ஒரு காலத்தில் சென்னை மாநகரம் தி.மு.க.வின் கோட்டையாக விளங்கியதை மறுக்க முடியாது.
கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்கள் எல்லாம் சென்னைக்குள் போட்டியிட்டனர்.
2011-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையைத் தகர்த்தார் ஜெயலலிதா.
அப்போது நடந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை மாநகரில் 2 தொகுதிகள் தவிர அத்தனை இடங்களையும் அ.தி.மு.க. அள்ளியது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலிலும் அ.தி.மு.க வென்றது.
இப்போது வரலாறு திரும்பி உள்ளது.
சென்னை மாநகரம் மீண்டும் தி.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள். தி.மு.க. கூட்டணி 178 வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
200 வார்டுகளில் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க. வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசமும் பிரமிக்க வைப்பதாக உள்ளது.
67-வது வார்டு திமுக வேட்பாளர் தாவூத்பீ 13, 803 ஓட்டுகள் வாங்கி வென்றுள்ளார்.
அந்த வார்டில் அதிமுக பெற்ற வாக்குகள் 2463.
11 ஆயிரத்து 340 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுகவைத் திமுக தோற்கடித்துள்ளது.
இந்த வார்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதிக்குள் அடங்கி உள்ளது.
ஆளும் கட்சியாக இருப்பதால் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெல்லும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது தான் என்றாலும், இந்த பிரமாண்ட வெற்றி எப்படி சாத்தியமாயிற்று?
தலித்துகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் ஒட்டு மொத்தமாக திமுகவுக்கு கிடைத்துள்ளது.
காரணம், சென்னை மாநகராட்சி மேயர் பதவியை தலித் இன பெண்ணுக்கு திமுக அரசு ஒதுக்கியது.
இது – தலித்கள் மத்தியில் திமுகவுக்கு பெரும் மதிப்பை பெற்று தந்தது.
சென்னையில் மெஜாரிட்டியாக உள்ள தலித் மக்கள், உதயசூரியனில் வாக்களித்து ஆளும் கட்சிக்கு விசுவாசத்தைக் காட்டினர்.
(2011 ஆம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் தனி (ரிசர்வ்) வார்டுகளில் திமுகவுக்கு 35% வாக்குகள் கிடைத்தது. இப்போது 62% வாக்குகள் வாங்கியுள்ளது. அதாவது டபுள்)
அடுத்து, சிறுபான்மை மக்கள்.
சிறுபான்மை மக்கள் பெரும்பாலும் திமுகவுக்கு வாக்களித்தே பழக்கப்பட்டவர்கள். சொற்ப வாக்குகள் அதிமுவுக்குச் செல்லும். பாஜக பக்கம் அதிமுக சாய்ந்ததால், அந்த சொற்ப வாக்குகளையும் இழக்க நேர்ந்தது.
மொத்த இஸ்லாமிய மக்களும் திமுகவுக்கு வாக்களித்தனர். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் திமுக அனைத்து வார்டுகளையும் வாரி சுருட்டியது.
திமுகவின் வெற்றிக்கு மற்றொரு பிரதான காரணம் – பெண்கள்.
தேர்தல் அறிக்கையில் சொல்லியவாறு பெண்கள், நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க உடனடி ஆணையிட்டது திமுக அரசு.
மாதம் தோறும் பெண்களுக்கு 1000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என பிரச்சாரத்தில் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
ஆயிரம் ரூபாயும், இலவச பஸ் பயணமும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்த மகளிர் வாக்குகளையும் திமுக பக்கம் கொண்டு போய்ச் சேர்த்தது.
கூட்டணிக் கட்சிகளின் வலிமை, அதிகார மற்றும் பணம் பலம் ஆகியவற்றோடு தலித், முஸ்லிம், பெண்கள் ஆதரவும் கை கொடுத்ததால் சென்னை மாநகராட்சியை திமுக சுலபமாக வளைத்து விட்டது.
– பி.எம்.எம்.
24.02.2022 12 : 30 P.M