டெல்லி ஜந்தர் மந்தரும் தமிழ்நாட்டு மெரினாவும்!

கடந்த 10-ம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி, போராட்டத்திற்கென்று அனுமதிக்கப்பட்ட டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெரும் திரளாகப் பலரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தனர்.
 
அப்போது நடந்த கடுமையான ஒடுக்குமுறையை டெல்லி வாழ் மக்களும் ஊடகம் வழியாக இந்திய மக்களும் நன்கு அறிவார்கள்.
 
டெல்லியில் இத்தகைய போராட்டங்கள் நடப்பது இது முதல் முறை அல்ல. இதுவரை பல போராட்டங்கள் இதே ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன.
 
சில மாதங்களுக்கு முன்பு கூட முக்கியமான நீட் முறைகேட்டையொட்டி நடந்த ஒரு பெரும் போராட்டத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை மத்திய அரசு பதவியில் இருந்து விலக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது.
 
தற்போதும் அதே நிலைதான். ஜந்தர் மந்தரில் அதேவிதமான மக்கள் திரள் போராட்டம். தற்போது கூடவே வெவ்வேறு கட்சிகளும் அணிவகுத்திருக்கின்றன.
 
ஆனால், இம்முறை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு பெரும் போராட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் என்ற ஒற்றை நபருக்கு எதிரான போராட்டமாக மத்திய அரசு பார்க்கவில்லை என்பது அதன் கடுமையான செயல்பாடுகளில் இருந்தே உணர முடிந்தது.
 
ஏனென்றால் ஞானேஷ்குமாரைத் தொட்டால் அவர் சார்ந்து இதுவரை தேர்தலில் எவ்வளவு முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பது அம்பலத்திற்கு வந்தால், பலருடைய இருத்தல் கேள்விக்குறியாகும்.
 
அதனால் திட்டவட்டமாக பலவிதமான ஒடுக்குமுறைகளை நிகழ்த்தியதோடு, இதுவரை போராட்டக் களத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஜந்தர் மந்தர் பகுதியிலேயே யாரும் போராடக் கூடாது என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.
 
அதாவது, போராட்டக் களத்தையே டெல்லி மக்களுக்கு முன்பாக நடக்கவிடாமல் எங்கோ ஒரு ஓரத்தில் நடத்துவதற்கு சில இடங்களை பாஜக அரசே தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.
 
இதே நிலைப்பாட்டை, ஒரு காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அப்போது  ஏற்றிருக்குமா?
 
இதற்கு முன்னால் காங்கிரஸ் அரசை எதிர்த்து, இதே பாஜக எத்தனையோ முறை போராட்டங்களை நடத்தி இருக்கிறது.
 
ஆனால், அப்போதெல்லாம் வராத ஒரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டு, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
 
இது இதர கட்சிகளின் மத்தியிலும் வெவ்வேறு சமூக அமைப்புகள் மத்தியிலும் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
 
எப்போதுமே மக்கள் திரள் போராட்டம் ஓரளவுக்கு மேல் திரண்டு சில கோரிக்கைகளை முன்வைத்து அந்த கோரிக்கைகளை எப்படியாவது நிறைவேற்ற விடாப்படியாக முனையும்போது, அதை எப்படியாவது தடுக்கவே எந்த அரசாக இருந்தாலும் முயற்சித்திருக்கின்றன.
 
இதில் மத்திய அரசு, மாநில அரசுகள் என்ற வித்தியாசம் இல்லை.
 
இதே தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரும் மக்கள் திரளோடு நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
 
அது  2017-ம் ஆண்டு. சென்னை மெரினா கடற்கரையிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் ஏழு நாட்கள், இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி சார்புகளற்று ஒரு பெரும் கூட்டத்தை பல்வேறு சிறுசிறு அமைப்புகள் இணைந்து எந்தவிதமான பெரிய கட்சியின் சார்புகள் இல்லாத நிலையில், தொடர்ந்து போராட்டத்தை நடத்தி, அந்த போராட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நிகழ்த்த அனுமதியும் பெற முடிந்தது.
 
ஆனால், அந்த அனுமதி பெறப்பட்ட சில தினங்களுக்குள் தொடர்ந்து இதர கோரிக்கைகளையும் முன்வைத்து, அதே மெரினா கடற்கரையில் போராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
 
அவர்கள் கடலில் இறங்கி ஓடிய போதும், அவர்களை விரட்டி விரட்டித் தாக்கியது அன்றைக்கு இருந்த காவல்துறை.
 
