மெனோபாஸ் நாட்களை மென்மையாகக் கடக்கும் வழி!

ஒரு பெண் தன் வாழ்நாளில் பல்வேறுபட்ட உன்னதமான பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாகிறாள். அவளின் வாழ்வியல் பருவங்கள், வயது மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் பலவாறாகப் பிரிக்கப்படுகிறது.

குழந்தை, சிறுமி, கன்னி என பல நிலைகளும் அவளின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சியை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

பதின் பருவ வயதில் தொடங்கும் இந்த உயிரியல் செயல்முறை மத்திம வயதில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. இதையே மாதவிடாய் நிறுத்தம் அல்லது மெனோபாஸ் என்கிறோம்.

உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகிற இந்த விஷயம் என்னென்ன மாற்றங்களை அவர்களிடத்தில் கொண்டுவரும் என்றும் அதனை எதிர்கொள்ளும் அணுகுமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வோம்.

மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்வில் ஏற்படும் ஒரு இயல்பான உயிரியல் ரீதியான மாற்றமாகும். தொடர்ந்து ஒரு வருட காலம் மாதவிடாய் வராதபோது மெனோபாஸ் துவங்கிவிட்டது என்பதாகக் கருதப்படுகிறது.

இது பெண்களின் இனப்பெருக்கக் காலத்தின் நிறைவைக் குறிக்கிறது. பொதுவாக பெண்கள் 45 முதல் 55 வயதுக்குள் மெனோபாஸ் நிலையை அடைகிறார்கள்.

இந்தியப் பெண்களுக்கு இது சராசரியாக 46-ல் இருந்து 47 வயதிற்குள் நிகழ்கிறது. இந்த மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்து விடுவதில்லை. இது மூன்று முக்கிய நிலைகளை உள்ளடக்கியது.

முதல் நிலை :

மெனோபாஸ் தொடங்குவதற்கு முந்தைய காலமே முதல் நிலையாகும். இந்த நேரத்தில் உடம்பில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு ஏற்ற இறக்கத்துடன் குறையத் தொடங்குவதால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக மாறும்.

இரண்டாம் நிலை :

இறுதி மாதவிடாய் ஏற்பட்டு தொடர்ந்து 12 மாதங்கள் நிறைவடையும் கட்டமே மெனோபாஸ் என்று அழைக்கப்படும் இரண்டாவது நிலையாகும்.

மூன்றாம் நிலை :

மெனோபாஸ் வந்ததற்கு பிந்தைய காலமே மூன்றாவது நிலையாகும். இதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு குறைந்து கொண்டே போகும்.

இதுதான் பெண்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன்.

இதில் குறைபாடு வரும்போது உடல் பல்வேறு மாற்றங்களைச் சந்திக்கிறது.

இந்த நிலையில் கருப்பை சுருங்க ஆரம்பிக்கும். பெண் உறுப்பின் செல்கள் சிறிதாகி அந்தப் பகுதிகளின் ரத்த ஓட்டம் குறையும். சிலருக்கு சிறுநீர் பிரிவதில் எரிச்சல் ஏற்படும்.

தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைவாக இருக்கும். தோல் வறட்சியாகும்.

இதயக் கோளாறுகள் பொதுவாக ஆண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. ஆனால், மெனோபாஸ் காலகட்டத்திற்கு வரும் பெண்களுக்கு இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் இழப்பால் கால்சியம் குறைபாடு ஏற்படும். இதனை ஈடுகட்ட பல் மற்றும் எலும்புகளில் இருக்கும் கால்சிய சத்தை உடம்பு எடுத்துக் கொள்ளத் துவங்கும்.

எவ்வித காரணமும் இன்றி இந்த உறுப்புகள் ஏன் பாதிப்படைகின்றன என்ற பெரும்பாலானோரின் கேள்விக்கும் இதுவே பதிலாகும்.

எலும்புகளின் அடர்த்தி குறைந்து போவதால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கும் இது வித்திடும்.

ஆகையால், பயணங்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மேலும் உடற்பருமன், ஞாபகத்திறன் குறைதல், அதீத வியர்வை, பதட்டமான மனநிலை ஆகியவையும் உண்டாகக் கூடும். இந்த சிக்கல்கள் எல்லாம் நபருக்கு நபர் மாறுபடும்.

சிலர் இதற்கு தீர்வாய் செயற்கை ஹார்மோன்களை உடம்பில் செலுத்துவதும் உண்டு. ஆனால், இது தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இயற்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது என்ற கூற்றின்படி ஒவ்வொரு பெண்ணும் தகுந்த மருத்துவ அறிவோடு இதை அணுகும்போது மெனோபாஸ் பிரச்சனையை எளிதாக கையாளலாம்.

இதற்கு சமச்சீர் உணவு முறை, சீரான உடற்பயிற்சி மற்றும் சிறந்த மனநலம் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.

கால்சிய சத்து நிறைந்த பால், தயிர், மோர், பச்சைக் கீரைகள் ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்ளும்போது எலும்புகள் பலவீனம் அடைவது தடுக்கப்படுகிறது.

இந்த கால்சியத்தை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின் டி அவசியம் தேவை. காலை, மாலை சூரிய வெளிச்சத்தில் நிற்கும்போது இது எளிதாகக் கிடைத்து விடுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த விதைகள் மற்றும் சோயா பொருட்கள், ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை சமன் செய்கிறது.

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மொத்தத்தில் மெனோபாஸ் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் வரும் ஒரு புதிய அத்தியாயம்.

இந்த காலகட்டத்தில் உடம்பிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களை புரிந்துகொண்டு முறையான சுய பராமரிப்பு மற்றும் குடும்பத்தினரின் ஆதரவோடு எதிர்கொண்டால் இந்தப் பருவத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கடக்க முடியும்.

S. வாணி

Comments (0)
Add Comment