நடந்து முடிந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், இறுதியாக தன்னுடைய பதிலுரையாக முதல்வர் விஜய் பேசிய பல விஷயங்கள் அப்போது ஊடகங்களில் பரவி பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த கட்டமான ஒரு வீச்சை சந்தித்திருக்கிறது தமிழக முதல்வர் விஜய்யின் மதுராந்தக இடைத்தேர்தல் பரப்புரையின்போது பேசிய பேச்சு.
இதற்கு முன் இல்லாத அளவுக்கு அவர் பேசுவதற்கு முன் தவெகவின் மற்ற தலைவர்கள் பேசினார்கள்.
குறிப்பாக, புஸ்ஸி ஆனந்தன் உள்ளிட்டவர்கள் பேசிய பிறகு பொதுப்பணித் துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா அவருடைய பாணியில், அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெம் வீரமணி வழக்கை தாங்கள் எப்படி கையாண்டிருக்கிறோம். திமுக எப்படிக் கையாள தவறிவிட்டது என்பதையும் குறிப்பிட்டு பேசினார்.
அதோடு, அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கேள்வி என்று அவர் பேசிய விஷயம் அதிமுக தொண்டர்களிடையே கவனத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.
எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளரை அந்தத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்து நிறைவாக அவரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டது பகிரங்கமான குதிரை பேரம் இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்ந்து பரப்புரை ஆற்ற வந்த முதல்வர் விஜய், இதுவரை அதிமுகவையோ பாஜகவையோ நேரடியாக குறிப்பிட்டு பேசாமல் இருந்து வந்தவர், இந்த பரப்புரையில் அதிமுகவின் பெயரைக் குறிப்பிட்டும் பாஜகவின் பெயரைக் குறிப்பிட்டும் நேரடியாக குற்றம்சாட்டும் விதத்தில் பேசியது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அடுத்து, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஒரு மறைமுகக் கூட்டணி இருந்தது என்பதை வெளிப்படுத்திய அவர், இருவரும் இணைந்து தனிப்பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்த தவெகவுக்கு எதிராக ஆட்சி அமைக்க முனைந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அது மட்டுமல்லாமல், பாஜகவும் திமுகவுக்கும் மறைமுகக் கூட்டணி இருந்தது என்பதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தான் பேசிய விக்கிரவாண்டி கூட்டத்திலேயே குறிப்பிட்டிருக்கிற விஜய், இந்த பரப்புரையின்போது பாஜகவுக்கும் திமுகவுக்கும் இருக்கிற தொடர்பை பற்றி மிகவும் வெளிப்படையாகவே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் உள்ள திமுகவுக்கு பெயர் பாஜக, தமிழகத்தில் உள்ள பாஜகவுக்கு பெயர் திமுக என அவர் பஞ்ச் டயலாக் போல திரும்ப திரும்ப குறிப்பிட்டது இதுவரை இல்லாத அளவுக்கு உடனடியாக தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக விலைத்தளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்த பரப்புரையின் மூலமாக அதிமுக இதுவரை வெளிப்படையாக முன்வைக்காமல் இருந்த திமுக எதிர்ப்பை தன்னுடைய பரப்புரையின் மூலம் தெளிவாக கூர்மைப்படுத்தி இருக்கிறார் விஜய்.
அதே சமயத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டு அவர்கள் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பதாகச் சொல்லி, அதிமுக தொண்டர்கள் தங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என்பதையும் இந்த பரப்புரையில் தெளிவுபடுத்தினார் விஜய்.
இதை நிரூபிப்பது போல கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த திமுக ஆட்சியின்போது நிலுவையில் இருந்த அதிமுக அமைச்சர்கள் குறித்த எந்தவொரு வழக்கும் தூசி தட்டப்படாமல் இருந்ததே ஒரு சாட்சியாக இருக்கிறது.
இதன்மூலம் திமுகவை எதிர்ப்பதில் அதிமுகவைவிட தவெக முன்னிலையில் இருப்பதை மீண்டும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுவரை எம்.ஜி.ஆராலும் ஜெயலலிதாவாலும் சொல்லப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி சொல்ல மறந்த தீயசக்தி என்கின்ற சொல்லாடலை மறுபடியும் திமுகவுக்கு எதிராக களத்தில் நிறுத்தி அதிமுகவினர் இதுவரை பயன்படுத்தி வந்த ஆயுதத்தை கீழே போட வைத்திருக்கிறார்.
இதையடுத்து, கடந்த தேர்தலில் தெரியும்போது திமுகவினர் பேசி வந்த டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில தான் போட்டி என்று சொல்லி வந்த பிரச்சாரத்தை தற்போது பாஜகவுக்கும் திமுகவுக்கும் ஆன உறவு எப்படி வெளிப்படை தன்மையுடன் இருந்திருக்கிறது என்பதை பரப்புரையின் போது மீண்டும் போட்டு உடைத்திருக்கிறார்.
இதன்மூலம் திமுகவினர் இதுவரை தேர்தல் பரப்புரையில் கையில் எடுத்துக்கொண்ட பாஜக எதிர்ப்பு என்கிற ஆயுதத்தை விஜய் கையில் எடுத்திருக்கிறார்.
அதே சமயம் பாஜக எதிர்ப்பில் திமுகவை மௌனமாக்கி இருக்கிறார் அல்லது அடுத்த நிலைக்குத் தள்ளி இருக்கிறார்
இப்படி ஒரே சமயத்தில் அதிமுக, பாஜக, திமுக என்கின்ற மூன்று இயக்கங்களுக்கும் எதிரானவராக தன்னையும் தவெகவையும் முன்னிறுத்தி வெளிப்படையாக மக்கள் முன்பு முன்வைத்த தேர்தல் பரப்புரை பேச்சு பலவிதமான விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது என்பதே எதார்த்தம்.
தமிழக முதல்வர் விஜய் சொன்ன மாதிரி எங்களுக்கும் திமுகவுக்கும் இடையிலேதான் போட்டி என்பதை மறுபடியும் தனது மதுராந்தக இடைத்தேர்தல் பிரச்சார பரப்புரையின் போது விஜய் நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
முதல்வர் விஜய்யின் இந்த பரப்புரை பேச்சுக்குப் பிறகு, திரையில் நடித்து வந்ததை நிறுத்தி விட்டதாக சொன்ன விஜய் மக்களுக்கு முன்னால் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் என்று விமர்சிக்கிறார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின்.
ஆனால், அவரும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான உறவு பற்றியும் திமுகவுக்கும் பாஜகவுக்குமான உறவு பற்றியும் விஜய் பேசியது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தவில்லை.
அதேசமயம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனும் விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே விஜய்யின் தாயார் குறித்து கடுமையான பேச்சை நயினார் நாகேந்திரன் முன்வைத்ததை இந்த சமயத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆக, விஜய் சொன்னதை அதிமுகவும் பாஜகவும் நேரடியாக வழிமொழிந்திருக்கிறார்கள். திமுக மௌனமாக இருப்பதன் மூலம் விஜய்யின் பேச்சை வழிமொழிவதாகவே தெரிகிறது.
– யூகி