வயிற்றில் உயிர் வாழும் பாக்டீரியா!

வயிற்றில் புண் ஏற்படுவதை ‘அல்சர்’ என்று சொல்கிறோம். இது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இந்த அல்சருக்குப் பின்னால் பல ஆண்டுகளாக மனிதர்களுடன் பயணித்து வந்த ஒரு வகை பாக்டீரியாவின் வரலாறு இருக்கிறது.

அதன் பெயர் – எச். பைலோரி (H. pylori)

1892-ம் ஆண்டு, இத்தாலியைச் சேர்ந்த மருத்துவரும் உடற்கூறு ஆய்வாளருமான Giulio Bizzozero, நாய்களின் வயிற்றைப் பற்றிய ஆய்வில் சுருள் போன்ற வடிவத்தில் இருந்த சில நுண்ணுயிரிகளைக் கவனித்ததாக பதிவுகள் இருக்கின்றன.

இதற்குப் பிறகும் மனிதர்கள் மற்றும் பல விலங்குகளின் வயிற்றில் இதுபோன்ற சுருள் வடிவ பாக்டீரியாக்கள் இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், அந்தக் கண்டுபிடிப்புகள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. காரணம், வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் மிகவும் சக்தி வாய்ந்தது.

அப்படியிருக்கும்போது, அந்த இடத்திலேயே ஒரு பாக்டீரியா உயிருடன் இருந்து வளர முடியும் என்பதை மருத்துவ உலகம் எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே வயிற்றில் காணப்பட்ட அந்த நுண்ணுயிரிகள் ஆய்வின் போது ஏற்பட்ட மாசுபாடு (அ) முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக இருக்கலாம் என்று கருதப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் அதிகப்படியான வயிற்று அமிலம், மன அழுத்தம், காரமான உணவு போன்றவை அல்சருக்குக் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்களிடையே கருத்துகள் இருந்தன.

அமிலத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் அறிகுறிகளும் புண்களும் கட்டுப்படுத்தப்பட்டதால், இந்தக் கருத்து மேலும் வலுவடைந்தது.

ஆனால், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் ராபின் வாரன் (J.Robin Warren) என்ற நோயியல் நிபுணர், நோயாளிகளின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட திசு மாதிரிகளை நுண்ணோக்கியில் தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

சில நோயாளிகளின் வயிற்றுப் படலத்தில் சுருள் போன்ற சிறிய பாக்டீரியாக்கள் இருப்பதை அவர் கவனித்தார்.

அந்த பாக்டீரியாக்கள் காணப்பட்ட பகுதிகளில் வயிற்றில் அழற்சியும் இருப்பதை அவர் கவனித்தார்.

இந்த பாக்டீரியாவுக்கும் வயிற்றில் ஏற்படும் அழற்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கேள்வி வாரனுக்கு ஏற்பட்டது.

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில் பேரி மார்ஷல் (Barry Marshall) என்ற இளம் மருத்துவர் வாரன் உடன் இணைந்தார்.

இருவரும் சேர்ந்து நோயாளிகளின் வயிற்றுத் திசு மாதிரிகளை ஆய்வு செய்யத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் அந்த பாக்டீரியாவை ஆய்வகத்தில் வளர்ப்பது மிகவும் கடினமாக இருந்தது.

1982-ல் ஈஸ்டர் விடுமுறை காரணமாக, ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த culture plate வழக்கத்தைவிட சில நாட்கள் கூடுதலாக அப்படியே இருந்தது.

திரும்பி வந்து பார்த்தபோது, அதில் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சுருள் வடிவ பாக்டீரியா வளர்ந்திருந்தது.

அந்த பாக்டீரியாவுக்கு Campylobacter pylori என்று பெயர் வைக்கப்பட்டது.

பின்னர் அதன் மரபணு மற்றும் உயிரியல் பண்புகள் வேறுபட்டவை என்று கண்டறியப்பட்டதால், 1989-ல் அதன் பெயர் Helicobacter pylori என்று மாற்றப்பட்டது. இன்று இது பொதுவாக H. pylori என்று அழைக்கப்படுகிறது.

வாரனும் மார்ஷலும் தொடர்ந்து ஆய்வு செய்தபோது, வயிற்றில் அழற்சி மற்றும் புண் இருந்த பல நோயாளிகளின் மாதிரிகளில் இந்த பாக்டீரியா இருப்பது தெரியவந்தது.

1984-ல் வெளியான அவர்களின் ஆய்வில், வயிற்றுப் புண் கொண்ட நோயாளிகளிலும், சிறுகுடலின் ஆரம்பப் பகுதியில் ஏற்படும் duodenal ulcer கொண்ட நோயாளிகளிலும் இந்த பாக்டீரியா காணப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.

