5 மாநிலத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியீடு!

உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம் உத்திரப்பிரதேசத்தில் கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தலுடன் 5 மாநில தேர்தல்கள் முடிவுக்கு வந்தன.

இந்நிலையில் இந்த 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.

அவற்றில் மற்ற மாநிலங்களை காட்டிலும் நாட்டிலேயே அதிகமான தொகுதிகளை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பே அதிகமாகியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உத்திரப்பிரதேசத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன.

அதேசமயம் விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாபில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி முதல்முதலாக அரியணை ஏறப்போவதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதையொட்டி அந்த கட்சியினர் கொண்டாட்டங்களுக்கு தேவையான லட்டு உள்ளிட்ட இனிப்புகளை தயார்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மணிப்பூரில் எதிர்கட்சிகளை காட்டிலும் பாஜக சற்று ஆதிக்கம் செலுத்தும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கோவாவில் தொங்கு சட்டசபையும், உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி இருக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

எதுவானாலும் நாளை காலை 10 மணி வாக்கில் நிலவரம் தெரிந்துவிடும். 5 மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில அரசுகள் அதிகப்படுத்தியுள்ளன.

You might also like