நகர்ப்புறத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கின்றன.
தி.மு.க. தரப்பில் கூட்டணிக்கட்சிகள் தங்களுக்குச் சாதகமானதாக நினைக்கும் தொகுதிகளைக் குறி வைத்துக் கேட்கின்றன.
காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று அந்தந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புப் பட்டியல் நீண்டாலும், தி.மு.க கூட்டணியை விட்டுச் செல்லும் மனநிலையில் அந்தக் கட்சிகள் இல்லை என்பது தி.மு.க கூட்டணியின் சாதகமான அம்சம்.
அ.தி.மு.க கூட்டணி கடந்த தேர்தலின் போதிருந்த கட்சிகளின் பலத்தைத் தற்போது இழந்திருக்கிறது. அ.தி.மு..க கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க அதிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவது அ.தி.மு.க.வுக்கு பின்னடைவே.
பா.ஜ.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே சிக்கல்கள் ஆரம்பித்து விட்டன.
பா.ஜ.க.விலிருக்கும் முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க.வைத் தரம் தாழ்ந்து விமர்சிக்க, தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியிருந்தது.
தங்களுக்கென்று 30 சதவிகித இடங்களைக் கேட்கிற மனநிலையில் இருக்கிறது தமிழக பா.ஜ.க. இருந்தாலும் அதைக் கொடுக்கிற நிலையில் அ.தி.மு.க இல்லை.
இதற்கிடையில் நாகையில் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியன்.
கடந்த தேர்தலிலேயே பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க ஒன்றும் அதிகப்படியான சீட்களைக் கொடுத்து விடவில்லை என்கிறபோது, தற்போது எந்த அளவுக்கு சீட்கள் கொடுக்கப்படும் என்பது தெரியவில்லை.
அப்படிக் குறைந்த சீட்கள் கொடுக்கப்பட்டால், தாங்கள் தனித்துப் போட்டியிடலாம் என்ற கருத்துக்கள் பா.ஜ.க கூட்டத்தில் பேசப்பட்டாலும், அப்படிப் போட்டியிடுவது தி.மு.க கூட்டணியையே பலப்படுத்தும் என்பதால், பா.ஜ.க இறுதியில் தலைமையின் உத்தரவுப்படி அ.தி.மு.க.வுடன் இணைந்து போகவே வாய்ப்புகள் அதிகம்.
மக்கள் நீதி மய்யம், பா.ம.க, அ.மு.மு.க, நாம் தமிழர் கட்சி போன்றவை வாக்குகளைச் சிதறடிக்கலாம்.
நடிகர் விஜய்யின் கட்சி களத்தில் இறங்கலாம் என்றும் ஊடகங்களில் கொளுத்திப் போடுகிறார்கள் என்றாலும், கிடைக்கிற மிகக் குறைந்த கால அவகாசத்தில் அவர்கள் எந்த அளவுக்குத் தேர்தல் களத்தில் இறங்க முடியும் என்று தெரியவில்லை.
சரி, தேர்தலின் முடிவு யாருக்குச் சாதகமானதாக இருக்கும்?
தி.மு.க.வுக்குக் கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றியின் சதவிகிதம் இப்போது குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் தொடங்கி தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது என்று எதிர்க்கட்சிகள் வாசித்த புகார்கள் ஓரளவாவது வாக்காளர்கள் மத்தியில் எடுபட வாய்ப்பிருக்கிறது.
இருந்தாலும், எதிர்த்து நிற்கிற அ.தி.மு.க கூட்டணி பலம் இழந்த நிலையில் இருப்பது தி.மு.க.வுக்குச் சாதகமான அம்சம்.
தாங்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளையும், செய்த செயல்திட்டங்களையும் சொல்லியே தி.மு.க பிரச்சாரம் பண்ணிவிட முடியும் என்பதால் தி.மு.க கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதே இப்போதைய நிலை.
– யூகி
29.01.2022 12 : 30 P.M