வயதைக் கடந்து வாழ்வில் ஜெயிப்போம்!

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடந்து போகும் காலத்தின் அளவையே வயது என்கிறோம். அதிலும் மனித வாழ்க்கையில் இது வெறும் எண்களைக் குறிக்கும் விஷயம் இல்லை. 

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக உருண்டோடும் ஒவ்வொரு நிகழ்விலும் பல்வேறு மாற்றங்களையும் அனுபவங்களையும் தரும் ஒரு தொடர்ச்சியான பயணமாக இது கருதப்படுகிறது.

குறிப்பாக, பெண்கள் தங்களின் 20 மற்றும் 30 வயதுகளில் குடும்பம், குழந்தை வளர்ப்பு, வேலை என பிறருக்காகவே ஓடியவர்கள் 40 வயதை எட்டும்போது, தங்களின் சுய அடையாளத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகின்றனர்.

தங்களின் தனிப்பட்ட முன்னேற்றம் இனி சாத்தியமில்லை என்று நினைக்கின்றனர்.

ஆனால், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில் ஏராளமான அனுபவ அறிவு தேவைப்படும் பதவிகளில் எல்லாம் இளவயது பெண்கள் வீற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொள்பவர்களுக்குத் தெரியாது, அவர்கள் மத்திம வயதை கடந்தவர்கள் என்று.

ஆனால், இவர்களின் உற்சாகம், துருதுறுப்பு, குதூகலம் என்று அனைத்தும் இருபது வயது பெண்களை ஒத்ததாக உள்ளது.

இந்தியாவில் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பெண்கள், தங்களை அலங்கரித்துக் கொள்வதை எப்படி முக்கியமானதாக கருதுகின்றனரோ அதேபோல் அலுவலகத்துக்கு நல்ல உடலமைப்புடன் செல்ல வேண்டும் என்பதற்கு அந்நாட்டு பெண்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

பேறுகாலம் முடிந்த பின்பு மீண்டும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

இங்கு இருப்பவர்களும் இத்தகைய மனநிலையை வளர்த்தெடுப்பதன் மூலம் உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

வாழ்வு சலிப்பு தட்டுகிறது என்பன போன்ற வார்த்தைகளை மத்திம வயது பெண்கள் நம் நாட்டில் அதிகமாக கூறுவதை காண முடிகிறது.

ஆனால், வளர்ந்த நாடுகளில் வாழும் பெண்களின் சிந்தனை இப்படி இருப்பதில்லை.

நம் நாட்டை பொறுத்தவரை, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை நினைவு கூறும்போது, அவர் பாட்டியாக தன்னுடைய பேரன் பேத்திகளுடன் கொஞ்சி விளையாடினார். அந்த அந்தஸ்தை அவர் மகிழ்ச்சியுடன் அனுபவித்தார்.

ஆனால், பிரதமராக பணிகளைக் கையாள்கிற போது தன்னை பாட்டியாக ஒரு கணம் கூட உருவகப்படுத்திக் கொள்ளவில்லை. உலகம் எப்போதும் அவரை ஒரு இரும்புப் பெண்மணியாக தான் கண்டிருக்கிறது.

காரணம் வயது என்பது உடம்பைவிட, மிக அதிகமாக மனதோடும் செயல்பாட்டோடும் தொடர்புடையது.

மலைப் பிரதேசங்களில் வாழும் வல்லூறு (vulture) என்று அழைக்கப்படும் பருந்துகளைத் தொலைக்காட்சியில் அனைவரும் பார்த்திருக்கக் கூடும்.

இந்தப் பருந்துகளுக்கு பொதுவாக 40 வயது வரை தான் ஆயுட்காலம். அந்த வயதை அடையும்போது எலி, பாம்பு மாதிரியான இரைகளை வேட்டையாடி பிடிக்க முடியாத அளவுக்கு அதன் அலகுகள் மழுங்கிப் போய்விடும். கால் விரல்களில் இருக்கும் நகங்களும் கூர்மையை இழந்து விடும்.

ஆகையால், இந்த சமயத்தில் ஒரு சில பருந்துகள், உணவு இன்றி இறந்து போய்விடும்.

அவற்றில் அதீத மனத்தின்மை வாய்ந்த பருந்துகள், தங்களின் முயற்சியால் கூடுதலாக முப்பது வருட வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மையாகும்.

இந்தப் பருந்துகள் 40 வயதான பருவத்தில், ஆளரவமற்ற ஏகாந்தமான மலைப் பிரதேசங்களுக்கு சென்று பெரும் மறுமலர்ச்சிக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும்.

இந்த காலத்தில் அவை மலைகளில் தன் அலகுகளை மோதி உடைத்துக் கொள்வதுடன் புதிதாக அலகு முளைக்கும் வரை அந்த மலைகளிலேயே தங்கியிருக்கும்.

அதேபோல, கூர்மை இழந்த தங்களது கால் நகங்களை அவை பிடுங்கிப் போட்டுவிட்டு புதிய நகங்கள் வளரும் வரை காத்திருக்கும்.

இவையெல்லாம் நடந்த பின்னர் மீண்டும் தங்களின் வசிப்பிடங்களுக்கு திரும்பி மேலும் முப்பது ஆண்டுகாலம் வாழும். இந்தப் பருந்துகளை போல நாமும் நம்மை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

மனதில் புதைந்துள்ள எண்ணற்ற நிறைவேறாத ஆசைகளை, எந்த வயதிலும் செயல்படுத்திப் பார்க்க முடியும். புதிய விஷயத்தை அடைய முயற்சிக்கும் பொழுது நெஞ்சுக்குள் உற்சாக அலை அடிப்பதை நிச்சயம் உணர முடியும்.

வயது முதிர்வு என்பது பலவீனம் அல்ல, அது அனுபவத்தின் முதிர்ச்சி என்கிற தெளிவு வேண்டும். ஒவ்வொரு வயதிற்கும் தனி அழகும் கடமையும் உள்ளது.

கடந்து போகும் ஒவ்வொரு வயதையுமே மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் ஏற்றுக்கொள்வதே சிறந்த வாழ்க்கையைப் பெற்றுத் தரும்.

S. வாணி

Comments (0)
Add Comment