விவசாயிகளின் மனதின் குரலை எதிரொலித்திருக்கிற உச்சநீதிமன்றம்

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிற அளவுக்கு விவசாயப் பெருமக்களுக்கு மதிப்பளித்திருக்கிற மரபு நம்முடையது.

நெல் விளைவிக்கவர்களாக இருந்தாலும் சரி, கோதுமை மற்றும் எந்தத் தானியம் விளைவிக்கிறவர்களாக இருந்தாலும் சரி, விளைவிக்கிறவர்கள் அனைவரும் உயிர் கொடுத்தவர்கள் தான்.

அப்படிப்பட்ட விவசாயிகள் தான் டெல்லியில் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை எட்டு முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதே தவிர பேச்சுவார்த்தை தீர்வை நோக்கி நகரவில்லை.

அப்படியென்றால், அது யாருடைய தவறு?

பேச்சுவார்த்தை தோல்வி அடைவதற்கு என்ன காரணம்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகத் தான் வேளாண் சட்டங்களைக் கொண்டு வர அரசு முயற்சி எடுக்கிறது என்று விவசாயிகள் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு முறையான பதில் தரப்படவில்லை.

விவசாயிகள் நலனுக்காகவே சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது என்றால் அவர்கள் ஏன் இவ்வளவு குளிருக்கிடையில் குடும்பத்தோடு தலைநகரில் போராட வேண்டும்?

வெறுமனே அவர்களை தீவிரவாதிகளோடு, அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு அரசு பேசிக் கொண்டிருந்த நிலையில், மக்கள் தரப்பிலான குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

வேளாண் சட்டங்கள் யாருடைய நலனுக்காக கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிற உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறைவேற்ற இடைக்காலத் தடையையும் விதித்திருக்கிறது. குளிரில் சாலையில் போராடிக் கொண்டிருக்கிற விவசாயக் குடும்பங்களுக்கான பரிவான குரலை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் கொரோனா தொற்றால் விவசாயிகள் பாதிக்கக் கூடாது என்றும் எச்சரித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

மக்கள் தான் இறுதி எஜமானர்கள் என்பது ஜனநாயகத்தின் உயிர் நாடி. சிறு குழந்தைக்குக்கூட, அந்தக் குழந்தை உண்ண விரும்பாத உணவை நாம் திணிக்க முடியாது.

உச்சநீதிமன்றம் உரிய குரல் கொடுத்து வழிகாட்டியிருக்கிறது. மத்திய அரசும் தாமதமின்றி வேளாண் சட்டங்கள் விஷயத்தில் மக்களுக்கான முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்பது தான் இந்திய நாட்டு மக்களின் அசலான ‘மனதின் குரல்!’ (மன் கீ பாத்).

12.01.2021  2 : 30 P.M

You might also like