இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான ஆரோக்கிய பிரச்சனையாக இருப்பது மூட்டு வலி.
இளையோர் முதல் முதியோர் வரை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீப காலமாக அனைவரும் இந்த பாதிப்புக்கு உள்ளாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நம் உடலில் உள்ள எலும்புகள் ஒன்றிணையும் இடங்களான முழங்கால், இடுப்பு, தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் விரல் இடுக்குகளில் கூட இந்த வலி ஏற்படலாம்.
மூட்டு வலி ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களையும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வோம். இது வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சினை இல்லை.
மிக அதிக வேலை அல்லது மிகக் குறைந்த வேலை என்றிருக்கும் எந்த வயதினரும் மூட்டு வலியை சந்திக்க நேரிடும்.
குழந்தைகளின் மூட்டுகள் இயல்பை விட அதிகமாக அசையக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால் நீண்ட நேரம் விளையாட்டிற்கு பிறகு வலி ஏற்படலாம்.
பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் கால்களில் பிடிப்பு போல வலி உண்டாகும். காலையில் இது இயல்பாகிவிடும்.
இவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தாத சாதாரண மூட்டு வலிகளாக கருதப்படுகின்றன.
வயது கூடும்போது மூட்டுகளில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்மானம் அடைவதால் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உரசி, வலி ஏற்படுகிறது. இது பொதுவாக முழங்கால்களை அதிகம் பாதிக்கும்.
பெரும்பாலும் 40 வயதை கடந்தவர்களே மூட்டு தேய்மானத்திற்கு அதிகம் உள்ளாகின்றனர். மெனோபாஸ் கட்டத்தைத் தாண்டிய பெண்களும் இதில் அடங்குவர்.
ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தல் காரணமாக அது மூட்டுகளில் படிந்து கடுமையான வலியை தோற்றுவிக்க கூடும்.
சிலருக்கு கால்களில் ஏற்படும் புண்கள் சரிவர கவனிக்கப்படாமல் தீவிரமாகி அப்பகுதியில் உள்ள மூட்டு பகுதி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் பத்து மணி நேரத்திற்கும் மேலாக ஒரே நிலையில் அமர்ந்தபடி பணிபுரிவதால் மூட்டு வலியின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
மூட்டுகளின் உறுதித் தன்மைக்கு அதன் இயக்கம் முதன்மையான காரணமாகிறது.
கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் ஏர் உழுதல், களை எடுத்தல், நாற்று நடுதல், கால்நடை பராமரித்தல் போன்ற, எலும்புகளையும் தசைகளையும் முழுமையாக இயக்கும் விதமான வேலைகளை செய்வது சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது.
ஆனால், நகரவாசிகளுக்கு முழு உடல் இயக்கத்திற்கான வாய்ப்புகள் இல்லாததால் தங்களின் நேரத்திற்கு ஏற்றவாறான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அனைத்து உறுப்புகளுக்கான இயக்கமும் சீராக இருக்கும் படியான பயிற்சி முறைகளை தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியமாகிறது.
அதே சமயம் வலுவை மீறிய வேலையையும் உடலுக்கு தருவதை தவிர்த்தல் முக்கியமாகிறது.
மத்திம வயதில் உள்ள சிலருக்கு, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது தனது சொந்த மூட்டு திசுக்களை தாக்கும். இது ஒரு auto immune disorder என்று அழைக்கப்படுகிறது.
இவை தவிர விபத்துகளால் ஏற்படும் காயங்கள், விளையாடும் போது ஏற்படும் சுளுக்குகள், ஒரே மாதிரியான இயக்கத்தை தசைகளுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருத்தல், நெகிழ்வுத் தன்மை குறைந்திருத்தல், போதிய ஓய்வின்மை, தசைத் திறனுக்கு மீறிய எடையை தூக்குதல், முறையற்ற உடற்பயிற்சி, குளிர்ந்த கால நிலை ஆகியவையும் மூட்டு வலிக்கு காரணங்களாக அமைகின்றன.
குறிப்பாக மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழிவது என்பது அதிகரித்து காணப்படுகிறது.
தசைகள் இறுக்கமாக இருக்கும் போது, லேசான அழுத்தத்திற்கே இவ்வாறு ஏற்படக்கூடும்.
மூட்டுகளின் பாதிப்பை பொறுத்து வலிகள் மாறுபடும். அவ்வாறு அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
வலியை குறைக்கும் மாத்திரைகள், வீக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள், காயத்தை ஆற்றும் களிம்புகள் ஆகியவை இதற்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
தவிர தசைநார் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், எண்ணெய் பசையை மூட்டுகளுக்கு வழங்கவும் சிறப்பு சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகின்றன.
இவை தவிர மூட்டு வலிக்கான சிகிச்சையில் இயன் முறை மருத்துவமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இது அறுவை சிகிச்சை அல்லாத அதிக மருந்துகளும் இல்லாத, இயற்கையான முறையில் வலியை போக்கவும் மூட்டுகளின் இயக்கத்தையும் மீட்க உதவுகிறது.
தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் தொடர்ச்சியான இயன் முறை பயிற்சியின் மூலம் பாதிப்பின் தீவிரத்தையும் தடுக்க முடியும்.
ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு மருந்து மாத்திரைகளின் மூலமே நோயை குணப்படுத்த இயலும். பலவித பாதிப்புகளோடு இயக்கமும் குறைந்து போனால் உடல் தகுதியை சோதித்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
எனவே இவை வருமுன் காப்பதற்கு கால்சியம் சத்து மிகுந்த கீரை, பால், முட்டை, மீன் போன்ற உணவுகளை உட்கொள்ளுதல், தினமும் 30 நிமிடம் இளம் வெயிலில் நின்று “வைட்டமின் டி” சத்தை பெறுதல்,
நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்தல், சீரான உடற்பயிற்சி செய்தல் ஆகிய வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் பொழுது மூட்டு பிரச்சினைகள் தடுக்கப்பட்டு, முதுமையிலும் சுறுசுறுப்பாக வாழ வழிவகுக்கும்.
S. வாணி