முன்பெல்லாம் நகரத்திலோ, கிராமத்திலோ சாலைகளை அமைக்கும்போது கமிஷன் வாங்குவது என்பது இங்கு தொன்றுதொட்ட இயல்பைப் போலவே இருந்திருக்கிறது.
துவக்கத்தில் 10 சதவிகிதமாக இருந்த கமிஷன், பிறகு 20, 40 என்று மாறி, தற்போது 60 சதவிகிதம் வரை கமிஷன் கொடுக்குமளவுக்கு போயிருப்பதை குறிப்பிட்டு எச்சரித்திருக்கிறது மதுரையிலுள்ள உயர்நீதிமன்றக் கிளை.
ஏற்கனவே தமிழ்நாடு முழுக்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக உருப்படியாக எந்த சாலை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
தேர்ந்தெடுக்க்ப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர், மேயர் உள்ளிட்ட பலரும் தங்கள் நலனிலேயே, குறிப்பாக தங்களுக்கு வரவேண்டிய கமிஷன் குறித்தே கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை தமிழகத்தில் உள்ள எந்தப் பகுதி மக்களைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ள முடியும்.
அந்தளவுக்கு சாலைகள் படுமோசமான நிலையில் இருக்க, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுக்கான நலன் அதிகரித்த நிலையில் இருந்திருக்கிறார்கள்.
இதைத் தான் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உணர்த்தியிருக்கிறது.
எல்லா பணியிலும் 60 சதவிகித அளவுக்கு கமிஷன் பரிமாறப்பட்டு ஊழல் நடைபெற்றிருக்கிறது என்றால் மிச்சமிருக்கிற 40 சதவிகித நிதியில் போடப்படும் சாலைகள் எந்த லட்சணத்தில் இருக்கும்?
ஆனாலும், இது குறித்த குறைந்தபட்ச விசாரணை நடத்தப்படாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த முனைவதில் எந்தவித அர்த்தமும் இல்லை.
அதோடு, ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் வடிகால் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட 4000 கோடி நிதி அளவுக்கு நிதியளிக்கப்பட்டும் அதற்கான சரியான கணக்கு விவரம் தெரிவிக்கப்படவில்லை என்று 4 மாதங்களுக்கு முன்பு கூட தெரிவித்திருக்கிறார் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன்.
மாநகராட்சி சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சியில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்த பாரபட்சமற்ற விசாரணை எப்போது துவங்கும் என்பது தான் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க இருக்கும் வாக்காளப் பெருமக்களின் கேள்வி.
– யூகி