வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி நம் எண்ணங்களே!

– வேதாத்திரி மகரிஷியின் மணிமொழிகள்

நமது வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே.

எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.

உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்புநிலை ஆகும்.

அளவோடு உணவு உண்டால், உடல் உணவை சீரணிக்கும். அதிகமாக உண்டால், உணவு உடலைச் சீரணிக்கும்.

துன்பத்தையே நினைப்பதும், குறைவையே நினைப்பதும் ஒரு ஏழ்மை; அறிவின் வறுமையேயாம்

அகந்தை_ உறவுகளை முறிக்கும். அன்பு_ உறவுகளை வளர்க்கும்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

இன்பமும் இல்லை துன்பமும் இல்லை என்றால் அதுதான் அமைதி.

விடாமுயற்சியும், பகுத்தறிவும், கடின உழைப்பும் உள்ளவனுக்கு அப்பாற்பட்டது எதுமில்லை.

பல நதிகள் பல பெயர்களில் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது.போகும் பாதை வேறு என்றாலும்….! சேரும் இடம் ஒன்று தானே..!

பிறரை ஏமாற்றாமல் வாழ்பவன் ஒரு நல்ல மனிதன். பிறரிடம் ஏமாறாமல் வாழ்பவன் ஒரு அறிவாளி. பிறர் ஏமாற்றுகின்றார்கள் எனத் தெளிவாக உணர்ந்தும் அதை தெரிந்து கொள்ளாததுபோல் நடித்து இயன்ற அளவிலும் பாதகமில்லாத முறையிலும் விட்டுக்கொடுத்து இருவரும் நலம்பெறக் காண்பவன் ஒரு பெருந்தகை.

*இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய *மூன்று பண்புகள்:*
*1. விட்டுக் கொடுப்பது,*
*2. அனுசரித்துப் போவது,*
*3. பொறுத்துப் போவது.*

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. *இதில் யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? – மகரிஷி

யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள்.*
அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள்.

அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்.

அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார்.

1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப மைதியைக் குலைக்கும்.
5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும்.
மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது. பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.
7. குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்.
8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.
9. தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

You might also like