ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் மீது கவியரசர் கண்ணதாசனுக்கு அளவுகடந்த பற்று இருந்திருக்க வேண்டும்.
இல்லாமலா, ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தில், ‘சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள், சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள், கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்’ என்றெல்லாம் அவர் புகழ்மாலை சூட்டியிருப்பார்?
ஆண்டாள் அவரது அமுதப் பாசுரத்தில், ‘ஒருத்தியின் (தேவகியின்) மகனாகக் கண்ணன் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தியின் (யசோதை) மகனாக ஒளித்து வளர வேண்டிய நிலை ஏற்பட்டதைப் பற்றி குறிப்பிட்டிருப்பார்.
‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ என்பது ஆண்டாள் அமுதமொழி.
இந்த வரிகள், கவியரசரின் கரங்களால், ‘தாய் சொல்லைத் தட்டாதே’ (1961) படத்தில் ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம், உருவில் அழகாய் வளர்ந்தவனாம், ஒருத்தி மனதில் நிறைந்தவனாம், உயிரில் உயிராய் கலந்தவனாம்’ என்ற திரைப்பாடலாக உருவாகியது.
திருப்பாவையில் உள்ள இன்னொரு வரியும் கவியரசருக்குத் தித்திப்பூட்டியிருக்க வேண்டும். அந்த வரி, ‘குத்துவிளக்கெரிய கோட்டுக்கால் கட்டிலிலே மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி, கொத்தலர் பூங்குழல் நப்பின்னை….’ என நீளும்.
இதே வரி, கவியரசரின் இன்னொரு பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அதாவது அகத்தூண்டுதலாக மாறியது.
அந்தப் பாடல் இடம்பெற்ற படம் ‘பச்சை விளக்கு’ (1964)
‘குத்து விளக்கெரிய கூடம் எங்கும் பூமணக்க, மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க’ எனத் தொகையறாவுடன் தொடங்கும் அந்தப் பாடல், பிறகு ‘வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணனவன், தேடாதிருப்பானோ சித்திரப்பூம் பாவைதன்னை’ என பாடலாக விரியும்.
இதில், ‘குத்துவிளக்கெரிய’ எனத் தொடங்கும் வரிகளுக்கு அடியெடுத்துக் கொடுத்தது ஆண்டாள் திருப்பாசுரமே.
அந்த ‘பச்சை விளக்கு’ப் படப்பாடலின் ஒரு வரி. ‘பக்கத்தில் பழமிருக்க, பாலோடு தேன் இருக்க, உண்ணாமல் தனிமையிலே உட்கார்ந்த மன்னனவன்’…
இந்த வரி கவியரசரின் பாடல்களைக் கேட்கும் நமக்கும் பொருந்தும்.
ஆம்! கவியரசரின் இதுபோன்ற இனிய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் பாலையும், பழத்தையும் எப்படி உண்ணத் தோன்றும்?
அப்படியே உட்கார்ந்து ரசிக்க வேண்டியதுதான்.
-மோகன ரூபன் முகநூல் பதிவு 17.12.2021