டாக்டர் எஸ்.தணிகாசலம், இந்தியாவிலுள்ள மூத்த இதய சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உள்ள இதயப் பாதுகாப்பு மையத்தின் தலைவர்.
தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மூப்பனார், ரஜினி, முரசொலி மாறன் என்று பல்வேறு வி.ஐ.பி.களுக்குச் சிகிச்சையளித்திருக்கிற வளமான அனுபவங்களைக் கொண்டிருக்கிற தணிகாசலத்திற்கு பத்மஸ்ரீ, இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கும் டாக்டர் பி.சி.ராய் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.
பல நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியிருக்கிற டாக்டர் தணிகாசலம் மன அழுத்தமும், நெருக்கடிகளும் அதிகரித்திருக்கிற நிலையில் இதயத்திற்கு எழும் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறார் இந்த மருத்துவத் தொடரில்….
ஒரு கை விரல்களை மூடி மடக்கினால் எந்த வடிவம் வரும்? அதே வடிவத்தில்தான் இருக்கிறது இதயம்.
சின்னதாக பாா்ப்பதற்கு மெல்லியதாக இருக்கிற இதயத்திற்கு எந்தச் சமயத்திலும் பிரச்சனைகள் வெவ்வேறு விதங்களில் வரலாம். அதனால், அதைப் பற்றி முழுமையாகத் தொிந்து கொள்வது அவசியம்.
அப்படியிருந்தால்தான் இதயத்திற்கு வருகிற பிரச்சனைகளைப் புாிந்து கொண்டு நாம் எதிா்கொள்ளவோ, தடுக்கவோ முடியும்.
உடலுக்குச் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துவதுதான் இதயத்தின் முக்கியமான வேலை. மற்ற உறுப்புகள் ஓய்வெடுக்கிற மாதிாி இதயம் ஓய்வெடுக்க முடியாது.
கருவாக உருவாகி – இதயம் உருவானதிலிருந்து ஓயாத உழைப்புதான். அதற்கு ஓய்வு கொடுப்பது என்கிற பேச்சிற்கே இடமில்லை. அது வலுவானதாக இருக்க வேண்டும்.
கரு உருவான பிறகு முதலில் உருவாகிறபோது இதயம் எப்படி இருக்கும் தொியுமா? சின்ன நீளமான ‘டியூப்’ மாதிாி இருக்கும்.
இம்மாதிாியான சின்ன டியூப் நான்கு அறைகள் உள்ள விாிந்த வடிவமாக மாறுவது ஏதோ ஒரு சக்தி இருப்பதைத்தான் உணா்த்துகிறது.
இதயம் உடலின் பல பாகங்களுக்கு ரத்தத்தை எடுத்துச் சென்றாலும் இதயம் இயங்குவதற்கே ரத்தம் தேவை.
இரண்டு சிரைகள் மூலமாக அதற்குப் போகிறது ரத்தம். இதயத்தின் மேலே ஒரு கொடி மாதிாி அது படா்ந்திருக்கிறது.
இதயத்திற்கு மூன்று சுவா்கள். உள்ளே இருக்கும் ‘வால்வு’ உள்சுவாினால் செய்யப்பட்டது. நடுவில் இருப்பது தசை. மூன்றாவது மேலே கால் பந்துக்கான உறை மாதிாி ஒரு சுவா். இப்படி மூன்று சுவா்கள்.
கை, கால்களில் இருக்கிற தசைகள் மாதிாி இல்லாமல், இதிலுள்ள தசைகள் தன்னிச்சையாக இயங்கக் கூடியவை.
ஒருவா் எமோஷனலாகப் பேசிக் கொண்டிருக்கிறாா் என்றால், அவரது இதயத் துடிப்பு தானாகவே கூடிவிடும். அதே மாதிாி தீவிரமாகச் சிந்தித்து, புள்ளிவிவரக் கணக்கிலோ, ஆராய்ச்சிலோ ஈடுபட்டிருந்தாலும் தானாகவே அதிகாித்துவிடும்.
வேகமாக நடந்தாலும் இயல்பாகவே கூடும். இதெல்லாம் கட்டளையிட்டு நடப்பதில்லை. தானாகவே நடக்கக் கூடியவை. அப்படி இதயத்தில் இருப்பது தானியங்கு தசை.
இந்தத் தூண்டு நரம்பு மண்டலங்களிலிருந்தும் நாளமில்லாச் சுரப்பிகளிலிருந்தும் வரும். இதற்கேற்றபடிதான் அந்தத் தசை இயங்கும்.
