மனிதர்களின் உயிர் வாழ்விற்கும் ஆரோக்கியம் பேணுவதற்கும் பாதுகாப்பான குடிநீர் அவசியமான அடிப்படை தேவையாகும். இது நோய்களைத் தடுத்து உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
ஆனால், தற்காலத்தில் நிலத்தடி மற்றும் குழாய் வழியே வரும் தண்ணீரில் பல்வேறு மாசுக்கள் கலக்கின்றன.
இந்தியாவில் 70 சதவீத தொற்று நோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளமாகும். நீரை காய்ச்சி, வடிகட்டி ஆற வைத்து குடிப்பதற்கு எல்லாம் நம்மில் பல பேருக்கு நேரமோ பொறுமையோ இருப்பதில்லை.
தண்ணீர் கேன்கள் தற்போது புழக்கத்தில் பரவலாகக் காணப்பட்டாலும் அந்த தண்ணீரின் தரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சுகாதாரமற்ற இடங்களில் நீர் நிரப்பப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகளும் காணப்படுகிறது.
இப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிப்பவை தான் வாட்டர் ப்யூரிஃபையர்கள்.
அறிமுகமாகி ஆண்டுகள் பல கடந்த பின்பும் நடுத்தர மக்களால் அதிகம் பயன்படுத்தப்படாத ஒன்றாகவே உள்ளது. ஆகையால், இதனை பற்றிய புரிதல் அவசியம் ஆகிறது.
மூன்று முறைகளில் வாட்டர் பியூரிபையர்கள் அசுத்தமான நீரைப் பாதுகாப்பான குடிநீராக மாற்றுகின்றன.
உப்பு தண்ணீரை சுத்தம் செய்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராக கொடுப்பது Reverse Osmosis எனக் கூறப்படும் RO வகை.
நிலத்தடி நீர் மற்றும் கிணற்று நீரை சுத்திகரிப்பு செய்து நல்ல தண்ணீராக கொடுப்பது Ultra Violet எனக் கூறப்படும் UV வகை.
சில மாடல்களை சமையல் அறையில் உள்ள பைப்புடன் இணைத்து சுவரில் பொருத்திக் கொள்ளலாம். தனியாக இட வசதி தேவையில்லை.
நம் வீட்டு குழாயில் வரும் தண்ணீரில் உள்ள குளோரின், கிருமிகள் போன்றவற்றை ஏழு கட்டங்களாக சுத்தம் செய்து நல்ல தண்ணீரை நமக்கு கொடுப்பதுதான் வாட்டர் ப்யூரிஃபையரின் வேலை.
இக்கருவி ஒரு மணி நேரம் இயங்குவதற்கு இரண்டு யூனிட் மின்சாரம் செலவாகும். பெரும்பாலும் எல்லா வகைகளுமே ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கின்றன.
பியூரிஃபயர் மூலம் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர் உடலுக்கு எவ்வித தீங்கையும் கொடுக்காது.
அப்படியே குடிக்கலாம், சமையலுக்கும் பயன்படுத்தலாம். கொதிக்க வைக்க வேண்டிய தேவையும் ஏற்படாது.
சில இடங்களில் கிடைக்கும் தண்ணீர் அதிக உப்பு தன்மையுடன் இருக்கும். பெரிய தொழிற்சாலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் எண்ணெய் தன்மையுடன் கூடிய தண்ணீர் வரும்.
இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு Ultra Filtration முறையில் சுத்திகரிப்பு செய்யும் UV வாட்டர் ப்யூரிஃபயர் தேவைப்படும்.
அன்றாடத் தேவைக்கு வீட்டில் பயன்படுத்தப்படும் பியூரிஃபயர்கள் ஒரு மணி நேரத்திற்கு 12 லிட்டரில் இருந்து 20 லிட்டர் வரை தண்ணீரை சுத்தம் செய்து தரக்கூடியவை.
அதிக தண்ணீர் தேவைப்படுபவர்கள் அதற்கேற்ற வசதி உள்ளவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு பியூரிஃபையரும் 6000 லிட்டர் வரை தண்ணீரை சுத்திகரித்து கொடுக்கும் ஆற்றல் உள்ளது.
அதற்குப் பிறகு அதில் உள்ள ஃபில்டரை மாற்ற வேண்டும். 6000 லிட்டரை நெருங்கும்போது பில்டரை மாற்றுவதற்கான அலர்ட் வசதிகள் சில கருவிகளில் கிடைக்கின்றன. இதற்கு பராமரிப்பு என்று தனியாக எதுவும் தேவைப்படாது.
சில கருவிகளில் பில்டர் செய்த தண்ணீர் தவிர்த்து, அழுக்குகள் ஒரு பகுதியில் தேங்கி நின்று விடும். அவற்றை மட்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது.
மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதன் மூலம் பழுது ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை சேமித்து வைத்திருந்தால் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் மறுபடியும் கிருமிகள் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சிலவற்றில் சில்வர் நானோ டெக்னாலஜி பொருத்தப்பட்டு இருக்கும். இந்த வசதி இருந்தால் நாம் சேமித்து வைத்திருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்த கிருமி தாக்குதலுக்கும் உள்ளாகாது.
ஆனாலும், தண்ணீரை அவ்வப்போது புதியதாக பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.
மேலும் தண்ணீரை ஸ்டோரேஜ் முறை மூலம் சுத்தப்படுத்துவதற்கும் நிறைய வசதிகள் இருக்கின்றன.
நம் வீட்டிற்கு வரும் மெட்ரோ வாட்டரை சுத்தப்படுத்தி கொடுப்பதற்காகவே குறைந்த செலவில் ஸ்டோரேஜ் பியூரிபையர்கள் சந்தையில் கிடைக்கின்றன.
இதன் மூலம் குறைந்தது 20 லிட்டர் தண்ணீர் வரைக்கும் சேமித்து சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இதிலும் பில்டரை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தீங்கு விளைவிக்கும் அசுத்தங்களை களைதல், நச்சுத்தன்மையை நீக்குதல், விரும்பத்தகாத நாற்றத்தைப் போக்குதல், சுவையை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் காத்தல் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்கும் வாட்டர் பியூரிஃபையர்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான குடிநீரை பெறுவோம்.
S. வாணி