நவீன வாழ்வில் அதிகரிக்கும் வேலைப்பளுவில் இருந்து சற்றே இளைப்பாறுவதற்கும் இழந்த ஆற்றலை மீட்டு புத்துணர்ச்சி பெறுவதற்கும் நமக்கு உதவுபவை இசை மற்றும் நடனக் கலைகள்.
ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் நடனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
திருமணம் முதற்கொண்டு எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் தவறாமல் இவை இடம்பெறுகின்றன.
வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை போக்கும் மாமருந்தாகவும் இவை செயல்படுகின்றன.
பல்வேறு வகை நடனங்கள் தற்போது அறிமுகம் ஆகியுள்ளன. இவற்றில் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவது தான் ஜும்பா நடனம். இளைஞர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரும் விரும்பும் நடனமாக இது உருவெடுத்துள்ளது.
ஜும்பா என்பது லத்தின் அமெரிக்க இசை மற்றும் உடற்பயிற்சி அசைவுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சுவாரசியமான ஏரோபிக் நடனம் ஆகும்.
இது 1990- காலகட்டங்களில் கொலம்பிய நடனக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு, பின்பு உலக அளவில் பிரபலமாக தொடங்கியது.
ஹிப் ஹாப், முரங்கே, மாம்போ, சோகா, சல்சா, சாம்பா என பலதரப்பட்ட நடனங்களின் கலவைதான் ஜும்பா நடனம்.
ஆர்வம் கொண்ட எவர் வேண்டுமானாலும் கற்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.
குறிப்பாக பெண்கள் குடும்ப பொறுப்புகளின் சுமையால் தங்கள் சொந்த நலனை பராமரிக்க தவறுகின்றனர்.
குழந்தை பிறந்த பின்னர், தங்கள் மேல் தனிப்பட்ட அக்கறையும் செலுத்துவதில்லை.
இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிச்சுமையின் காரணமாக நேரம் தவறி உண்ணுதல், தூக்கமின்மை, உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களினால் தீவிரமான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
இத்தகைய அனைத்து தரப்பு பெண்களும் தங்களை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த வடிகாலாக ஜும்பா நடனத்தைத் தேர்வு செய்கின்றனர்.
இதில் பெரும்பாலும் துள்ளலான லத்தீன் இசை பயன்படுத்தப்படுகிறது. தற்போது பிராந்திய மொழிகளின இசையும் ஒலிக்கப்படுகிறது.
நடன அசைவுகள் மிகவும் எளிமையாக இருப்பதால் வயதானவர்களும் இதனை தயக்கமின்றி கற்றுக் கொள்ளலாம்.
ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக ஆடும் பொழுது 300 முதல் 500 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன. உடல் எடையைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.
தொடர்ச்சியாக இதனை மேற்கொள்ளும் பொழுது, சில மாதங்களிலேயே மாற்றத்தை உணர முடியும்.
பல பெண்கள் இணைந்து குழுவாக கற்கும் போது மன இறுக்கங்கள் நீங்கி ஆண்டு முழுமைக்குமான உற்சாகமும் ஆற்றலும் பெறுகின்றனர்.
பலவகை ஜும்பா நடனங்கள் அவரவரின் உடல்நலம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுகின்றன.
ஜும்பா கோல்ட்:
எளிய பயிற்சிகளை கொண்ட இவ்வகையானது, முதியவர்கள் மற்றும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவான அசைவுகளை கொண்டது.
ஜும்பா டோனிங்:
கைகளில் சிறிய எடைகளை கொண்டு செய்யப்படும் பயிற்சியான இது, தசைகளை வலுவாக்க உதவுகிறது.
ஜும்பா கிட்ஸ்:
சிறுவர் சிறுமிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வேடிக்கை விளையாட்டு கலந்த நடன பயிற்சி இதுவாகும்.
அக்வா ஜூம்பா:
நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் நின்று செய்யப்படும் நடன பயிற்சி. எடை குறைப்பிற்கும் மூட்டு வலிக்கும் இது தீர்வளிக்கிறது.
ஜும்பா சென்ட்டாவோ:
நாற்காலியை மட்டுமே பயன்படுத்தி செய்யப்படும் வலிமை பயிற்சி. உடல் திறனை அதிகரிக்க செய்கிறது.
மேலும் ரத்த ஓட்டம் சீர்படுதல், இதய நலம் காத்தல், தசைகள் வலுவடைதல், மன அழுத்தம் போக்குதல் என ஜும்பா நடனத்தால் ஏற்படும் நன்மைகள் ஏராளமாகும்.
சோர்வான உடற்பயிற்சிகளைக் கொண்டாட்டங்களாக மாற்றும் இதனைக் கற்று, மனதையும் உடலையும் ஒருசேர மகிழ்விப்போம்.
S. வாணி