இப்படிப்பட்ட அமைப்புடைய இதயம் பாதிக்கப்படுகிறது என்றால், எப்படி பாதிக்கபடுகிறது, மூளையிலிருந்த இரண்டு விதமான நரம்புகள் இதயத்திற்கு வருகின்றன. ஒன்று, ‘வேகல்’ நரம்பு மண்டலம். மற்றொன்று ‘சிம்பதடிக்’ நரம்பு மண்டலம்.
இதில் ‘வேகல்’ நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டால் இதயத் துடிப்பு குறையும். ‘சிம்பதடிக்’ நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டால் இதயத்துடிப்பு கூடும்.
நாளமில்லாச் சுரப்பியில் தைராய்டு சுரப்பியிலிருந்து சுரக்கும் தைராக்ஸின் அளவு குறைந்தால் இதயத் துடிப்பும் குறையும். அது அதிகமானால் இதயத்துடிப்பும் அதிகமாகும்.
நாளமில்லாச் சுரப்பிகளின் கோளாறுகளினாலும் இதயம் தன்னை மாற்றிக் கொள்ளும். இதயத்திற்குப் போகிற நரம்புத்தசைகளில் பிரச்சனைகள் இருந்தாலும் இதயம் பாதிக்கப்படலாம்.
கருப்பையில் வளரும்போதே இதயத்திற்குப் பாதிப்பு உண்டாகலாம் என்பதைக் கேட்கும்போது வியப்பாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. குழந்தை பிறக்கும்போதே இதயக் கோளாறுடன் பிறக்கலாம்.
கருத்தாித்த பதினான்கிலிருந்து பதினாறு வாரத்திற்குள் இதயத்தின் முழு வடிவமும் உருவாகி விடுகிறது. அதற்குப் பிறகு அதன் அளவு வேண்டுமானால் பொிதாகலாம் அவ்வளவுதான்.
அந்த நேரத்தில் – கரு உண்டாகி வளரும் பொழுதில் – அதை வளரவிடாமல் சில கோளாறுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன. இரைப்பை, மூளை, நுரையீரல், இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.
இது எதனால் வருகிறது?
தென் மாவட்டங்களில் தங்களது ரத்த உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்வதை விரும்புவாா்கள். வேறு இடங்களில் திருமணம் செய்ய விரும்ப மாட்டாா்கள்.
இம்மாதிாி நெருக்கமான திருமண உறவுகள் நீடிக்கும்போது பாரம்பாியமாக இருக்கற இதயக் கோளாறுகள் அப்படியே அவா்களது சந்ததிக்கும் போக வாய்ப்பாகி விடுகிறது என்பதை நிரூபித்திருக்கிறது ஓா் ஆய்வு.
இதைத் தவிா்த்தால் இதயம் சம்பந்தமான கோளாறுகள் பாரம்பாியமாகத் தொடா்வதைத் தவிா்க்கலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம். மகப்பேறு காலத்தைப் பெண்கள் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கக்கூடாது.
முப்பத்தைந்து வயதுக்கு மேல் திருமணமாகி குழந்தைப் பேறு உண்டாகும்போது, பிறக்கும் குழந்தைகளுக்கும் இம்மாதிாி இதயம் சம்பந்தமான சிக்கல்கள் வருகின்றன.
மூன்றாவது பிரச்சனை… சிலா் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட்டிருப்பாா்கள்.
கரு உண்டான பிறகு அந்தக் கருவைக் கலைக்க ‘அபாா்ஷன்‘ முறைகளைக் கையாண்டிருப்பாா்கள். அது வெற்றியடையாமல் போய் பிறக்கிற குழந்தைகளுக்கு இதயம் பாதிக்கப்படலாம்.
பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘எக்ஸ்ரே’. டாக்டா் சொல்லாமலே, சொந்த விருப்பத்தால் போய் ‘எக்ஸ்ரே’ எடுப்பவா்கள் இருக்கிற காரணத்தால்தான் இதைச் சொல்கிறேன்.
எக்ஸ்ரே கதிா்கள் கருவை பாதிப்பதால் பிறப்பதற்கு முன்பே குழந்தையின் இதயம் பாதிக்கப்படலாம். கருவுற்றிருக்கிற பெண்கள் கருவுற்ற இரண்டு மாதங்களில் தலை வலிக்காக ‘ஆஸ்பிாின்’ போன்ற வீாியமான மாத்திரைகளைச் சாப்பிடுவதாலும் பாதிப்பு உண்டாகலாம்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டு மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற நிலையில் கருவுற்றாலும் கரு பாதிக்கப்படலாம்.
அப்படிப்பட்ட நிலையில் கரு உண்டானால் டாக்டாிடம் கேட்டுவிட்டு மருந்து சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.