அவர்கள் மீனவர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஓடி ஒளிந்தபோது அங்கிருந்த மீனவர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது.
 
கடற்கரைக்கு அருகே இருந்த ஒரு காவல் நிலையத்தில் இருந்த சில வாகனங்களுக்கு காவல் துறையினரே தீ வைத்துவிட்டு, அதை போராட்டக்காரர்கள் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
 
இவ்வளவு கடுமையான ஒடுக்குமுறையை ஏன் கட்டவிழ்த்து விட்டார்கள்?
 
இதற்காக ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், அந்த விசாரணை கமிஷன் முடிவுகள் இதுவரை வெளியே வரவில்லை.
 
இவ்வளவு கடுமையான அடக்கு முறைக்கு உத்தரவிட்டது யார்? என்பது அந்த ஆர்ப்பாட்டத்தில் காயப்பட்ட இளைஞர்களுக்கு கூட இன்னும் தெரியவரவில்லை.
 
ஆனால், அதே சமயத்தில் போராட்டம் நடத்தப்பட்ட சில தினங்களுக்குள் மெரினா கடற்கரையில் இனி யாரும் போராடக் கூடாது. போராடும் நோக்கத்தில் மக்கள் அணிதிரளக் கூடாது என்பதை மையமாக வைத்து ஒரு தனி ஆணையே பிறப்பிக்கப்பட்டது.
 
இதே மெரினா கடற்கரையில்தான் பிரிட்டிஷ் காலத்தில் காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்கள் பேசி இருக்கிறார்கள்.
 
மகாகவி பாரதி இங்குள்ள கடற்கரை கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
 
பொதுமக்கள் அணி திரண்டு எந்த சிரமும் இல்லாமல் கூடுவதற்கு ஏற்ற இடமாக மெரினா கடற்கரை ஆங்கிலேயர் காலத்திலும் இருந்தபோது ஆங்கிலேயர்கள் அந்த மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை.
 
பிறகு, சுதந்திரம் கிடைத்த பிறகும் இதே மெரினா கடற்கரையில் பல்வேறு விதமான அரசியல் கூட்டங்கள் நடந்திருக்கின்றன.
 
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தபோது அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரும் மக்கள் திரள் இதே மெரினா கடற்கரையில் கூடியது.
 
அப்போதெல்லாம் இந்த மெரினா கடற்கரைக்கு தடைவிதிக்கவில்லை. ஆனால், 2017-ம் ஆண்டில், சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால், இளைஞர்கள் தாமாக அணிதிரண்டு, குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்து அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டதை அன்றைய அதிகார வர்க்கத்தினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
 
அதன் விளைவாகவே இரண்டு காரியங்கள் நடந்தன. ஒன்று இனிமேல் அவர்கள் ஒன்றுகூடுவதற்கு ஒரு அச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
 
இரண்டாவதாக அந்த போராட்டக் களத்திற்கு ஆதாரமாக அமைந்த மெரினா கடற்கரையில் அணிதிரள்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
 
பல்வேறு கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்தாலும், அன்று விதிக்கப்பட்ட தடை இன்றுவரை அமலில் இருக்கிறது.
 
ஒன்றை மட்டும் ஜந்தர் மந்திரிலும் மெரினாவிலும் தடை விதிக்கிறவர்கள் உணர வேண்டும்.
 
ஒரு பெரும் போராட்டச் சூழல் உருவாகிறபோது அந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட அனுமதிப்பது என்பது ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.
 
ஆனால், அந்த ஜனநாயத்தையும் மறுத்து அதற்கு தடைகள் விதித்தால் எந்த இடத்திலும், அதாவது இதுவரை மக்கள் கூடும் எந்த இடத்திலும் இத்தகைய போராட்டங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
 
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் பல தடைகள் ஏற்படுத்திய போதும் ஆட்டோ ஓட்டுநர்கள் வெவ்வேறு திசைகளில் இருந்து ஒன்றுகூடி, போக்குவரத்தையே தடை செய்து பெரும் போராட்டத்தை நடத்தியபோது, அரசு அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டு நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை உருவானது.
 
ஆக, ஜந்தர் மந்தர், மெரினா என சில இடங்களுக்கு தடைவிதிப்பதால்  போராட்டக் களத்தை வேண்டுமானால் மாற்றலாம்.
 
ஆனால் போராட்ட உணர்வையோ அணித்திரள்வதையோ மாற்ற முடியாது என்பதுதான் எதார்த்தம்.
 
– யூகி
Comments (0)
Add Comment