அதிகரித்து வரும் காய்ச்சல்கள்; என்ன செய்யலாம்?

எல்நினோ பாதிப்பு உருவாகி தமிழகத்தில் வெப்பநிலையும் பெய்யக் கூடிய மழை அளவும் அதிகரிக்கும் என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க, பற்றாக்குறைக்கு சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு ஜோதிடர்களும் தொடர்ந்து பீதியை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

இதில் ஒரு பிரபலமான ஜோதிடர், தமிழகத்தில் வரும் ஜனவரி 1-ம் தேதி அன்று கடலோரத்தில் வாழ்கிறவர்கள் எவ்வளவு பேர் பத்திரமாக இருப்பார்கள் என்று கடுமையான பீதியைக் கிளப்பி இருக்கிறார்.

இவற்றை எல்லாம் லட்சக்கணக்கானவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சுகாதாரத்துறை பன்றிக் காய்ச்சல் பரவுவது குறித்த எச்சரிக்கை விடுத்திருக்கிற நிலையில், எந்தளவிற்கு மக்கள் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

ஏற்கனவே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், உண்ணி காய்ச்சல் உள்ளிட்ட இதுவரை இல்லாத பல்வேறு விதமான காய்ச்சல்களும், தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி உருவாவதும், வயிறு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரிப்பதும் ஒருசேர நடந்து கொண்டிருக்கிறது.

ஆக வெயிலையும் மழையையும் அடுத்தடுத்து தாங்க முடியாத நிலையில், உடல் எதிர்வினை ஆற்றுவதைப் பரவலாக உணர முடிகிறது.

இதில் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கிறபடி, எந்த காய்ச்சல் வந்தாலும் பக்கத்தில் உள்ள மருந்து கடைகளுக்குச் சென்று சுயமாக குறிப்பிட்ட பிராண்டு மாத்திரைகளை அதிகமாக வாங்குவது அதிகரிக்கிறது.

ஏற்கனவே இதே பிராண்டு மாத்திரைகள் ஒரு கட்டத்தில் வாங்குவது அதிகரித்து, அதன் விற்பனை பல கோடி அளவுக்கு உயர்ந்ததை சில ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறோம்.

தற்போது மீண்டும் அதேநிலைக்கு போக வைத்துக் கொண்டிருக்கிறது சமீபத்தில் நிலவும் தட்பவெட்ப மாற்றம்.

அரசு சொல்கிறபடியே அருகிலுள்ள எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதற்கேற்ப முன் தயாரிப்பு நிலையில் மருந்துகள் இருக்கின்றனவா?

பலரும் அரசு மருத்துவமனைகளை மட்டுமல்ல தனியார் மருத்துவமனையை அணுகுவதும் அதிகரித்திருக்கிறது.

அதுவும் சென்னை போன்ற பெரு நகரத்திலுள்ள எந்த ஒரு தனியார் மருத்துவமனையிலும் வந்து சேர்ந்திருக்கிற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் நாம் அரசிடம் கேட்டுக் கொள்வது, தமிழகத்தில் முன்பிருந்த ஆட்சியைப் போல் அல்லாமல், நோய் பாதிக்குக் குறித்த விஷயத்தில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல், பாதிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவதே அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அப்படி அரசு சொல்லுகிற உண்மையான புள்ளிவிவரத்திற்கு ஏற்றபடி மக்கள் நடந்து கொள்வதற்கு பக்குவப்படுத்தும்.

இப்படிப்பட்ட வெளிப்படையான நிலையைதான் தற்போது எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

பேச்சு வழக்கில் டாக்டரிடம் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். அதுபோலவே டாக்டர்களாக இருப்பவர்களும் பொதுமக்களிடம் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்பதையே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

– லியோ

Comments (0)
Add Comment