– கள நிலவரம் என்ன சொல்கிறது?
உத்தரப்பிரதேசத்தை போன்று பஞ்சாப் சட்டசபைத் தேர்தலிலும் நான்கு முனைப் போட்டியே நிலவுகிறது. பஞ்சாபில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இங்கு மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி இருக்கிறார். மொத்தம் 117 தொகுதிகள்.
கடந்தத் தேர்தல் கண்ணோட்டத்தைப் பார்த்துவிட்டு, அதன் பிறகு அந்த மாநிலத்தில் நேரிட்ட அரசியல் களேபரங்களையும் மேலோட்டமாக அலசி விட்டு, இப்போதைய நடப்புக்கு வரலாம்.
கடந்த தேர்தல்
கடந்த சட்டசபைத் தேர்தலில் மூன்று முனைப் போட்டி நிலவியது.
காங்கிரஸ் – தனி அணி.
பாஜகவும், சிரோமணி அகாலிதளமும் – இன்னொரு அணி.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி – மூன்றாவது அணி.
காங்கிரஸ் 77 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சர் ஆனார். யாரும் எதிர்பாராத விதமாக ஆம் ஆத்மி 20 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
ஒரு காலத்தில் ஆளுங்கட்சியாகவும், பின்னர் எதிர்க்கட்சியாகவும் இருந்த அகாலி தளமும், மத்திய ஆளுங்கட்சியான பாஜகவும் சேர்ந்து கைப்பற்றிய இடங்கள்-18.
ஆம்.
பாஜக – அகாலிதளம் கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
களேபரங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த அரசியல் களேபரங்கள் ஏராளம். முக்கிய இரு நிகழ்வுகளை மட்டும் குறிப்பிடுவோம்.
கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பிறகு, அந்த கட்சியில் நாள் தோறும் கலாட்டாக்கள் அரங்கேறின.
அவருக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும் முட்டல் மோதல் அதிகரித்து கொண்டே இருந்தது.
உச்சக்கட்டமாக, மேலிட நிர்ப்பந்தம் காரணமாக அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
புதிய முதல்வராக சித்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் – சரண்ஜித் சிங் சன்னி முதல்வர் ஆனார். (இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்)
அமரீந்தர் சிங், காங்கிரசை உதறி விட்டு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சி ஆரம்பித்தார்.
பாஜக கூட்டணியிலும் குழப்பத்துக்கு பஞ்சம் இல்லை.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அகாலிதளம் வெளியேறியது. இரு கட்சிகளுக்கும் இடையே 20 ஆண்டுகால பந்தம் உண்டு. ஒரே நாளில் உதறியது அகாலிதளம்.
நடப்பு நிலவரம்
பஞ்சாபில் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.
முதல்வர் வேட்பாளராக இப்போதைய முதல்வர் சரண்சித்தையே காங்கிரஸ் அறிவித்துள்ளது.
117 இடங்களிலும் தனித்து நிற்கும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அகாலிதளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் உடன்பாடு கொண்டுள்ளது. அகாலிதளம் 97 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 20 இடங்களிலும் போட்டியிடுகிறது.
இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அகாலிதளத்தைச் சேர்ந்த சுக்பீர் சிங் பாதல்.
தனிக்கடை விரித்துள்ள அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். பாஜக 68 இடத்திலும், அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 34 இடத்திலும் நிற்கிறது.
இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திண்ட்சா தலைமையிலான அகாலிதளத்துக்கு 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே தான் நேரடிப் போட்டி. அகாலிதளம் கூட்டணி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். பாஜக கூட்டணிக்கு நான்காவது இடம் கிடைக்கும் என்பதே பல்வேறு கருத்துக் கணிப்புகள் சொல்லும் செய்தி.
பஞ்சாபில் வரும் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
– பி.எம்.எம்.
15.02.2022 12 : 30 P.M