தூக்கமின்மையைத் தூர விரட்டுவோம்!

அனைத்து உயிர்களுக்கும் இயற்கை வழங்கியுள்ள மிகச்சிறந்த கொடையே தூக்கம். மனித வாழ்க்கையில் இதன் பங்கு அளப்பரிய ஒன்றாகும்.

மனமும் உடலும் அந்நாளின் உழைப்புக்கு பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளும் நிலை தான் தூக்கம்.

நமது அன்றாட வாழ்வில் நாம் விழித்திருப்பதற்கும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கும் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு நாம் தூங்கும் நேரத்திற்கும் உண்டு.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்திலேயே கழிக்கிறான் என்கிறது அறிவியல்.

இது வீணான நேரமல்ல; மாறாக உடலும் மனமும் தங்களை புதுப்பித்துக் கொள்ள இயற்கையால் வழங்கப்பட்டு இருக்கும் கால அவகாசமாகும்.

மேலும், அன்றாட பணிகளை கவனத்துடனும் உத்வேகத்துடனும் முழு திறனை வெளிப்படுத்தி செய்யவும் முழுமையான தூக்கம் மிகவும் அவசியம்.

ஒருவருக்கு ஒரு நாளில் குறைந்தது ஆறு மணி நேரம் முதல் அதிகபட்சமாக 9 மணி நேரம் வரை தூக்கம் தேவைப்படும்.

இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தூங்கினால் அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில காரணங்களினால் ஒரு நாள் அல்லது இரு நாள் இதிலிருந்து விடுபட நேரலாம்.

ஆனால், இதுவே தொடர்கதையானால் கவனக் குறைவு, ஞாபக மறதி, சுறுசுறுப்பு இல்லாமை, தலைவலி, மன உளைச்சல், பசியின்மை, கண் எரிச்சல், உடல் உஷ்ணம் உள்ளிட்ட பல உபாதைகளை இது ஏற்படுத்தக் கூடும்.

தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல, அது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு நன்மைகளை தரும் ஒரு ரசாயன செயல் முறையாகும்.

நாம் தூங்கும்போது நமது உடல் திசுக்களை பழுது பார்க்கிறது, தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

முழுமையான இரவு உறக்கமே உடலுக்கு நன்மை தரும். நம் அன்றாட பணிகளுக்கு ஏற்பவும், உடல் சோர்வுக்கு ஏற்பவும் உறங்க வேண்டும். தூக்கமானது இரண்டு நிலைகளை கொண்டது.

முதல் நிலை, மனதின் நலனுக்கானது. இந்த நிலையில் தான் நாம் கனவு காண்கிறோம். செல்களின் சேதாரங்களை சரி செய்யவும் அவற்றின் மறு கட்டமைப்புக்கும் இது துணை புரிகிறது.

இரண்டாம் நிலை, ஆழ்ந்த தூக்கத்தின் நிலையாகும். இதில் உடல் சோர்வு நீங்கி திசுக்கள் வளர்ச்சி அடைகின்றன.

இரவு உணவு சாப்பிட்ட உடனேயே படுக்கைக்கு செல்வது, படுத்துக்கொண்டே மின்னணு சாதனங்களை உபயோகப்படுத்துவது, போன் பேசியப்படியே உறங்கிப் போவது, நடு இரவில் விழித்துக் கொள்வது, ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது ஆகியவை தூக்கம் தொடர்பான தவறான பழக்கங்கள் ஆகும்.

மன அழுத்தம், வேலைச்சுமை, அடிக்கடி நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வது போன்ற அடிப்படை காரணங்கள் கூறப்பட்டாலும் இவற்றுடன் மருத்துவ காரணங்களாக இதய பிரச்சினைகள், சிறுநீரகக் கோளாறு, நீண்ட நாள் உபாதைகள் போன்றவையும் முக்கிய காரணமாக உள்ளன.

தவிர அதிக மகிழ்ச்சி, அதீத சோர்வு, இரவு நேர பணி என தூக்கம் குறைவதற்கான காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஒவ்வொருவருக்கும் அவரின் வயதிற்கு ஏற்ப தூங்குவதற்கான கால அளவு மாறுபடுகிறது.

குழந்தைகள் தினமும் 10 முதல் 14 மணி நேரமும், இளையோர் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரமும், பெரியவர்கள் ஏழு முதல் எட்டு மணி நேரமும் உறக்கம் கொள்வது அவசியம்.

தூக்கமின்மை, ஒருவரின் உடல் செயல்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்தும் போது அது ஓர் ஆரோக்கியக் குறைபாடாக உருவெடுக்கிறது என்பதை உணர வேண்டும்.

அவ்வாறிருப்பின் முழுமையான தூக்கம் கிடைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்ளுதல், இரவு நேர பணி இருப்பின், பகலில் அதை ஈடுகட்டும் விதமாக தடைபடாத முழுமையான தூக்கத்தை மேற்கொள்ளுதல், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்,

இரவில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுதல், மிதமான நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், காற்றோட்டமான அறைகளில் உறங்குதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் பொழுது நல்ல மாறுதல்களை பெற முடியும்.

முறையான தூக்கம் என்பது ஆரோக்கிய வாழ்விற்கான அஸ்திவாரம் என்பதை உணர்ந்து, அதனை உடலுக்கு வழங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வசமாக்கிக் கொள்வோம்.

S. வாணி

Comments (0)
Add Comment