துடிப்பான இளம் தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம்!

சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம் எனலாம்.

தங்களின் புதுப்புது சிந்தனைகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்தி தனக்கான பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கி விட்டனர்.

அந்த வகையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில், பல ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கியுள்ளன.

சில நிறுவனங்கள் தொடங்கிய வேகத்திலேயே மிகப் பெரும் இலக்கை முன்வைத்து நகர தொடங்கியிருக்கின்றன.

இத்தகைய ஒரு நிறுவனம்தான் Ippo Pay.

Google pay, Phone Pe, போன்று தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் பெரும் கோலோச்சுகிற பணப்பரிமாற்ற நிறுவனம் தான் Ippo Pay.

இதன் நிறுவனரான மோகன், தாமரைக்குளத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளியின் மகன்.

பள்ளிப் பருவத்தில் சராசரி மாணவனாக விளங்கியவர், பொறியியல் துறையில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.

பின்பு வலைதள வடிவமைப்பாளராக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய பதினைந்தே நாட்களில், திறமை இல்லாதவர் எனக் கூறி வெளியேற்றப்பட்டார்.

அந்த தருணத்தில் தான் ஒரு தொழில் முனைவோராக வேண்டும் என்று முடிவெடுத்து தனியாக அலுவலகம் அமைத்து வடிவமைப்பு பணியைத் தொடங்கினார்.

தன்னுடைய செயல் திறன் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக குறுகிய காலத்திலேயே லாபம் ஈட்டத் தொடங்கியவர், பெரிய நிறுவனர் ஒருவரால் பல்வேறு தொழில் வாய்ப்புகளை பெற்றார்.

அதே காலகட்டத்தில் வளர்ந்து வந்த Zoho, Freshworks போன்ற நிறுவனங்களைப் பார்த்து அடுத்தடுத்து அவர் ஆரம்பித்த ஏழு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தோல்வியைத் தழுவின.

அது தந்த படிப்பினையைக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர், அங்கிருந்த சிறு வியாபாரிகள், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இயலாத நிலையைக் கண்டு, அனைவரும் எளிதில் கையாளக்கூடிய மொபைல் கட்டண சேவையான Ippo Pay- யை 2020-ம் ஆண்டு துவக்கினார்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கொரோனா அலையின் காரணமாக நிறுவனம் முடங்கியது.

பெரும் போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் செயல்பட தொடங்கிய நிறுவனம், மூன்றே ஆண்டுகளில் இந்தியாவின் நான்காவது சிறந்த கேட்வே நிறுவனமாக உருவாகியது.

2022-ம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றது.

இன்று தமிழகம் முழுவதும் 5 லட்சம் வணிகர்கள் Ippo Pay-யை பயன்படுத்துகின்றனர்.

மாநிலம் தாண்டி தென்னிந்தியா முழுவதும் இதனை விரிவுபடுத்தும் நோக்கில் விரைந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம்.

பட்டதாரி இளைஞர்கள் பலரும் அவரவர் ஊர்களில் இருந்தே வேலை பார்க்கும் வாய்ப்பினையும் வழங்கியுள்ளது.

உடன் பயணிக்கும் ஊழியர்களுக்கு உதவும் பொருட்டு நிறுவனத்தின் 12 சதவீத பங்குகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போது 14,000 கோடி ரூபாய் ஆண்டு பரிவர்த்தனை செய்யும் ஆகப்பெரும் தமிழர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் இந்நிறுவனர் மோகன்.

மேலும், இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களையும் இணைக்கும் பாலமாக Ippo Pay-யை கொண்டு வரும் லட்சியத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் இவர், தமிழர்களின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

Comments (0)
Add Comment