என்னதான் நவீனத் தொழில்நுட்பங்கள் அதிகப்பட்டாலும், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பெருமளவு அதிகரித்தாலும், இன்னும் மனித மூளை என்பது தொடர்ந்து ஒரு ஆய்வுப் பொருளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.
முன்பு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலுள்ள மைக்ரோ பயாலஜி பிரிவில், மூளையின் செயல்பாடுகள் பற்றியும் மரபணு பற்றியும் பல்வேறு நுண்ணிய ஆய்வுகள் நடந்திருக்கின்றன.
பல ஜீவராசிகளை வைத்து பல சோதனைகளும் அங்கு நடந்தன. குறிப்பாக வௌவால்களை வைத்தும், சிறு பறவைகளை வைத்தும் அந்த மரபணு சம்பந்தமான சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
அதிகாலை நேரத்தில் குறிப்பிட்ட சில நொடிகளுக்குள் எப்படி பறவைகளும் வௌவால்களும் அதன் இருப்பிடத்தைவிட்டு வெளியேறுகின்றன?
என்னதான் தட்பவெட்ப நிலை மாறினாலும் ஒளி மாற்றம் ஏற்பட்டாலும், அதையும் மீறி அவை குறிப்பிட்ட நொடிகளுக்குள் எப்படி வெளியேறுகின்றன?
அப்படியென்றால், அந்தந்த ஜீவராசிகளுக்கு காலத்தை உணரும் உணர்வு எப்படி ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஆய்வுகள் நடந்திருக்கின்றன.
ஒரு மனிதரைச் சுற்றியுள்ள உலகிலிருந்து தனித்து வாழ வைத்தால், அவரிடம் எந்தெந்த மாதிரியான உணர்வுகள் மாறுபடுகின்றன என்பதெல்லாம் ஆராயப்பட்டிருக்கிறது.
அந்த ஆய்வுகள் அறிக்கைகளாகவும் சமர்பிக்கப்பட்டு வெளிநாடுகள் வரை கவனம் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் இந்த ஆய்வகத்தைப் பார்வையிட்டபோது, பல்வேறு தகவல்கள் அவர்களிடம் சொல்லப்பட்டன.
இந்த ஆய்வு மையத்தை துவக்கி ஒருங்கிணைத்திருப்பவர் சுதா கோபால கிருஷ்ணன்.
நூற்றுக்கும் மேற்பட்ட மனித மூளைகள் இங்குள்ள ஆய்வுக் கூடத்தில் வைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஒரு கரு தாயின் கருப்பையில் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உருவானதிலிருந்தே அந்த சிசுவின் மூளை அமைப்பை கண்காணித்து ஒருவேளை மன வளர்ச்சிக் குன்றிய குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் முன்கூட்டியே, அந்தக் கரு பத்து மாதங்களில் குழந்தையாக வெளிவருவதற்கு முன்பே சில மாற்றங்களை மூளையில் செய்வது சாத்தியப்படும் என்கின்றன இங்கு நடந்திருக்கும் ஆய்வுகள்.
மூளையில் உருவாகும் அல்சைமர் போன்ற நோய்களுக்கான நிவாரணத்தையும் இத்தகைய ஆய்வின் மூலமாக சீர்படுத்தமுடியும் என்பது குறித்த ஆய்வும் இங்கு நடந்திருக்கிறது.
தற்போது ஐஐடி வளாகத்திலுள்ள இந்த மூளைகள் குறித்த ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகள் இனி தொடர்ந்து வெளிவரும் பட்சத்தில் அவற்றிற்கு சர்வதேச அளவில் கவனிப்பும் மதிப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் இங்குள்ள ஆய்வறிஞர்கள்.
இந்தியாவில், இம்மாதிரியான ஆய்வுகள் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்பது நமக்கே உரித்தான தனிச்சிறப்பு.
– யூகி