கோட்டைக் கொடிமரத்திற்கு இப்படியொரு பின்னணி!

சென்னையில் தற்போது தலைமைச் செயலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து வேறொரு இடத்திற்கு தலைமைச் செயலகத்தை மாற்றுவதற்கு இதுவரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே முயற்சித்திருக்கின்றன. சில இடங்களைத் தேர்வும் செய்திருக்கின்றன.
 
கலைஞர் காலத்தில் அதற்கான கட்டிடமே கட்டி முடிக்கப்பட்டு அது வீணான அரசியலில் சிக்கி மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது.

இப்போது விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்ததும் மறுபடியும் புதிய தலைமைச் செயலகம் பற்றியும் அதற்கான வெவ்வேறு இடங்கள் பரிசீலனையில் இருப்பது பற்றியும் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.
 
இந்த நிலையில் தற்போது இருக்கிற புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொடிமரத்தைப் பற்றிய சிறிய கட்டுரை மீண்டும் உங்கள் பார்வைக்கு…
***
 
‘’ஆளுகின்றவர்களின் மூளையான தலைமைச் செயலகம்’’
 
தலைமைச் செயலகம் என்றால் பலருக்குத் தெரியும். செகரட்டேரியட் என்றாலும் தெரியும்.

ஆனால் முந்நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்றால் பலருக்கு மிகவும் மங்கலாகத் தான் தெரியும்.
 
மெரினா கடற்கரையோரம். வெள்ளை நிறத்தில் கட்டிடங்கள். எப்போதும் சைரன் வைத்த கார்கள் வளைய வரும் இடமாக இப்போதும் துடிப்புடன் இருக்கும் இந்த இடத்தில் பெரும் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் இன்றும் மிஞ்சியிருக்கின்றன.
 
பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கடலோரத்தில் உள்ள இந்த இடத்தின் உரிமையாளராக இருந்தவர் தாதர்லா வெங்கடாத்திரி நாயக்கர்.
 
ஆங்கிலேயக் கிழக்கந்தியக் கம்பெனி அப்போது தான் கால் பதித்து நிர்வாகத்திற்காகத் தகுந்த இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
 
கடலோரத்தில் விரிந்து பரந்த இடம். எப்போதும் சலசலத்து வீசும் கடல் காற்று.ரம்யமான சூழல். ஆங்கிலேயர்களுக்கு அந்த இடம் பிடித்துப் போய்விட்டது.
 
கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்டேயும், ஆன்ட்ரூ கோகனும் சேர்ந்து இந்த இடத்தை அதன் உரிமையாளரான நாயக்கரிடமிருந்து வாங்கினார்கள்.
 
வரைபடம் பிரிட்டிஷ் கட்டிடப்பாணியில் தயாராகி அடிக்கல் நாட்டப்பட்டது 1640 ஏப்ரல் 23 ஆம் தேதியில். நிதானமாக அதைக் கட்டி முடிக்க பதிமூன்று ஆண்டுகள் ஆயின. 1653 ல் கோட்டை கட்டிமுடிக்கப் பட்டுவிட்டது.
 
அதற்குள்ளேயே ஆங்கிலேயர்களுக்காகத் தனிக்குடியிருப்புகள். இந்திய ஊழியர்களுக்கு (பிளாக் டவுன்) தனிமைப்படுத்தப்பட்டக் குடியிருப்புகள். வழிபடுவதற்கு அழகான சர்ச்-அங்கிருந்து அப்போது துவங்கியது சென்னை மாகாண நிர்வாகம்.
 
அடுத்தடுத்து டச்சுக்காரர்கள் படையெடுத்தார்கள். பிரெஞ்சுக்காரர்கள் தொடர்ந்து படையெடுத்து ஆக்கிரமித்தார்கள்.

ஆளுகிறவர்களின் ரசனைக்கேற்றபடி கோட்டையில் சிலச் சில மாற்றங்கள் நடந்தன. உள்ளே கட்டிடங்கள் பெருகிச் சுற்றுச்சுவர் கட்டி இப்போது நாம் பார்க்கும் தோற்றத்திற்கு ஜார்ஜ் கோட்டை வந்தது 1781-ல்.
 
