கூட்டணி: பொருமல்களும், கண் கலங்கல்களும் ஏன்?
கொஞ்சமாவது சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும், இப்போது தமிழகத்தில் நடப்பது வழக்கமான தேர்தல் அல்ல என்று.
தி.மு.க, அ.தி.மு.க – இரண்டு கூட்டணிகளிலும் தான் இந்த நிலை.
இரண்டு கழகங்களும் முன்பு தனது கட்சியினரை, முக்கியமாகத் தொண்டர்களை முழுமையாக நம்பியிருக்கும்.
இப்போது அப்படியில்லை.
“எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்” – இதில் மட்டுமே தீவிரம் காட்டுகின்றன இரண்டு கழகங்களும்.
இரண்டு கழகங்களின் பின்னாலும், இயக்குபவர்கள் வேறு.
தி.மு.க வுக்குப் பின்னால் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம் என்றால், அ.தி.மு.க.வுக்குப் பின்னால் சுனில் என்பவரின் நிறுவனம்.
இந்த நிறுவனங்கள் தான் பல மாதங்களாக தேர்தல் களத்தை எப்படி அணுகுவது என்பதை வரையறுத்துத் தருகின்றன. புதிதாகப் புள்ளி விபரங்களை நம்பகத்தன்மை மிகுந்த ஒன்றைப்போல உருவாக்கித் தருகின்றன.
எவ்வளவு தொகுதிகளில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம்? யாருடன் கூட்டணி வைக்கலாம்? யாரைத் தவிர்க்கலாம்? அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் தான் இறுதியாகத் தரலாம்? – இப்படி எல்லாவற்றையுமே அந்த நிறுவனங்கள் தான் சர்வே எடுத்து வாக்காளர்களின் மனநிலையைத் துல்லியமாக ஆய்வு செய்து விட்டோம் என்று ‘வியூகம்’ வகுத்திருப்பதாகச் சொல்லி, தன்னை நம்புகிற கட்சிகளை எப்போதும் பரபரப்பான நிலையிலேயே வைத்திருக்கின்றன.
அவர்களும் கூடுதலாக கட்டணம் செலுத்திய நிலையில், தங்கள் மீதும், தங்கள் இயக்கத்தின் மீதும் ஆக்கிரமிப்பு செலுத்த அந்த நிறுவனங்களை அனுமதிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட மன்னராட்சிக் காலத்திய ‘ராஜ குருவை’ப் போல மாறிவிடுகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் பணிக்கு நியமித்தவர்களின் தற்காலிகப் புறமூளையாக மாறிவிடுகின்றன இந்த நிறுவனங்கள்.
தேர்தல் பிரச்சாரம், அவற்றின் திசை, பிரச்சார மேடையின் வடிவம் இப்படி எல்லாவற்றையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் தங்களுடைய சொந்த விருப்பத்தோடு பசைச்சட்டியும், சுவரொட்டியுமாக அலைந்து மேடையமைத்துத் தேர்தல் களப்பணியாற்றிய தொண்டர்களை இப்போது இந்த இயக்கங்களை கைவிட்டு விட்டன அல்லது அந்த அளவுக்குப் பாசம் காட்டிய தொண்டர்கள் தற்போது காணாமல் போய் விட்டார்கள்.
சிறு கிராமத்தில் உண்மையாக உழைத்த தொண்டனை நினைவில் நிறுத்திப் பெயர் சொல்லி உற்சாகப்படுத்தும் இயக்கத் தலைமையும் இப்போது இல்லை.
காணாமல் போன அந்த இடைவெளிகளில் தான் பெரும் வணிக நோக்குடன் நுழைகின்றன அறிவுஜீவி மாயாஜாலம் காட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.
இதைக்கூட ஏதோ உட்கட்சி விவகாரம் என்று விட்டுவிடலாம்.
ஆனால் கூட்டணிகளிலும் அந்த நிறுவனங்களின் தலையீடு அத்துமீறிய அளவில் இருக்கும்போது தான் சிக்கல்கள் வருகின்றன.
தமிழகத்தின் தனித்துவமான சில அரசியல் போக்குகள் அவர்களுக்குப் பிடிபடுவதில்லை.
கூட்டணிக் கட்சிகளின் பலத்தை அதன் அண்மைக் காலத்திய வாக்குச் சதவிகிதக் கணக்குகளை மட்டுமே வைத்துத் தீர்மானித்துவிட முடியாது.
இங்கு நீண்டகாலமாக இருக்கும் கூட்டணி உறவுகளையும் அவர்கள் உணர முடியாது.
வெற்று எண்ணிக்கை சார்ந்து கூட்டணி பலத்தை அவர்களுடைய புள்ளி விபரத் தராசில் எடை போடும்போது தான் கூட்டணிக் கட்சிகள் தவித்துப் போகின்றன. பொருமுகின்றன. ததும்பிக் கண் இருப்பதால் கலங்கிப் போகின்றன.
தொலைக்காட்சி ஒலிவாங்கிகளுக்கு முன் குமுறுகின்றன. தங்களுடைய கடந்த காலத்திய மரியாதையை ஆத்திரத்துடன் வெளிப்படுத்துகின்றன. வேறு கூட்டணிக்கும் முயற்சிக்கின்றன.
