“நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்” என்று பாட்ஷா படத்தில் ரஜினி பாடிய பாடல் மிகவும் பிரபலம்.
எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் எவ்வளவு பிரபலமானதோ அதே மாதிரியே ரஜினியின் ஆட்டோக்காரன் பாடலும் பிரசித்தம்.
இதேபோல், இன்றைய தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டே மற்ற நேரங்களில் ஆட்டோ ஓட்டுபவராக நடித்திருப்பார்.
ஆனால், தமிழ்நாடு முழுக்க சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பல லட்சம் எண்ணிக்கையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களை நாமும் நமது அரசும் எப்படி வைத்திருக்கிறோம்?
ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கிற தகவல்படி, சென்னையில் மட்டும் ஓடுகிற ஆட்டோக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம்.
இதில் ஏறத்தாழ 80 சதவீத ஆட்டோக்களை சில குறிப்பிட்ட நிறுவனங்கள் தான் அவர்களுடைய ஆப் மூலமாக இயக்கிக் கொண்டிருக்கின்றன.
அதாவது, வெளியில் எங்கோ இருந்து ஆப் மூலமாக ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதே ஒழிய ஒவ்வொரு ஆட்டோவிலும் பொருத்தி இருக்கிற மீட்டர் செயல்பட முடியாத அளவிலேயே இன்னும் இருக்கிறது.
கடைசியாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆட்டோ மீட்டர் கட்டணம் திருத்தப்பட்டது.
அதற்கு முன்பு சென்னை, அண்ணா சாலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் முழுக்க திரண்டு நடத்திய மாபெரும் போராட்டம் சென்னை நகரவாசிகளுக்கு நன்கு தெரியும்.
அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தியதன் விளைவாகத்தான் மீட்டர் கட்டணம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சிறிது உயர்ந்தது.
பக்கத்தில் உள்ள கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்டோவில் மீட்டர்கள் இயங்குகின்றன. அவற்றுக்கு சரியான கட்டணத்தை அரசே நிர்ணயித்திருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஆட்டோவை நம்பி இருந்தும், இங்கு தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து அதிமுக ஆட்சி, திமுக ஆட்சி என்ற இரண்டு ஆட்சிகளும் மாறி மாறி வந்தாலும் கூட ஆட்டோ கட்டணம் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி நிர்ணயிக்கப்பட முடியாத ஒரு நிலை உருவாகி இருக்கிறது.
உண்மையில் இந்த ஆட்டோ மீட்டர்கள் செயல்படாமல் போனதற்கு என்ன காரணம்?
பல ஆண்டுகளுக்கு முன்பு சில கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி டாக்ஸிகளை இயக்குவதில் ஒரு முன்னணியில் இருக்கின்றவோ அதே மாதிரி ஆட்டோக்களையும் அந்தக் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்க ஆரம்பித்தன.
அதுவரை ஆட்டோ மீட்டர்களை செயல்பட வைத்து இயக்கிக் கொண்டிருந்த பல்வேறு ஆட்டோ ஓட்டுநர்களும் வேறு வழியில்லாமல் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் இயங்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை உருவானது.
இன்னமும் கூட 20% ஆட்டோ ஓட்டுநர்கள் எந்தவிதமான கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்காமல், தமிழகத்தில் உள்ள பயணிகளை மட்டுமே நம்பி தங்களது ஆட்டோக்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற முதல்வர் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் அல்லது ஆதரவளித்திருக்கிறார்கள்.
இதை தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் ஆட்டோவில் பயணம் செய்யும் எந்த பயணியும் உணர முடியும்.
இவ்வளவு பரந்துபட்ட அளவில் இருக்கக்கூடிய ஆட்டோ ஓட்டுநர்களை ஒழுங்குபடுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வில் தலையிட வேண்டிய அவசியம். தற்போதைய தவெக அரசுக்கு இருக்கிறது.
பரந்தூர் விமான நிலையம் விஷயத்தில் எப்படி விவசாயிகள் பக்கம் சார்ந்து நின்ற அரசு, ஒரு முடிவு எடுத்து முடிவை எடுத்ததோ அதே மாதிரி தமிழகம் முழுக்க இருக்கிற பல லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை மையமாக முன்வைத்து, ஆட்டோ மீட்டர்களை மறுபடியும் இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்றபடி இயங்க வைப்பது தற்போதைய அரசின் முக்கியமான கடமை.
இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூபாய் 50 என்றும், அதற்கு மேல் செல்கிற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 15 ரூபாய் என்கிற அளவில்தான் மீட்டர் கட்டணத்தைத் திருத்துமாறும் தமிழகம் முழுக்க உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், சென்ற ஆட்சியில்கூட இத்தகைய வேண்டுகோளை அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த சிவசங்கரிடம் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த எளிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
இதுவரை அவர்கள் தொடர்ந்து தொழிற்சங்கம் மூலமாகவும், நேரடியாக அரசிடமும் தங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.
எவ்வளவோ பிரச்சினைகளில் மக்களின் சார்பில் நின்று அவர்கள் குரலுக்கு செவிமடுப்பதாக சொல்லும் தற்போதைய அரசு ஆட்டோ ஓட்டுநர்கள் விஷயத்திலும் தலையிட்டு இன்றைய காலசூழ்நிலைக்கு ஏற்றபடி தகுந்த மீட்டர் கட்டணத்தை நிர்ணயித்தால், தமிழகத்தில் உள்ள பல லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வில் அது ஒளியேற்றுகிற மாதிரியான ஒரு சூழலை ஏற்படுத்தும்.
அரசு இந்த நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது.
இதற்கான பதிலை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தான் பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
– லியோ