ராணுவப் பிரிவுகளும், நீதித்துறையும் இங்கு செயல்பட்டாலும், !857க்குப் பிறகே நிர்வாகப் பொறுப்பு முழுவதும் கிழக்கிந்திய கம்பெனி வசம் வந்தது.
 
ஆங்கிலேய அரசு நிர்வாகத்தின் மூளையானது ஜார்ஜ் கோட்டை. அப்போது அவர்களுடைய புழக்கத்தில் இருந்த பெயர் ‘செகரட்டேரியட்’.
 
பல ஆட்சி மாற்றங்களைத் தொடர்ந்து சந்தித்திருக்கிற இந்தக் கோட்டை 1953ல் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டதும் திரும்பவும் மாற்றியமைக்கப்பட்டது. அண்ணாதுரை முதல்வரான பிறகே ‘செகரட்டேரியட்’ தலைமைச் செயலகம் என்றானது.
 
ராபர்ட் கிளைவ்விலிருந்து எத்தனையோ அதிகார மையங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிற இந்தக் கோட்டையைக் கைப்பற்ற அன்றிலிருந்து இன்று வரை இடையறாத எவ்வளவு போட்டிகள்! எத்தனை பிரயத்தனங்கள்!
 
தலைமைச் செயலகத்தையே புராதனமான இந்தக் கோட்டையிலிருந்து மாற்றவும் முயற்சி நடந்து அதையும் மீறி இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிற கோட்டையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று –இங்குள்ள கொடி மரம்.
 
கோட்டையின் வாசலுக்குள் நுழைந்தால் அதிகாரத்தின் விரலைப் போல வான் நோக்கிச் சுட்டும் இங்குள்ள கொடி மரத்திற்குத் தனிச் சிறப்பு. தனிக் கம்பீரம்.
காரணம்- அதன் 138 அடி உயரம்.
 
இவ்வளவு தூரத்திற்கு உயர்ந்து நிற்கிற கொடிமரம் உருவானதற்கும் சில ஆவணக்குறிப்புகள் இருக்கின்றன.
 
கி.பி. 1687 ல் சென்னை துறைமுகத்தில் தரைதட்டி நின்றுவிட்ட ‘அட்வெஞ்சர்’ என்ற கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட தேக்கு மரத்திலிருந்து உயர்ந்த கொடி மரம் உருவாக்கப்பட்டதாகச் சொல்கின்றன அந்தக் குறிப்புகள்.
 
எது எப்படியிருந்தாலும் இந்தியாவிலேயே உயரமான கொடிமரம் என்ற சிறப்பு அப்போதே கிடைத்துவிட்டது சென்னை கோட்டையில் உள்ள இந்தக் கொடி மரத்திற்கு.
 
கோட்டைக்கு மகுடம் சூட்டியதைப் போன்ற இந்தக் கோட்டையில் கொடி ஏற்றப்பட்டது 1687ல். ஏற்றியவர் ஆங்கிலேய ஆளுநராக இருந்தவரான ‘யேல்’. ஏற்றப்பட்டது ஆங்கில அரசின் கொடி.
 
ஆங்கிலேய அரசு அகன்ற பிறகு நம் மூவர்ணக் கொடி பறக்கிறது இந்தக் கம்பத்தில். ஆளுநர்களே இங்கு கொடியேற்றிக் கொண்டிருந்த சூழலை மாற்றியது தி.மு.க. அப்போதிருந்து விடுதலை நாளில் தமிழக முதல்வராக இருப்பவர்கள் தான் கொடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 
மாறாமல் இருப்பது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கொடி மரம் ஒன்று தான்.
 
அதில் பறக்கிற கொடிகளையும், ஏற்றுகிறவர்களையும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது காலம்.
 
மணா எழுதிய அந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள “தமிழகத் தடங்கள்” நூலிலிருந்து.
Comments (0)
Add Comment