இதைத்தான் தற்போது தமிழக அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தங்களுடன் நீண்ட காலமாக கூட்டணி உறவு வைத்திருந்த கட்சிகள் சில தொகுதிகளை வற்புறுத்திக் கேட்கும்போது, இதே இயக்கங்களின் முந்தையத் தலைமை பரிவு காட்டும். உறவின் தன்மைக்கு மதிப்பளித்துப் பரிசீலிக்கும்.
இப்போதோ கூட்டணிக் கணக்கில் இறுக்கமான, கறாரான நிலைமை.
தேர்தல் நெருங்கிய நிலையில், லட்சியத்தை நினைவுபடுத்திப் பெருமூச்செறிவதைத் தவிர வேறு வழியில்லை.
அதே சமயம், கூட்டணிக்கட்சிகளை இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளியதில் – வாக்கைப் தீர்மானிப்பதாகச் சொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே காரணம் அல்ல, அதைத் தங்களுக்காகப் பணியாற்ற வைத்த இயக்கத் தலைமையில் உள்ள மூளைகளும் முக்கியமான காரணம்.
இன்று கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டின் போது, மௌனம் காத்த இயக்கத் தலைமை புரிந்து கொள்ளாத சில விஷயங்கள்:
இந்தத் தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு தேர்தல் வரை இவர்களுக்கான புற மூளையாகப் பணியாற்றி வந்த இதே நிறுவனங்கள் தங்கள் கல்லாவைக் கட்டிக் கொண்டு, வேறு ஒரு கட்சிக்குப் பணியாற்றப் போய்விடும்.
தேர்தல் முடிவு வரை தான் இந்த உறவு. ஆனால் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படி அல்ல. முன்பு நெருக்கடிகள் வந்தபோதும், உடனிருந்தவை. தேர்தலுக்குப் பிறகும் அதே மாதிரி இருக்க வேண்டியவை.
கார்ப்பரேட் கணக்குகளை முழுக்க நம்பி, கூட்டணிக் கட்சிகளுக்கு விசேஷத் தள்ளுபடி அளித்தால், அவர்கள் என்னதான் லட்சிய உறவு காத்தாலும், எவ்வளவு தூரத்திற்கு அவர்களும், அவர்களுடைய தொண்டர்களும் தேர்தல் களத்தில் துடிப்பாகப் பணியாற்றுவார்கள்?
இன்னொன்று தேர்தல் களத்தில் வாக்காளர்களின் மனநிலை எப்படியிருக்கும்?
அதைப் புரிந்து கொள்ள எளிய சூத்திரங்கள் ஏதாவது இருக்கிறதா?
எளிதில் கணக்கிட முடியாத ஆழமும், புதிர் முடிச்சுகளும் கொண்டது வாக்காளர்களின் மனம்.
பல கருத்துக் கணிப்புகள், அவதார ஜோதிடர்களின் சிறப்புக் கணிப்புகளையே தங்கள் மௌனத்தால் வாக்காளர்கள் நிலைகுலைய வைத்த வரலாறு எல்லாம் இங்குண்டு. உளவுத் துறையினரின் முன் கணிப்புகளும் திசை மாறியதுண்டு.
விருதுநகரில் சாதாரண கல்லூரி மாணவரிடம் தோற்றுப் போவேன் என்று பெருந்தலைவர் காமராஜர் நினைத்திருப்பாரா?
ஜோதிடர்களைப் பெரிதாக நம்பி வந்த ஜெயலலிதா, பர்கூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் தான் தோற்போம் என்று நினைத்திருப்பாரா? பின்னாளில் அவரே கூட்டணித் துணையில்லாமல் அசுர பலத்துடன் வெல்வோம் என்று கணக்கிட்டிருப்பாரா?
எல்லா மாற்றங்களும் முன்பே யூகிக்க முடியாதபடி இதே தமிழகத்தில் தானே நடந்தேறியிருக்கின்றன? இந்த நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் புள்ளிவிபர மயக்கங்கள் எம்மாத்திரம்?
இயந்திரங்களின் இடையீடுகள் இல்லாமல் வாக்காளர்கள் தன்னியல்பாக வாக்களிக்க முடியும் என்றால், கொரோனா கடந்து போயிருக்கின்ற, போய்க்கொண்டிருக்கிற நிலையில் அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது தேர்தல் அன்றே முடிவாகும்.
என்னதான் பணம் கொடுத்து உயர் ரக சோபாக்களில் சரிந்து வேடிக்கை பார்த்தாலும், சர்க்கஸ் மைதானத்தில் வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே வித்தை காட்டிப் பரிமளிக்கச் செய்ய முடியும்.
அவர்கள் சார்பில் வேறு யாரும் அந்தரத்தில் வித்தை காட்ட முடியாது.
தேர்தல் கள வித்தைகள் தெரிந்தவர்கள் மகா ஜனங்கள் மட்டுமே!
– யூகி
08.03.2021 12 : 30 P.M