தமிழக சட்டமன்றத்தில் அலசப்பட்ட சமூக நீதி!

சமூகநீதி – தற்போதைய அரசியல் களத்தில் பல கட்சித் தலைவர்களும் அடிக்கடி பயன்படுத்திவரும் அரசியல் கலந்த சொல்லாக இருந்துவருகிறது.

தமிழகத்தில் எந்த அளவுக்கு கிராமப்புறங்களில் சமூகநீதி உயிர்ப்போடு இருக்கிறது என்பதை அங்கு நேரில் சென்று பார்க்கக் கூடியவர்கள் கண்கூடாக உணர முடியும்.

திண்ணியம் துவங்கி வேங்கை வயல் உள்ளிட்ட கிராமங்களில் எப்படிப்பட்ட சாதிய மேலாதிக்கக் கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும், பல்வேறு ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டிருப்பதையும் இன்றுவரை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். 

தற்போது நடந்துவரும் தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டு நாட்களாக சமூக நீதித்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றபோது, சட்டசபையில் அவ்வப்போது ஏற்பட்ட அமளி பன்மடங்கானது. 

சமூகநீதித்துறை அமைச்சரான வன்னியரசு தமிழகத்துக் கிராமப்புறங்களில் எப்படிபபட்ட சாதிய மேலாதிக்கப் பார்வை இன்னும் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சில அனுபவங்களைப் பேசினார்.

நாங்கள் வெள்ளை வேட்டி கட்டுவதையும் காரில் போவதையும் கூட பொறுத்துக் கொள்ள முடியாத சமூகச் சூழல் நிலவுகிறது என்பதை சுய அனுபவத்தோடு அவர் பேச முயன்றபோது சட்டசபையில் பெரும் கூச்சல் எழுந்தது.

அந்த கூச்சலுக்கிடையே பேச முயன்று கொண்டிருந்த அமைச்சரான வன்னியரசு திரும்பத் திரும்ப தன்னை பேச அனுமதியுங்கள் என்று கேட்டுக் கொண்டபோது கூட அதை அனுமதிக்காத விதத்தில், பெரும் கூச்சல் சட்டசபையில் ஒலித்துக் கொண்டே இருந்தது. 

ஒரு கட்டத்தில் அமைச்சர் வன்னியரசு என்னை பேச விடாமல் தடுப்பதும் ஒருவித ஒடுக்குமுறைதானே என்று வெளிப்படையாகக் குரல் கொடுக்கும் அளவிற்கு சட்டசபையில் சமூகச் சூழல் மோசமானது.

இடையில தலையிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அமைச்சர் வன்னியரசை அமரும்படி சொன்னபோது, வேதனையுடன் அவர் உட்கார வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டது. 

இவையெல்லாம் சட்டசபை நேரடி ஒலிப்பரப்பில் பதிவான சில காட்சிகள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இவற்றை பார்க்கிறவர்கள் பலருக்கும் சமூக நீதித்துறை அமைச்சரை பேசவிடாத அளவுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை சட்டமன்றத்திலேயே நிகழ்ந்திருக்கிறது?

ஏன், தன்னுடைய சொந்த அனுபவத்தை சமூக நீதித்துறை அமைச்சர் சொல்வதைக் கூட குறிப்பிட்ட கட்சியினரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை?

ஒரு அமைச்சருக்கே சட்டசபையில் இத்தகைய கொடுமை நடக்கின்றது என்றால், தமிழகத்து கிராமப் புறங்களில் எத்தகைய கொடுமைகள் சாதிய மேலாக்கத்தில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன.

இதைப்போலவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகன் பேச முயற்சித்தபோது, அது தடுத்துநிறுத்தப்பட்டது

ஏன், இந்த மேலாதிக்க உணர்வு சட்டமன்ற வளாகத்திலேயே உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது? 

சமூகநீதி என்பது சமத்துவத்தைக் குறிக்கிற அருமையான சொல் தான். ஆனால், அந்த சொல்லுக்கான செயல்வடிவத்தைக் கொடுத்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி.

– யூகி

 
Comments (0)
Add Comment