மனதை வலுவாக்கும் 15 நிமிடங்கள்!
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, என்ன செய்தால் மனம் சீராக இயங்கும் என்பது பதில்களுக்குள் அடங்காத கேள்விகளில் ஒன்று. ஒவ்வொருவரும் தத்தமது மனதுக்குத் தெரிந்த, உணர்ந்த, அறிந்தவற்றைக் கொண்டு, இதற்கொரு வழியைக் கையாளுகின்றனர்.
ஒரு வேலையை எத்தனை வேகமாகச் செய்தாலும், மெதுவாக முடித்தாலும் அலுப்பு உருவாவது மனித இயல்பு. அதிலிருந்து விடுபட்டு சீராக இயங்குவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது.
பெரும்பாலும் அது ஓய்வாகவோ, தூக்கமாகவோ, தியானமாகவோ அல்லது ஏதாவது ஒரு கேளிக்கை நடவடிக்கையாகவோ, தெரிந்த நபருடனான சந்திப்பாகவோ, இன்ன பிறவாகவோ இருப்பதுண்டு. இதன் அடிப்படை, வழக்கமானவற்றில் இருந்து விலகி வேறொன்றில் கவனம் செலுத்துவது.
கிட்டத்தட்ட இது வழக்கமான செயலில் ஏற்படுத்தப்படும் இடையூறுதான். ஆனால், இதுவே ஒருவரது மனதின் சீர்மையைக் காக்கும் என்பது ஆச்சர்யமான விஷயம்.
நம்மில் பலர் அறியாமலேயே இந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக, பிடித்த இசையைக் கேட்பதோ, பிடித்தமானதை வாசிப்பதோ, பிடித்தமானவர்களுடன் அளாவளாவுவதோ, கண் மூடி அமைதியாக இருப்பதோ, கண்டு மகிழ்வதோ, கடந்து போனதை அசைபோடுவதோ அல்லது இவையல்லாத தனித்துவமான ஏதோ ஒன்றோ மனதுக்கு உகந்ததாக இருக்கலாம்.
அதுவே நமது மூளையைச் செழுமையாக வைத்திருக்கிறது. இத்தனையும் உணர்ந்தவுடன், இது காலாகாலத்துக்கும் தொடர வேண்டுமே என்ற எண்ணம் முளைப்பது இயல்பு.
உடற்பயிற்சிகள் மூலம் உடலைச் சுருக்குவதும் விரிவாக்குவதும் அதன் இலகுத்தன்மையைக் காக்கும். போலவே, மனதையும் பண்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதே இன்றைய வேக யுகத்தில் தவிர்க்க இயலாத கேள்வியாக இருக்கிறது.
மனதைக் கட்டுக்குள் வைத்திருக்க, பார்வையை நேராகச் செலுத்த, பதிந்த தகவல்களை வரிசைக் கிரமமாகப் பராமரிக்கவென்று மனப்பயிற்சிகள் பல இருக்கின்றன. அதற்காகத் தனியாக மெனக்கெட வேண்டுமே என்று யோசிப்பவர்களுக்கு, மேலே கூறப்பட்டவை தவிர வேறொரு வழியும் இருக்கிறது.
அது, ஒரு நாளைக்கு 10 அல்லது 15 நிமிடங்களை இப்பயிற்சிக்கென்று ஒதுக்குவது.
அத்தனை மணித்துளிகளுக்குள் என்ன செய்துவிட முடியும்? மேலோட்டமாகப் பார்த்தால் இயலாத காரியமென்றே தோன்றும். ஆனால், இதனைத் தினசரி வழக்கமாக்கிக் கொண்டால் அபார பலன் கிடைக்கும்.
இதன் மூலமாக மூளையில் பயன்படுத்தப்படாத பகுதிகள் ஆக்டிவேட் ஆகும். எதிர்காலத்திலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழி ஏற்படும். இது தொடரும்போது, வயதானாலும் அறிவாற்றல் திறனில் பெரிதாகப் பாதிப்பு இல்லாமல் இருக்கும்.
