ஸ்பா – ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சி!

அழகும்  ஆரோக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

இவை ஒருவரின் தன்னம்பிக்கை, மனோதிடம், நேர்மறை சிந்தனை ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் விஷயமாக இன்று எல்லோராலும் பார்க்கப்படுகிறது.

பெண்கள் மட்டுமே அழகுபடுத்தி வந்த காலம் மலையேறி இன்று ஆண், பெண் என இருபாலருக்கும் பிரத்தியேக அழகு நிலையங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

தேக பராமரிப்பிலும் அழகை மேம்படுத்துவதற்கும் பல முறைகள் உள்ள போதிலும் இதில் முக்கிய ஒன்றாக விளங்கும் ஸ்பா பற்றி அறிந்து கொள்வோம்.

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஒரு ஆரோக்கிய சிகிச்சை முறையே ஸ்பா என்று அழைக்கப்படுகிறது.

பரபரப்பான வாழ்க்கையில், மன அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கு ஓய்வு தரும் இடமாக இவை விளங்குகின்றன.

ஸ்பா என்ற வார்த்தைக்கு நீரின் மூலம் செய்யப்படும் சிகிச்சை என்று பொருள்.

மேலும் பெல்ஜியம் நாட்டில் உள்ள ஸ்பா என்ற நகரத்திலிருந்த இயற்கை நீர் ஊற்றுகளின் பெயராலும் இது அழைக்கப்படுகிறது.

பழங்கால கிரேக்கர்கள், தங்களின் சோர்வை நீக்க இயற்கை நீர் ஊற்றுகளில் குளிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகை வகையான மசாஜ்கள் தான் ஸ்பாவின் அடிப்படை விஷயமாக உள்ளது.

சோர்வை நீக்கி உடனடி புத்துணர்வை அளிப்பதால், இது பிறவற்றை காட்டிலும் விலை அதிகம் உள்ள அழகு சிகிச்சையாக உள்ளது. அவரவரின் விருப்பம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப, 

வெவ்வேறு வகை மசாஜ்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

முழு உடலுக்கான மசாஜ்:

இதில் நறுமண எண்ணை பயன்படுத்தப்படுகிறது. மூலிகைகள் அடங்கிய சிறு துணி மூட்டையை வைத்து அழுத்தி, உடம்பில் ஒத்தடம் கொடுக்கப்படுகிறது.

விதவிதமான வகையில் அழுத்தம் தரும் பிரஷர் பைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

அதிலிருந்து மிதமான அழுத்தத்தில் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு, நாடி நரம்பைக் குளிர்விக்கிறது.

இப்படி தண்ணீர் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு ஹைட்ரோ தெரபி என்று பெயர்.

கண்ணாடி கூண்டுக்குள் படுக்க வைத்து நீராவி மூலம் அளிக்கப்படும் குளியல் முறையும் இதில் அடங்கும்.

Hot Stone சிகிச்சை முறை: 

எரிமலைகளில் இருந்து வெடித்து சிதறும் கற்களை வைத்து செய்யப்படுகிறது இந்த அழகு சிகிச்சை.

இந்த கற்களுக்கு volcanizing stones என்று பெயர். இதற்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் அதிகம் என்பதால் இதனை சூடு செய்து பயன்படுத்துகின்றனர்.

உடம்பில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் இதனை இளஞ்சூட்டில் வைத்து அழுத்தம் கொடுக்கின்றனர்.

குறிப்பாக முதுகுத் தண்டுவட வலியில் இருந்து நிவாரணம் பெற, இது பெரிதும் உதவுகிறது. உடல் வலியைப் போக்குவதில் சிறந்த சிகிச்சை முறையாகவும் இது கருதப்படுகிறது.

தாய் மசாஜ்:

தாய்லாந்து மசாஜ் முறையான இது, இந்தியாவிலும் பிரபலமடைந்துள்ளது.

இந்த முறையில் எண்ணெய் பயன்பாடு இருக்காது. ரத்த ஓட்டம் சீராக இல்லாத இடங்களில் அழுத்தம் கொடுத்து செய்யப்படும் இதனை dry மசாஜ் என்றும் கூறுவர்.

தாய்லாந்து நாட்டின் நிபுணர்களைக் கொண்டே பல இடங்களில் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. உடம்பு லேசானது போன்ற உணர்வைத் தருவதே இதன் சிறப்பம்சம்.

Foot மசாஜ் :

அனைத்து ஸ்பாவிலும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் இந்த சிகிச்சை முறையில், முட்டிக்கு கீழே இருந்து கால் பாதம் வரை மசாஜ் செய்யப்படுகிறது.

கைகளால் விதவிதமாக அழுத்தம் தரும்போது, சிலர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவர்.

உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளின் நரம்பு முடிச்சுகளும் பாதத்தில் போய் தான் முடிகிறது என்பதால் அந்தப் புள்ளிகளைத் தூண்டி விடுவதன் மூலம் உடல் இயக்கம் நன்றாக நடைபெறும். பெரும்பான்மை மக்களின் விருப்ப தேர்வாக இது உள்ளது.

விசேஷங்களுக்கான மசாஜ்:

திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளுக்கு செல்லும்போது சிறப்பாக தோற்றமளிக்க எல்லோரும் விரும்புவர். இதற்கென்றே தனிப்பட்ட மசாஜ் முறைகள் உள்ளன.

அரோமா ஆயில் என்று கூறப்படும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு உறுப்புக்கும் சிறப்பு சிகிச்சை செய்யப்படுகிறது.

ரோஜா இதழ்கள் மற்றும் நறுமண தைலங்களை வைத்து அளிக்கப்படும் பிரத்யேக குளியல் முறையானது மணப்பெண்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இவைத் தவிர, ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி மன அழுத்தத்தை குறைப்பது, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது, தூக்கமின்மை பிரச்சனையை நீக்குவது, தசைப் பிடிப்பு வலிகளுக்கு நிவாரணம் தருவது, நச்சுக்களை வெளியேற்றி சருமப் பொலிவை அளிப்பது என பல்வேறு நன்மைகளை இந்த ஸ்பாவின் மூலம் பெற முடியும்.

இது வெறும் ஆடம்பரம் மட்டுமல்லாது, ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் மீட்டெடுக்கும் முயற்சி என்பதால் இதனை உபயோகித்து பலன் பெறலாம்.

S. வாணி

Comments (0)
Add Comment