கிளறக் கிளற வெளி வரும் முந்தைய வழக்குகள்!

எங்கள் ஆட்சியில் தப்பு செய்யவும் விடமாட்டோம், ஏற்கனவே தப்பு செய்தவர்களையும் விடமாட்டோம் என்று அண்மையில் பேசியிருந்தார் முதல்வர் விஜய்.

அவர் சொல்கிறபடியே திமுக தரப்பில் உள்ள பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றமும் தலையிட்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்திய நிலையிலும் சம்பந்தப்பட்ட வழக்குகள் முன்னகராமல் அப்படியே நிற்கின்றன.

இதற்கு, தமிழக ஆளுநர் அனுமதி அளிக்காததை காரணமாக சொல்கிறார்கள் தவெக அமைச்சர்கள்.

தமிழகத்தில் உள்ள திமுக அமைச்சர்கள் பலர் மீது வெளிப்படையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து திமுக ஃபைல்ஸ் என்கின்ற ஒரு அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தவர் முன்னாள் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.

அப்போது அவர் கொடுத்த அந்த அறிக்கைக்கு பாஜக தலைமை என்ன மதிப்பு கொடுத்ததோ, அதே விதமான மதிப்பைத்தான் தற்போது அரசு தொடுக்கிற வழக்குகளையும் பாஜக அரசு கையாள்கிறது என்றால், ஏன் இந்த தடுப்பு நிலை?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலையீடு இல்லாமல் ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் தன்னிச்சையாக எந்த வழக்கையும் தடுக்க முடியுமா?

ஒரு புறத்தில் திமுகவை விமர்சிக்கிற பாஜக தலைமை, அதே திமுகவை ஏன் பாதுகாக்கிறது? அப்படி பாதுகாப்பதில் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன் என்ன?

ஒருவேளை திமுக தரப்பில் இருக்கிற அதிகபட்சமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைதான் பாஜக தலைமையை செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறதா?

இந்தக் கேள்வியை தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் வெளிப்படையாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்த சமயத்தில், தற்போது நமக்கு எழும் கேள்வி திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆட்சியில் அதிமுகவினர் மீது போடப்பட்ட ஏகப்பட்ட வழக்குகள், முக்கியமாக கொடநாடு வழக்கு, குட்கா ஊழல், கூடுதலான சொத்து சேர்த்த வழக்கு என அதிமுக தரப்பிலும் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையிலேயே இருக்கின்றன.

திமுக ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கூட தூசு தட்டப்படாத அத்தகைய வழக்குகளை, தவெக அரசு தூசி தட்டி கொடநாடு உள்ளிட்ட வழக்குகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்குமா?

திமுக மீது மட்டுமல்ல, அதிமுக மீதும் குற்றச்சாட்டும் தவெக அரசு சற்றும் தயங்காமல் இருவரையும் சம அளவில் நிறுத்தி ஆளுநர் போன்றோரின் தலையீடு இல்லாத வகையில் அல்லது அவர்களது அனுமதி மறுப்பதை பொது கவனத்திற்கு கொண்டு சென்று, பாஜக தலைமையை அழுத்தமாக வலியுறுத்தி அவர்களது அனுமதியைப் பெற்று செயல்பட்டால் தான் திமுக அரசுக்கும் தவெக அரசுக்குமான வேற்றுமையை பொதுமக்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

காமராஜர் ஒரு காலத்தில் சொன்ன மாதிரி, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான திமுக, அதிமுக இரு கட்சியினர் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை பாரபட்சமின்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வைப்பதே தவெக அரசின் முறையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான் அவருக்கு வாக்களித்த எளிய வாக்காளர்கள் விரும்புகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் நோக்கத்தை தவெக அரசு நிறைவேற்றட்டும்.

-அ.திருநாவுக்கரசு

Comments (0)
Add Comment