இவ்வாறு நாம் கவனம் செலுத்தப்போவது இதுவரையில் அறிந்திராத ஒன்றாக இருந்தால் சிறப்பு. ஆரோக்கியம், வர்த்தகம், சுய மேலாண்மை, அறிவியல், உளவியல் என்று எதுவாகவும் இருக்கலாம்.
தெரியாததைத் தெரியத் தொடங்கும்போது, அதில் கவனம் அதிகமாகும். அந்த தகவல்களை மீட்டெடுப்பதும் எளிதாக இருக்கும். வாசிப்பதில் சோர்வு ஏற்பட்டால், ஆடியோவாக கேட்பது அல்லது யூடியூப் போன்ற காட்சித்தளங்களில் பார்ப்பது என்று செயல்முறையை மாற்றிக்கொள்ளலாம்.
தெரியாத ஒன்றைப் பற்றி விவரம் தெரிந்தாகிவிட்டது. தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அறிதல் தொடரவும் செய்கிறது. அப்புறம் என்ன செய்ய?
தினமும் அது பற்றி இரண்டொரு வரிகளாவது எழுத வேண்டும்.
குழந்தைகள் படித்தவற்றை எழுதிப் பார்ப்பார்களே, அது போலவா? ஆமாம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல வயதாக ஆக நமது மூளையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் வழியும் அதுவே.
டைரியில் எழுதலாம் அல்லது கணினியில் ஒரு கோப்பு உருவாக்கிப் பதிவு செய்யலாம் அல்லது உங்களது மொபைலில் நோட் போட்டு பதிவு செய்யலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிந்தவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தால் சமூகவலைதளங்களிலும் பகிரலாம்.
எழுதுவது கடினமான காரியம்தான். ஆனால், அப்படி எழுதும்போது நாம் சிந்திப்பது எவ்வாறாக இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர முடியும்.
ஒருகட்டத்தில் சிந்திப்பதை எழுதத் தொடங்கும்போது, எவ்வளவு தெளிவு நம்மில் உள்ளது என்பதை அறிய முடியும்.
இது தொடர்கதையாகும்போது, நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பதும் நமது விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளது என்பதும் தெரிய வரும். இதன் மூலமாக, நம்மை நாமே தற்சோதனைக்கு உட்படுத்த முடியும்.
எழுதுவது மட்டுமே சிந்திப்பதை மிகச்சரியாக கடத்த உதவும் வழி. அதனை எந்த அளவுக்கு தெளிவாக மேற்கொள்கிறோமோ அந்த அளவுக்கு சிந்திப்பதும் தெளிவடையும்.
அதற்காக, இலக்கணப் பிழையில்லாமல் பதிப்பிக்கத்தக்க அளவில் எழுத வேண்டுமென்றில்லை; தொடர்ந்து எழுதும்போது அது தானாகவே கைவரும் என்பது வேறு விஷயம்.
எழுத எழுத நமது கருத்துகள், முன்யோசனைகள் எல்லாமே தன்னால் வெளிவரும். அதுவே, நம்மைப் பற்றியும் சிந்தனை பற்றியும் ஒரு தெளிவை உண்டாக்கும்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுதிக் குவிப்பவர்களையும், தமக்குத் தெரியாத புதிய விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர்களையும் உற்றுக் கவனித்தால், அவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தியிருப்பது தெரியவரும்.
எழுதுவதும் சிந்திப்பதும் தனிக்கலை. ஆனால், இவ்விரண்டையும் நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தில் காட்டும்போது, நம் மூளையின் திறன் வலுவடையும். உடலை இளமையாக்கும் பயிற்சிகள் போன்று, இது மனதை புதுப்பிப்பதற்கான எளிய வழி.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். தெரியாததை தெரிந்து கொள்ளும்போது, அது நமக்குப் பிடித்தமானதாக இருப்பது அல்லது அவ்வாறு ஆக்கிக்கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மீதமுள்ள நிமிடங்கள் கொட்டாவிகளை வாரியிறைப்பதிலேயே கழிந்துவிடும்.
-உதய் பாடகலிங்கம்
01.02.2021 1 : 30 P.M