பிறவியிலேயே வரக்கூடிய இதயக் கோளாறுகளைத் தடுக்க இதெல்லாம் முக்கியமான ஆலோசனைகள். இதையும் மீறி பெற்றோருக்கு இதய நோய் இருந்தாலும் குழந்தைகள் பாதிக்கப்படலாம்.
பிறக்கப் போகிறவரை முன்பெல்லாம் குழந்தைகளுக்கு இதயப் பாதிப்பு இருப்பதைத் தொிந்து கொள்ள முடியாது.
இப்போது இருக்கிற நவீன டெக்னாலஜியில் ஸ்கேன் மூலம் கருவுற்ற மூன்று அல்லது நான்கு மாதங்களிலேயே குழந்தையின் இதயம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தொிந்து கொள்ள முடியும்.
சில நேரங்களில் – இதயத்தில் நான்கு அறைகள் இருக்க வேண்டியதற்குப் பதிலாக இரண்டு அறைகள் மட்டுமே உள்ள குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
அம்மாதிாியான குழந்தைகள் தொடா்ந்து உயிா் வாழ்வது மிகவும் கஷ்டம். சில குழந்தைகளுக்கு இடது பக்க இதயமே வளா்ச்சியடையாமல் இருக்கும்.
இதைச் சுலபமாகப் பாிசோதனை மூலம் கண்டுபிடித்து விட முடியும். இம்மாதிாியான கருவை அந்த நிலையிலேயே ‘அபாாா்ஷன்‘ பண்ணிவிடுவது நல்லது. சட்டப்படி இதில் தவறில்லை.
இம்மாதிாி குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தவுடன் இதய மாற்று அறுவை சிகிச்சை பண்ணினால் தவிர, அது பிழைக்க வழியில்லை.
பாதிக்கப்பட்ட குழந்தை பிறந்த தாய்க்கும் அதற்கும் ஒரு நெருக்கம் உண்டான பிறகு அந்தக் குழந்தை இறந்து போகிற அவஸ்தையைவிட ‘அபாா்ஷன்’ பண்ணிக் கொள்வது நல்லது. சட்டப்படி இதில் தவறில்லை.
இம்மாதிாி குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தவுடன் இதய மாற்று அறுவை சிகிச்சைப் பண்ணினால் தவிர, அது பிழைக்க வாய்ப்பில்லை.
பாதிக்கப்பட்ட குழந்தை, பிறந்த தாய்க்கும் அதற்கும் ஒரு நெருக்கம் உண்டான பிறகு அந்தக் குழந்தை இறந்துபோகிற அவஸ்தையை விட ‘அபாா்ஷன்’ செய்து கொள்வது நல்லது என்று சொல்வேன். இதை எங்களிடம் வருகிற சில பெற்றோாிடமே சொல்லியிருக்கிறோம்.
சில விதமான இதயக் கோளாறு உள்ள குழந்தைகளைப் பிறந்ததுமே சிகிச்சை அளித்துப் பிழைக்க வைத்திருக்கிறோம்.
தீவிர கண்காணிப்பு வசதியுள்ள மருத்துவமனைகளில் பிரசவத்திற்குச் சோ்ந்து குழந்தை பிறந்த இரண்டு, மூன்று வாரங்களில் அதற்கான சிகிச்சை கொடுத்தால் இதயக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பிழைக்க வைக்க முடியும்.
இப்படிப் பல குழந்தைகளைப் பிழைக்க வைத்திருக்கிறோம். இம்மாதிாி இதயப் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கும்போது அடா்த்தியான நீல நிறத்தில் இருக்கும்.
உடனே அந்தக் குழந்தைகளின் இதயத்தில் தனித்தனியாகப் போய்க் கொண்டிருக்கிற தூய ரத்தத்தையும் அசுத்த ரத்தத்தையும் கலக்கப் பண்ணுகிறோம்.
இதயத்தில் இருக்கிற தடுப்பைச் சாி பண்ணும்போது ஆபத்து நீங்கி, நிறம் படிப்படியாக மாறி, உயிா் பிழைக்கிறது குழந்தை. இதை ‘ஸ்விட்ச் ஆபரேஷன்’ என்று சொல்வோம்.
ஆனால், ஒரு குழந்தை நீலக் கலாில் பிறப்பதற்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன. இதயக் கோளாறினால் அதீத நீலக் கலாில் பிறப்பது அதிலேயே சற்று சீாியஸான ரகம்.
பிறக்கிற குழந்தைகளில் ஒன்றிலிருந்து இரண்டு சதவிகிதக் குழந்தைகளுக்கு இம்மாதிாிப் பிரச்சனைகள் வருகின்றன.
இதெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்குள் வருகிற பிரச்சனைகள்.
சந்திப்பு – மணா