இந்த பாக்டீரியாதான் வயிற்றில் அழற்சியையும் புண்ணையும் ஏற்படுத்துகிறதா என்பதை நிரூபிக்க மார்ஷல் தன்னையே ஆய்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டார்.

1984-ம் ஆண்டு, எச். பைலோரி வளர்க்கப்பட்ட culture-ஐ தானாகவே உட்கொண்டார் மார்ஷல். அதற்கு முன்பு அவருடைய வயிற்றுப் பரிசோதனை சாதாரணமாக இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டன.

வயிற்றில் கடுமையான அழற்சி உண்டானது. வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியிலும் எச். பைலோரி கண்டறியப்பட்டது.

பின்னர் அவருக்கு antibiotics மற்றும் bismuth அடிப்படையிலான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.

இந்தச் சம்பவம் எச். பைலோரி வயிற்றில் அழற்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதற்கான முக்கியமான ஆதாரமாக அமைந்தது.

அதற்குப் பிறகு பல நோயாளிகளிடம் செய்யப்பட்ட மருத்துவ ஆய்வுகள் மற்றும் சிகிச்சை ஆய்வுகள் இந்தத் தொடர்பை மேலும் உறுதிப்படுத்தின.

ஆரம்பத்தில் அல்சர் என்றால் வயிற்று அமிலத்தைக் குறைப்பதில்தான் முக்கிய கவனம் இருந்தது.

ஆனால், எச். பைலோரி தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, அந்த பாக்டீரியாவையே அழிப்பதும் சிகிச்சையின் முக்கியமான பகுதியாக மாறியது.

அமிலத்தைக் குறைக்கும் மருந்துகள் புண் குணமடைய உதவினாலும், எச். பைலோரி தொடர்ந்து வயிற்றில் இருந்தால் சில நோயாளிகளிடம் புண் மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருந்தது.

பாக்டீரியாவை அழிப்பதன் மூலம் இந்தச் சுழற்சியை உடைக்க முடியும் என்பது பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெளிவானது.

Bismuth சேர்மங்களில் எச். பைலோரி பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை இருப்பதும் கண்டறியப்பட்டதால் antibiotics மற்றும் வயிற்று அமிலத்தைக் குறைக்கும் மருந்துகள் இணைந்த சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டன.

இன்று எச். பைலோரி தொற்று இருக்கிறதா என்பதை அறிய Endoscopy மூலம் வயிற்றின் உள்ளே பார்த்து திசு மாதிரி எடுத்து பரிசோதிக்கலாம். அதேபோல் urea breath test என்ற மூச்சுப் பரிசோதனை மற்றும் மலப் பரிசோதனை போன்ற பல முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

எச். பைலோரி வெறும் அல்சருடன் மட்டும் தொடர்புடையது அல்ல. நீண்ட காலம் இந்த பாக்டீரியா வயிற்றில் இருந்தால் தொடர்ந்து அழற்சி ஏற்படலாம். சிலரிடம் வயிற்றுப் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன.

ஆனால் வயிற்றில் ஏற்படும் எல்லா புண்களுக்கும் எச். பைலோரி தான் காரணம் என்று சொல்ல முடியாது. Aspirin, ibuprofen போன்ற சில வலி நிவாரண மருந்துகளின் நீண்டகாலப் பயன்பாடும் வயிற்றுப் புண்ணுக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

எனவே, அல்சர் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Warren மற்றும் Marshall-ன் ஆய்வுகள் ஆரம்பத்தில் அனைவராலும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கருத்து அப்போது நிலவிய மருத்துவக் கருத்துகளுக்கு முற்றிலும் மாறானதாக இருந்தது.

ஆனால், ஒரு அறிவியல் கருத்து உண்மையா என்பதை முடிவு செய்வது அதற்கான ஆதாரங்கள் எவ்வளவு வலுவாக இருக்கின்றன என்பதைக் கொண்டுதான்.

இறுதியில் 2005-ம் ஆண்டு Barry Marshall மற்றும் J.Robin Warren இருவருக்கும் உடலியல் (அ) மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சில நேரங்களில் அறிவியலில் பெரிய மாற்றங்கள் ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடிப்பதிலிருந்து மட்டும் வருவதில்லை. ஏற்கனவே நம் கண்களுக்கு முன்னால் இருந்த ஒரு விஷயத்தை, “இது உண்மையில் என்ன?” என்று மீண்டும் கேட்பதிலிருந்தும் வரலாம்.

– சங்கீதா

Comments (0)
Add Comment