ஆண்களைவிட பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?

மனிதனின் உண்மையான செல்வம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியமே ஆகும். இது குறித்த தேடல் அதிகரித்து வரும் இவ்வேளையில் போதிய விழிப்புணர்வு பெறுதல் மூலம் சிறந்த வாழ்க்கை தரத்தை பெற முடியும்.

இளமையில் துள்ளலுடன் காணப்படும் உடலானது, வயது ஏறும்போது பலவித மாற்றங்களுக்கு உள்ளாகிறது. ஒவ்வொன்றும் அந்தந்த வயதின் இயல்பு என்பதை புரிந்து கொண்டால் என்றைக்கும் உற்சாகம் குறையாமல் கடந்து செல்லலாம்.

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்திற்கு அடுத்தபடியாக பெரும்பாலும் மருத்துவர்களால் கேட்கப்படுவது தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதே.

வாகனங்களின் இயக்கத்திற்கு எரிபொருள் எப்படி உதவுகிறதோ அதேபோல இந்த சுரப்பியின் மூலம் தான் நம் உடலின் இயக்கம் சீராக நடைபெறுகிறது.

தைராய்டு என்பது கழுத்தின் முன் பகுதியில் குரல்வளைக்கும் கீழே உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ நாளமில்லா சுரப்பியாகும்.

இது Thyroxine மற்றும் Triodo Thyronine ஆகிய முக்கிய ஹார்மோன்களை சுரந்து உடலின் வளர்சிதை மாற்றம், ஆற்றல் பயன்பாடு இதயத்துடிப்பு மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்கு படுத்துகிறது.

நாம் சாப்பிடும் உணவை சக்தியாக மாற்ற இந்த ஹார்மோன்கள் உதவுகின்றன.

தவிர, மூளை மற்றும் தசைகளின் சீரான இயக்கத்தை பராமரிக்கும் பணியினையும் செய்கிறது.

இந்த சுரப்பு அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ ஏற்படுவது தான் தைராய்டு பாதிப்பு எனப்படுவது.

Hyper Thyroidism :

சுரப்பி தேவைக்கு அதிகமாக ஹார்மோனை சுரக்கும் நிலையாகும்.

நாடித்துடிப்பு அதிகரித்தல், காரணம் இன்றி எடை குறைதல், தூக்கமின்மை, பயம், படபடப்பு, அதீத வியர்வை, வெயில் தாங்க இயலாமை மற்றும் நடுக்கம் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள்.

உடலை குளிர்விக்கும் நெய், பால் மற்றும் குறிப்பிட்ட பழ வகைகள் முக்கிய உணவாக இதற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

Hypo Thyroidism :

சுரப்பி குறைவான அளவு ஹார்மோனை சுரக்கும் நிலையாகும்.

உடல் எடை அதிகரித்தல், தோல் தடிமன் ஆகுதல், சரும வறட்சி, குரலில் மாற்றம், உடல் பலவீனம், குளிரை தாங்க இயலாமை, மனச்சோர்வு ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள்.

செரிமானத்தை அதிகரிக்கச் செய்யும் இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் மஞ்சள் ஆகியவற்றை முக்கியமாக உணவில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

தைராய்டு பிரச்சனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

எனினும் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம் இந்த பாதிப்பு வருவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பகாலம், மாதவிடாய் காலம் போன்ற நேரங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தைராய்டு பாதிப்பு இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் வரக்கூடிய மரபணு காரணங்களும் உண்டு.

அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே இந்த சுரப்பி சரியாக செயல்படாமல் இருக்கக்கூடும்.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது தன்னைத்தானே தாக்கும் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது எளிதில் வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எளிமையான ரத்த பரிசோதனையின் வாயிலாக தைராய்டு பாதிப்பினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். நோயின் தன்மைக்கு ஏற்ப பெரும்பாலும் மாத்திரைகளின் மூலமே குணப்படுத்தி விட முடியும்.

முறையான மருத்துவப் பரிசோதனை, ஹார்மோன் மாற்று மற்றும் குறைப்பு மருந்துகள் மூலம் முழுமையான தீர்வை பெற முடியும்.

செலினியம் மற்றும் அயோடின் சத்துக்கள், தேங்காய் எண்ணெய், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய உணவுகள் ஆகியவை தைராய்டு இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன.

அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியவை.

மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகாசனம் மற்றும் மூச்சு பயிற்சிகள், ஆழ்ந்த உறக்கம் ஆகியவை தைராய்டை நிர்வகிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சியான வாழ்வுக்கும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட்டு நலம் பெறுவோம்.

S. வாணி

Comments (0)
Add Comment