனத்தை வெவ்வேறு காலகட்டங்களில் முன்வைத்திருக்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மொழிப்போராட்டம் பற்றியும், தி.மு.க பற்றியும் அவர் அன்று எழுதிய தலையங்கம் இது.

அன்றைக்குக் காங்கிரஸூக்கு எதிராக கண்ணதாசன் முன்வைத்த விமர்சனம் இப்போது பல கட்சிகளுக்கும் பொருந்தும்.

கொஞ்சம் கவனமாகப் பல கட்சி சார்ந்தவர்கள் கவிஞரின் வெளிப்படையான விமர்சனத்தைப் படித்துப் பார்க்கலாம்.
*
காங்கிரசும் தமிழ் உணர்ச்சியும்!

“சரியாகவோ தவறாகவோ தமிழ்நாட்டில் மொழி உணர்ச்சி என்பது ஆல்போல் தழைத்து, அருகு போல் வேரோடியிருக்கிறது. அந்த உணர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டுதான் தி.மு.க வந்தது. அதைத் தூண்டிவிட்டுத் தான் அது ஆட்சிக்கு வந்தது.

கல்வியறிவு வளராத காலத்திலேயே மொழி வெறி இங்கு வளர்ந்து விட்டது. இன்றைய நிலையில் அது எவ்வளவு முற்றியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. சாதாரண மக்களிடம் கூடத் ‘தமிழ்… தமிழ்’ என்னும் எண்ணம் வேரூன்றி நிற்கிறது.

தி.மு.க அரசு எடுத்த கலைக் கூடங்களுக்கும், சிலைகளுக்கும் அது ஆட்சியில் இருந்த காலத்தில் மரியாதை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அவற்றுக்கொரு புதிய மரியாதை கிடைத்திருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் தமிழுக்கு விரோதமானதென்றோ, தமிழர்களுக்கு விரோதமானதென்றோ அவதூறு செய்யப்படும் அல்லது குற்றம் சாட்டப் பெறும் எந்தக் கட்சியும் பலம் குன்றிவிடும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

தி.மு.க.வை விடத் தனக்குத் தமிழார்வம் அதிகம் என்பதை ஒவ்வொரு கட்சியும் நிரூபிக்க முயல்கின்றன. ஆனால், தமிழகத்திலுள்ள இந்திய தேசியக் காங்கிரஸ் அது பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை.

அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்பதைவிட, காங்கிரசிலும் பலருக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது என்பது பொருந்தும்.

வள்ளுவர் விழாவையும், பாரதி விழாவையும் அரசாங்கத்திலுள்ள காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை.

தி.மு.க.வின் தலைசிறந்த ஆயுதமாகிய மொழி உணர்ச்சியை நாம் கைப்பற்றினால் ஒழிய, நமக்கு வளர்ச்சியில்லை.

அதைக் கைப்பற்றுவதென்றால் எழுத்தாற்றலும், பேச்சாற்றலும், இலக்கிய அறிவாற்றலும் உள்ளவர்கள் முன்னணியில் நின்று வேலை செய்ய வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக அதுவும் நமது கட்சியில் வாய்ப்பில்லை.

தமிழ், தமிழன் என்கிற அடிப்படையிலே தான் தி.மு.கழகம் திரும்பவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

அதன் புதிய வடிவத்தைக் குறைத்து மதிப்பிடுவதோ, அதை எதிர்த்து ஒழிப்பதோ போதுமென்று எண்ணி விடுவதோ நல்ல பலனைத் தராது. நமது பலவீனமே இன்று எதிரியின் பலமாக இருக்கிறது.

இங்கே தவறுகள் கூட விளம்பரத்தின் மூலம் வெற்றி பெற்றுவிட முடியும். நியாயங்கள் கூட விளம்பரமில்லாமல் தோல்வி அடைந்துவிட முடியும்.

நன்றி: முகநூல் பதிவு

15.03.2022  1 : 30 P.M

You might also like